வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (19/04/2017)

கடைசி தொடர்பு:16:22 (19/04/2017)

தேன்மொழி முதல் ஹாசினி வரை... மறக்க முடியாத பெண் கேரக்டர்கள்! #CelebrateWomen

கேரக்டர்கள்

மிழ் சினிமாவில்  தன் வித்தியாசமான பாத்திரப் படைப்பால் மனதை கொள்ளை கொண்ட பெண் கேரக்டர்கள் எப்போதும் நினைவை விட்டு அகலமாட்டார்கள். நம் மலரும் நினைவுகளை மெதுவாய் மீட்டெடுக்கும் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்குள் கொஞ்சம் உள்நுழைந்துப் பார்ப்போமே!

thenmozhi

அச்சமில்லை அச்சமில்லை - தேன்மொழி

'உம்மட அழகப் பாத்தும் உம்மட பல்லு வரிசையைப் பாத்தும் கட்டிக்கிறலைய்யா... உம்மட சொல்லுக்கும் உண்மைக்கும்தான் உமக்கு பொஞ்சாதியா ஆனேன்யா...’ என்று கம்பீரமாய் ராஜேஷைப் பார்த்துப் பேசும் சரிதா, தேன்மொழியாக கனகச்சிதமாக நடித்திருப்பார். 'பொஞ்சாதிங்கிறவ அடுப்பங்கறையிலதான் இருக்கோணும். இன்னும் பச்சையா சொல்லணும்னா, நான் படுன்னா படுக்கணும்’ என்று மனைவியிடம் கட்டுப்பாட்டை விதிப்பவன் கணவனாக இருந்தாலும், தனக்கு மட்டுமில்லாமல் ஊருக்கே கேடு நினைக்கும் அவனை கடைசியாக கொலை செய்துவிட்டு கம்பீரமாய் நிற்கும் தேன்மொழி நேர்மையின் அச்சாரம்!

sundari

பூவே பூச்சூடவா - சுந்தரி

தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக தன் நிச்சயமற்ற வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் சுந்தரி, கிராமத்தில் இருக்கும் தன் பாட்டியுடனும், தெருக்குழந்தைகளோடும், அதே நேரத்தில் காதலோடு தன் பின்னால் சுற்றும் வாலிபரோடும் (எஸ்.வி.சேகர்)  அடிக்கும் லூட்டியை மறக்கவா முடியும். சாவு நிச்சயம் என்று தெரிந்த நிலையிலும் அதை கண்டு பயந்து போகாமல் வாழும் வாழக்கையை அனுபவித்துக் கொண்டாடும் ’எனர்ஜி’ சுந்தரியாக நடித்த நதியா போன்ற குறும்புப் பெண்கள் எப்போதும் துடிப்பானவர்களே!

divya

மௌனராகம் - திவ்யா

காதலித்தவனை கரம் பிடிக்க இயலாமல் வேறொருவனை திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மனம் கொள்ளும் போராட்டத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, அதை திருமணம் செய்து கொண்டவனிடம் மறைக்காமல் சொல்லிவிடும் திவ்யா துணிச்சல்காரிதான். மனதுக்கும் உடலுக்குமான பந்தத்தை பக்குவமாய் பதிவு செய்யும் பெண். கணவனே ஆனாலும் மனதில் பிரியம் இல்லாமல் இணைந்து வாழ முடியாது என்பதை மிக இயல்பாய் சுட்டிக்காட்டுவாள். காலம் நடத்திய கோலத்தில் வாழ்வின் புரிதலை பின் நிதர்சனத்தில் உணர்ந்து பெண்களின் மனதை பக்குவமாய் பறைசாற்றிவள். ரேவதிக்கு திவ்யா எப்போதும் பெஸ்ட்!

gouri

புதுவசந்தம் - கௌரி

இன்று இருப்பது போல 90 களில் ஆண்-பெண் நட்பு என்பது அத்தனை சாதாரணம் அல்ல. நான்கு ஆண்கள் தங்கி இருக்கும் ஒரு அறையில் ஒரு பெண் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாதுகாப்போடு தங்க முடியும் என்பதை பாலினம் கடந்த தன் தூய நட்பால் புரிய வைத்தவள் கௌரி.

நண்பர்களோடு தங்கி அவர்களின் வறுமையைப் பகிர்ந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சண்டை போட்டு... உலகை அவர்களின் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து  நண்பர்களை ஜெயிக்க வைக்கும் தோழியின் உறுதுணை... வரலாற்றுப் பதியம். கௌரியாக வாழ்ந்த தெத்துப்பல் சித்தாரா நட்பின் அடையாளம்.

kamali

காதல் கோட்டை - கமலி

பார்த்தமும் காதல் சொல்லிவிட்டு செல்போன், வாட்ஸ் அப் என ஓயாமல் காதல் பேசி ஓரிரு ஆண்டுகளுக்குள் பிரிந்து போகும் காதலர்களுக்கு மத்தியில் பார்க்காமலே காதல் வளர்த்தவள் ’கமலி’. தன் காதலனின் முகம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் கடிதம் மூலமாக மட்டுமே காதல் யாகம் வளர்த்தவள். உடல் என்னும் மாயையை நம்பாமல் உள்ளத்தின் ஆன்மாவை உயிருக்கு நிகராய் காதல் செய்தவள். ஆணின் அழகையோ பணத்தையோ பார்க்காத ’கமலி’ க்கு உயிர் கொடுத்த தேவயாணியின் காதல் கோட்டை எவர்கிரீன் கிளாசிக்!

dhanam

அழகி - தனம்

கணவனை இழந்து, குழந்தையுடன் சாலையோரத்தில் பிழைப்பு நடத்துபவளாக  சுழற்றியடிக்கும் வாழ்க்கை வாய்த்தவள் தனம். இளம் வயதில் தன்னை காதலித்த சண்முகத்தின் மீது மெல்லியதான காதலும், கூடவே பழைய நினைப்புகள் இருந்தாலும், அதை கொஞ்சமும் வெளிக்காட்டாமல், மிக கண்ணியமாக நடந்துகொள்ளும் தனம், திருமணமான சண்முகத்தின் வாழ்க்கைக்கு தன்னால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று, மொத்தமாக விலகிச் செல்வது காதலுக்கு அழகு. ஆண்களின் பால்ய காதல்களை, பிரியத்துடன் பேசும், ஏற்கும் இந்த சமூகம், பெண்களுக்கும் அதேபோன்ற நேசங்கள் உண்டு என்பதை நெருடல் இல்லாமல் ஏற்றுக்கொள்வதில்லை. அதைப் பேசாமல் பேசிச் செல்லும் தனத்திற்கு உணர்வு கூட்டும்  நந்திதா பலம்!

jhyothika

மொழி - அர்ச்சனா

குறை என்பது குறையே அல்ல, அதை குறை என்று நினைப்பது தான் குறை என பொட்டில் அடித்து சொல்லும் அர்ச்சனாவின் மௌனமொழி அழகோ அழகு!.  இசை என்றால் என்ன, அதை எப்படி ரசிப்பது, உணர்வது என்றுகூட அறிய முடியாத வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி  அர்ச்சனா. அவள் தன் குறைபாட்டை மறந்து, சுயபச்சாதாபத்தை தூர நிறுத்திவிட்டு, துடுக்கான, கொஞ்சம் திமிரான பெண்ணாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு. திரையில்  பார்க்கும் நமக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை பக்குவமாய் கடத்திவிட்டுப் போவாள். ஜோதிகாவின் பெயரை, மௌனம் கலைத்து சத்தம் போட்டு சொல்கிறாள், இந்த அர்ச்சனா.

hasini

சந்தோஷ் சுப்ரமணியம் - ஹாசினி

கள்ளம் கபடமில்லாத குழந்தை மனம். துள்ளும் இளமை ராணியாய் கல்லூரிக்குள் கலாட்டா செய்யும் குறும்புகாரி. தான் செய்யும் குறுப்புத்தனத்தாலே தன்னை விரும்பும் காதலனுக்கு நாளடைவில் அது பிடிக்காமல் போக, அப்போதும் தன் நிலையில் இருந்து மாறாமல் தன்னை அதே குழந்தை மனோபாவத்தில் இருந்து காதலனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பிடித்தவளாக்கும் ஹாசினி அன்பானவள். ஹாசினியாய் வந்த ஜெனிலியா  சாக்லேட் ட்ரீம் கேர்ள்!

 - பொன்.விமலா