##~## |
''அல்லா நாம பஜோ... மௌலா நாம பஜோ...''
-எந்த மனநிலையில் கேட்டாலும், கேட்பவரைத் தன் வசப் படுத்திக்கொள்கிறது முகுந்த்தின் குரல். கோகுல், முகுந்த், அரவிந்த், சின்மய்... அந்தக் குறுந்தகட்டில் உள்ள 16 பாடல் களில் ஒலிக்கும் அத்தனைக் குரல்களும் வசீகரிக்கின்றன. 'லிசன் டு மை ஹார்ட்’... 'தெய்வத் திருமகள்’ விக்ரம்போல வாழும் நிஜ 'கிருஷ்ணா’க்கள் இணைந்து பாடி வெளிவந்திருக்கும் இசைத் தொகுப்பு. முழுக்க முழுக்க ஆட்டிஸ குழந்தைகளே பாடி, ஒரு ஆல்பம் வருவது அநேகமாக இந்திய அளவில் இதுவே முதல் முறை!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''ஆட்டிஸ குழந்தைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அற்புதமான கொடை... இசை. இந்த முயற்சி அதை எல்லோருக்கும் சொல்லும்!'' என்கிறார் லக்ஷ்மி மோகன். முகுந்த், கோகுல், அரவிந்த், சின்மய்க்கு இசை ஆசிரியை இவர். ஆல்பத்தில் உள்ள அத்தனை பாடல்களையும் எழுதி, இசை அமைத்து இருப்பவரும் லக்ஷ்மியே!

''அவங்களுக்கு வயசு 6 ஆகவும் இருக்கலாம்... 60 ஆகவும் இருக்கலாம். ஆனா, மனசளவில் எப்போதுமே அவங்க குழந்தைங்கதான். ஒவ்வொரு ஆட்டிஸக் குழந்தையும் ஒரு தனி உலகம். 100 ஆட்டிஸ குழந்தைங்க இருக் காங்கன்னா, 100 பேரும் 100 விதமா இருப் பாங்க. அவங்கவங்க உலகத்துல தொடர்ந்து இயங்கிட்டே இருப்பாங்க. அதனால், திடீர்னு நீங்க ஒண்ணு சொன்னா, அவங்க ளால உடனே அதுக்கு ரியாக்ட் பண்ண முடியாது. புது ஆட்களையோ புது சூழலையோ அவ்வளவு சீக்கிரம் அவங்களால ஏத்துக்க முடியாது. அதுவும் பதின்பருவத்துல உடல்ல ஏற்படுற மாற்றங்கள் அவங்களை ரொம்பவே சங்கடமான மனநிலைக்கு ஆளாக்கிடும்.
இந்தப் பிரச்னைகளுக்கு நல்ல ஆறுதல்... இசை. பொதுவா, ஆட்டிஸ குழந்தைகளுக்குப் பேச்சு சரளமா வராது. கேட்கிறதைக் கவனிக்கிற திறன் குறைவா இருக்கும். ஆனா, எறும்புகள் ஊரும் சத்தம், பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் சத்தம்போன்ற மிக நுண்ணிய சத்தங் களை அவங்களால் கேட்க முடியும். திரும்பத் திரும்ப வர்ற வார்த்தை களும் மெட்டும் அவர்களை ரொம்ப வும் கவரும். இந்த அம்சங்கள்தான் ஆட்டிஸ குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளிக்கலாமேங்கிற எண் ணத்தை எனக்குள் எழுப்பின.

எனக்கு கர்னாடக இசை தெரியும். பயிற்சியை ஆரம்பிச்சதும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நான்

எதிர்பார்த்ததைவிடவும் குழந்தைங்க இசையில் ரொம்பவும் லயிச்சுப்போனாங்க. பஜன் பாடல்கள் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சது. அற்புதமாப் பாடினாங்க. இந்தப் பாடல்களை மற்ற ஆட்டிஸ குழந்தைகள் கேட்கும் போது அவங்களுக்கு இந்த இசை ரொம்ப நெருக்கமா இருக்கும்னு தோணுச்சு. 'லிசன் டு மை ஹார்ட்’ உருவான கதை இதுதான்!'' என்று புன்னகைக்கிறார் லக்ஷ்மி மோகன்.
சென்னையில் வரும் டிசம்பரில், முதல்முறையாக இந்தக் குழந்தைகளைக் கொண்டு 'லைவ் கான்சர்ட்’ நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார் லக்ஷ்மி மோகன். தெய்வீக இசை, திக்கெட்டும் தித்திப்பு பரப்பட்டும்!