வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (05/05/2017)

கடைசி தொடர்பு:15:58 (05/05/2017)

300-வது நாளை நோக்கி `கபாலி'... தியேட்டர் நிலவரம் என்ன...? #TheatreVisit

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டி, அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவானவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்த படம் `கபாலி'. தமிழகத்திலேயே மதுரை திருநகர் மணி இம்பாலா மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டரில்தான் இந்தப் படம் 290 நாள்களைக் கடந்து 300-வது நாளை நோக்கி ஓடுவதாக வந்த தகவல், நமக்கு மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

திரைப்படங்கள் நூறு, இருநூறு நாள்கள் ஓடும் தகவலை, இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். அப்போதெல்லாம், ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த் படங்கள்தான் அவ்வளவு நாள்கள் ஓடும். அதுவும் மதுரையில் அதிக நாள் ஓடும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான்.

கபாலி 300-வது நாளை


மதுரையின் சினிமா வரலாற்றில் கடைசியாக அதிக நாள்கள் ஓடிய படம் `கரகாட்டக்காரன்'. ஒரு வருடம் ஓடியது. அந்தப் படம் ஓடிய நடனா தியேட்டரும் இப்போது இல்லை; நடித்த ராமராஜனும் இப்போது சினிமாவில் இல்லை. அப்படிபட்ட சூழலில், `கபாலி' படம்  290 நாள்களைக் கடந்து ஓடும் செய்தி, நமக்கு வியப்பை ஏற்படுத்தியது.

சமகாலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் படங்களை ரிலீஸ் செய்வதாலும், இணையங்கள் வழியே படங்களைப் பதிவேற்றம் செய்து பார்ப்பதாலும், எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படமாக இருந்தாலும் ரிலீஸான முதல் ஒரு வாரம் ஓடினாலே போதும் என்ற மனநிலையில்தான் பெரும்பாலான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

படம் ரிலீஸான ஒரு மணி நேரத்தில் `விமர்சனம்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கழுவி ஊற்றிவிடுவதோடு படத் தயாரிப்பாளரோடு சவால்விட்டு இணையத்தில் வெளியிட்டுவிடுகின்றனர். இவற்றை எல்லாம் மீறி குறைந்தபட்சம் மூன்று நாள்கள், பத்து நாள்கள், மூன்று வாரம் ஓடினாலே போதுமென்று நினைக்கிறார்கள். அதிகபட்சமாக ஐம்பது நாள்கள் ஓடினால், அதுதான் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த படமாகவும் தற்போது அங்கீகரிக்கப்படுகிறது.

kabali


இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலத்தில் எல்லாம் எந்தப் படம் நூறு நாள்கள் ஓடுகிறதோ, அதுவே வெற்றிப் படமாகக் கொண்டாடப்படும். 175 நாள்கள் என்றால் வெள்ளி விழா, 250 நாள்கள் என்றால் பொன்விழா, 300 நாள்கள் என்றால் வைர விழா என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர். இதுபோன்ற வெற்றி விழாக்களில் வாங்கிய ஷீல்டுகளைத் திரையரங்க ஷோகேஸில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் `கபாலி' திரைப்படம் மதுரைத் திரையரங்கில் மட்டும் 300-வது நாள்களை நோக்கி ஓடுவது ஆச்சர்யம் என்று சொல்வதைவிட சாதனை என்றே சொல்லலாம்.

நாளிதழ் விளம்பரத்தைப் பார்த்து, நமக்கும் `கபாலி'யைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் ஏற்பட்டது. 290-வது நாளான மே முதல் தேதி அன்று திருநகர் மணி இம்பாலா மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குக்குச் சென்றோம். அங்கு மொத்தம் மூன்று ஸ்க்ரீன்கள் உள்ளன. `பாகுபலி' பட விளம்பரங்களுக்கு இடையே `கபாலி' பட பேனரையும் வைத்திருந்தனர். மணி இம்பாலா மெலடியில் ஓடுவதாக விளம்பரம் செய்திருந்தார்கள்.


டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்று `` ‘கபாலி'க்கு டிக்கெட் கொடுங்கள்’’ என்றேன்.

‘`இல்லை, இப்போது `பாகுபலி'தான் மூன்று தியேட்டர்களிலும் ஓடுகிறது’’ என்றார்.

‘`அப்ப, `கபாலி' எந்த ஷோ போடுவீங்க?’’ என்றோம். 

‘`உள்ளே போய் ஆபீஸ்ல கேளுங்க’’ என்றார்.

தியேட்டர் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த தியேட்டர் ஊழியரிடம், ‘` `கபாலி' படம் எப்ப போடுவீங்க?’’ என்றோம்.

அவர் நம்மை மேலும் கீழும் பார்த்தபடி, ``இப்ப `பாகுபலி'தான் ஓடுது. இன்னும் சில நாள்கள் கழித்து `கபாலி' ஓடும்’’ என்றவர், ‘`எத்தனை பேர் `கபாலி' பார்க்க வார்றீங்க?’’ என்று கேட்டார்.

‘ஏன்?’’ என்றோம்.   

‘`அதிகமான பேர் வந்தீங்கன்னா,  ஷோ ஓட்டுவோம்’’ என்றார்.

‘’அப்படியா, நான் எங்கள் நண்பர்களிடம் கேட்டு போன் மூலம் கன்ஃபர்ம் செய்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு,  அங்கிருந்து கிளம்பினேன். கூட்டம் வந்தால் மட்டும் படம் போடுவதாகச் சொல்வது தியேட்டர் நிர்வாகிகளைப் பொறுத்தவரையில் நியாயமான முடிவுதான். நஷ்டத்துக்கு யாரும் தொழில் செய்ய மாட்டார்கள். அதே நேரம் ஓடாத படத்தை ஓடிக்கொண்டிருப்பதாக விளம்பரம் செய்து, மக்கள் மத்தியில் போலியான இமேஜை உருவாக்குவது மோசடி என்பது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை?


 படங்கள் : வீ.சதீஷ்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்