Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிட்டில் இளவரவசனைத் தேடிச்செல்லும் சிறுமியின் பயணம் #TheLittlePrince

 

The Little Prince - தி லிட்டில் பிரின்ஸ் 1943-ம் ஆண்டு வெளியான பிரெஞ்சு குறுநாவல்.  Antoine de Saint-Exupéry எழுதிய இந்தப் புனைவு 300 மொழிகளில் வெளியாகி, 140 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. உலகிலேயே அதிகமாக அச்சேறிய நூல்களில் மூன்றாவது இடத்தைப் பெற்ற புத்தகம். விமானியான தெகுபெறி, இரண்டாம் உலகப் போரின்போது சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார். அந்தத் தனிமையில் அவர் மனம் உணர்ந்த விஷயங்கள் அடிப்படையில் எழுதிய நூல். பல்வேறு தொன்ம அடையாளங்களின் மூலம் மனித வாழ்வின் புதிர்களை எளிமையான தத்துவ பாணியில் சித்தரிக்கும் கதை.

இந்த நூலின் அடிப்படையில் பல தொலைக்காட்சி தொடர்களும் திரைப்படங்களும் உருவாகியிருக்கின்றன. 2015-ம் ஆண்டு வெளியான இந்த பிரெஞ்சு திரைப்படமும் அதில் ஒன்று. மூல வடிவத்தோடு இணைந்து சில சுவாரசியமான சேர்க்கைகளோடு இதன் திரைக்கதை அமைந்துள்ளது.

லிட்டில்


நகரில் உள்ள சிறந்த பள்ளியில் தன் மகளை எப்படியாவது சேர்த்துவிடும் பதற்றத்தில் இருக்கிறார் அவளது தாய். இதற்காக சிறுமியை நன்றாகத் தயார்படுத்துகிறார். ஆனால், பதற்றம் காரணமாக பள்ளியில் நிகழும் நேர்காணலில் சிறுமி தடுமாற, விடுமுறை நாட்கள் நிறைவதற்குள், அங்கு இடம்பிடிக்கும் ஆவேசத்துடன் சிறுமிக்கு மேலதிகமான கட்டுப்பாடுகளை உருவாக்குகிறார் அந்தத் தாய். அந்த ஆண்டு மட்டுமல்ல, சிறுமியின் ஆயுள் முழுக்க ஒவ்வொரு மணி நேரத்தையும் எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்கிற கறாரான அட்டவணை உருவாக்கப்படுகிறது. தாயின் உத்தரவுக்கேற்ப சிறுமியும் ஓர் இயந்திரமாக மாறுகிறாள். வெளியுலகம் என்ன என்பதைப் பற்றியும் விளையாடுவது என்றால் என்ன என்பதுகூட அவளுக்குத் தெரிவதில்லை.

ஒரு நாள்... 'பத்திரமாக இரு, வேளா வேளைக்குப் படி. நான் மாலை வருகிறேன்' என்று பணிக்கு கிளம்பிச் செல்கிறார் தாய். படித்துக்கொண்டிருக்கும் சிறுமியை 'டமால்' என்கிற சத்தம் பதறவைக்கிறது. பயத்துடன் வெளியில் வந்து பார்க்கிறாள். அவள் வீட்டுச் சுவரில் எதுவோ மோதி ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் வந்து பார்க்கிறார்கள். 'அந்தக் கிழவன் மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா?' என்று தங்களுக்குள் முணுமுணுக்கிறார்கள்.

சிறுமியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த வீடு. அங்கிருக்கும் ஒரு கிழவர் தன் வீட்டுக்குள்ளிருந்து வெளியேறுவதைப் பயத்துடன் பார்க்கிறாள் சிறுமி. உடனே போலீசுக்கு போன் செய்கிறாள். காவல்துறை அதிகாரி கிழவரிடம் விசாரிக்கிறார். 'என்னா பெரிசு, மறுபடியும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டியா?'

கிழவர் தடுமாற்றத்துடன், 'மன்னிச்சிடுங்க.. இதான் என்கிட்ட இருக்கு' என்று நாணயங்கள் நிரம்பிய ஒரு டப்பாவைத் தருகிறார்.

லிட்டில்


படித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் மேஜையில் ஒரு காகித ராக்கெட் வந்து விழுகிறது. சிறுமி பிரித்துப் பார்க்கிறாள். The Little prince கதையின் ஒரு பகுதி. பக்கத்து வீட்டுப் பைத்தியக்காரக் கிழவர்தான் அனுப்பியிருக்கிறார். சிறுமி அதை வாசிக்காமலேயே தூக்கியெறிகிறாள்.

கிழவர் அபராதமாகத் தந்திருந்த நாணயங்களை மறுநாள் கொட்டிப் பார்க்கிறாள். நாணயங்களுக்கு இடையில் சில பொம்மைகள் இருக்கின்றன. மரகதக்கல், கிளிஞ்சல், ரோஜா, விமானம். அதன் பிறகு... ஆம்! சிறிய இளவரசனின் உருவப் பொம்மை. குப்பைத் தொட்டியில் வீசியிருந்த கதையை எடுத்து வாசிக்கிறாள். இந்தப் பொருட்கள் எல்லாம் அந்தக் கதையின் பாத்திரங்களாக வருகின்றன.

கதையின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கிழவரின் வீட்டுக்குள் செல்கிறாள். பழுதடைந்து நிற்கும் விமானம் உள்ளிட்ட பல விநோதமான பொருட்களை விழிகள் விரியப் பார்க்கிறாள். கிழவரும் சிறுமியும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் எழுதிய கதையை வெவ்வேறு இடைவெளிகளில் சிறுமிக்குச் சொல்கிறார் கிழவர்.

சிறுமி பாடப்புத்தகங்களைப் படிக்காமல் கிழவரிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம் தாய்க்கு தெரிய வருகிறது. கடுமையான கோபத்துடன் சிறுமியைக் கண்டித்து, பாடத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறாள். ஆனாலும், கதையின் இறுதிப் பகுதியை அறியும் ஆவலில் கிழவரின் வீட்டுக்குச் செல்கிறாள் சிறுமி.

கதையில் விவரிக்கப்படும் சிறிய இளவரசன் இறந்துவிடுவது போன்ற சங்கேதக் குறிப்புடன் கதை முடிகிறது. ஆனால், அந்த முடிவு சிறுமிக்குப் பிடிக்கவில்லை. அவன் தனது குறுங்கோளுக்கு திரும்பிச் சென்று ரோஜாவுடன் இணைய வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். கதையின் குறிப்பு, கிழவரையும் பிரிவதற்கான அடையாளமாக அவளுக்குத் தோன்றுகிறது. 'நீங்களும் உங்க கதையும். என் விடுமுறை நாட்கள் வீணாகிவிட்டன' என்று கோபத்துடன் கத்திவிட்டு செல்கிறாள் சிறுமி.

லிட்டில்

விடுமுறையின் கடைசி நாள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் சிறுமிக்கு ஓர் அதிர்ச்சியான காட்சி கண்ணில் தென்படுகிறது. கிழவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவள் அருகில் போவதற்குள் வாகனம் சென்றுவிடுகிறது. அன்றைய நாளின் இரவு. சிறுமியால் தூங்க முடியவில்லை. சிறிய இளவரசனைப் பற்றியே அவளது நினைவு சுழன்றுகொண்டிருக்கிறது. கிழவரின் வீட்டுக்குச் செல்கிறாள். அவரைச் சந்திக்காத இடைவெளியில் குட்டி விமானம் பழுது பார்க்கப்பட்டு தயாராக இருக்கிறது. ஒரு தீர்மானத்துடன் விமானத்தை கிளப்பிக்கொண்டு பறக்கிறாள். சிறிய இளவரசனின் நிலைமையைத் தானும் கண்டறிந்து கிழவரிடமும் சொல்வதே அவளது நோக்கம்.

சிறுமியால் சிறிய இளவரசனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அவனுடைய நிலைமை என்னவாக இருந்தது? கிழவர் என்னவானார் என்கிற சுவாரசியமான காட்சிகளுடன் படம் நிறைகிறது. சிறுமி செய்யும் சாகசங்கள் ரசிக்கவைக்கின்றன.


இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த சூழலில் மக்கள் பல விதமான துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகி இருந்தார்கள். பல்வேறு உளவியல் சிக்கல்களும் மன வெறுமைகளும் நிறைந்திருந்தன. இதையொட்டி பல இலக்கிய ஆக்கங்கள் உருவாகின. அவற்றின் ஒரு நம்பிக்கைக் கீற்றாகவும், வாழ்க்கைப் புதிர்களின் மீதான சிந்தனையாகவும் 'சிறிய இளவரசன்' குறுநாவலைப் பார்க்கலாம்.

உலக நடைமுறை அனுபவங்கள் ஏதுமில்லாது வெற்றுக் கல்வியை மட்டும் மூளையில் திணிக்கும் சமகால விஷயத்தையும் குறுநாவலையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இதன் திரைக்கதை, சுவாரசியமாக உள்ளது. இரண்டு பகுதிகளின் காட்சிகளும் மாறி மாறி வருகின்றன. தன் வீட்டின் மேல் அமர்ந்திருக்கும் புறாக்களை, தண்ணீர் வீசித் துரத்தும் தாயின் குணாதிசயத்தின் மூலம் இயற்கையில் இருந்து விலகும் சமகால மனிதனின் அடையாளம், அந்த ஒற்றைக் காட்சியின் மூலம் துல்லியமாக உணர்த்தப்படுகிறது. இதற்கு எதிர்முனையில் கிழவரின் உற்சாகமான சித்திரம். ஆனால், சிறுமியைத் தவிர அவரை எவரும் புரிந்துகொள்வதில்லை.

சிறுமியின் இயந்திரத்தனமான வாழ்க்கை, கிழவர் செய்யும் குறும்புகள், விநோதங்கள், விமானியாக இருந்த அவருடைய கதையில் வரும் பாத்திரங்கள், ஒற்றை நபர் மட்டுமே வசிக்க முடியும் குறுங்கோளில் வாழும் சிறிய இளவரசன், இதர குறுங்கோள்களில் உள்ள நபர்களைச் சந்திப்பதற்காக அவன் செல்லும் பயணம், அங்கு ஏற்படும் அனுபவங்கள் என்று பலவிதமான சுவாரசியங்கள் இந்தத் திரைப்படத்தில் வெளிப்படுகின்றன.

குறுநாவலை வாசித்துவிட்டு பின்பு திரைப்படத்தைப் பார்த்தால், மேலதிகமாக ரசிக்க முடியும். ஆனாலும், அதுவொரு பெரிய தடையாகவும் இருப்பதில்லை. அனிமேஷன் திரைப்படங்களுக்கே சிறப்பான வண்ணங்களும் உருவங்களும் இந்தப் படத்தின் சுவாரசியத்தை அதிகமாக்குகின்றன.

- சுரேஷ் கண்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close