“கமலைவிட இயல்பான நடிகன் ரஜினி!'' - பாரதிராஜா லாஜிக் #VikatanExclusive

பன்னாட்டுத் திரைப்படப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நீண்டநாள் கனவு. மதுரையில் தொடங்க வேண்டும் என நினைத்திருந்தவர், சென்னையில் தமிழ் வருடப் பிறப்பன்று  ‘பாரதிராஜா பன்னாட்டுத் திரைப்படப் பயிற்சி நிறுவனம்' என்ற பெயரில் தொடங்கினார். விழாவில், அவரால் அறிமுகமான அத்தனை ஹீரோயின்களும் தவறாமல் ஆஜர்.  சிறப்பு விருந்தினர்களாக ரஜினியும் கமலும் கலந்துகொண்டனர்.               

இந்த நிகழ்ச்சியில் நிறைவாகப் பேச வந்த ரஜினி, ‘பாரதிராஜாவை முதல்ல ‘பாரதி‘ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். அப்புறம் அவரோட வயசை இளையராஜா சொன்னதும் `பாரதி சார்’னு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ பாரதிராஜாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுறவங்க எல்லோருக்கும் அவரோட உண்மையான வயசு தெரிஞ்சா, அப்படியே சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுந்துடுவீங்க. பாரதிராஜாவுக்கு, என்னை கொஞ்சம் பிடிக்கும்... கொஞ்சம் பிடிக்காது.

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி பத்திரிகைகள்ல வெளிவந்த பேட்டிகளைப் படிச்சாலே இந்த உண்மை புரியும். அதாவது ‘ ரஜினி சாரை பற்றி என்ன நினைக்கிறீங்க?'னு கேள்வி கேட்டாங்க. ‘ரஜினி ஒரு நல்ல மனிதன்'னு சொன்னார். ‘ரஜினி சார் கேரக்டர், நடிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?’னு அடுத்து கேட்டாங்க. ‘ஹி இஸ் குட்மேன்’னு மட்டும் பதில் சொன்னார் பாரதிராஜா'’ என்று ரஜினி பேசப் பேச அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. 

இயக்குநர் மணிரத்னத்தின் சிஷ்யன் இயக்கிய ‘படைவீரன்‘ திரைப்பட நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா கலந்துகொள்வதாக அறிவித்திருந்தனர். ஏனோ அவர் வரவில்லை. அந்த அளவுக்கு ‘பாரதிராஜா பன்னாட்டுத் திரைப்படப் பயிற்சி நிறுவன'ப் பணிகளில் பரபரப்பாக இருந்த பாரதிராஜாவை அவரது கல்லூரியில் சந்தித்தோம். அப்போது ‘உங்கள் திரைப்படக் கல்லூரித் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினி, ‘பாரதிராஜாவுக்கு என்னை மனிதனாகக் கொஞ்சம் பிடிக்கும்... நடிகனாகக் கொஞ்சம் பிடிக்காது’ என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்வியை அவர் முன்னால் வைத்தோம். 

ரஜினி பாரதிராஜா

‘‘ எம்.ஜி.ஆரும் சிவாஜியும் திரைப்படங்கள்ல போட்டிபோட்டு நடிக்கிற காலத்துல ‘சிவாஜி பிரமாதமாக நடிக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நடிக்கவே தெரியவில்லை'னு விமர்சனம் பெரும்பாலானவர்கள் மத்தியில் உலவியது. அதன் பிறகு கால மாற்றத்தில் ‘சிவாஜி ஓவரா ஆக்ட் பண்றார். எம்.ஜி.ஆர்-தான் எதார்த்தமாக நடிக்கிறார்’னு பேசினாங்க. அதுபோல இப்போது ‘கமல்தான் சிறப்பா நடிக்கிறார். ரஜினிக்கு அவ்வளவா நடிக்கத் தெரியலை’னு ஒரு கருத்து சொல்றாங்க. பிற்காலத்துல ‘கமல் ஓவரா நடிக்கிறார். ரஜினிதான் இயல்பா நடிக்கிறார்’னு  கருத்து சொல்லும் காலமும் வரும்.

திரைப்படப் பயிற்சித் தொடக்க விழாவுல நான் முன்னாடியே  பேசிட்டேன். இறுதியாகத்தான் ரஜினி பேசினார். அதனாலத்தான் அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியலை. பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதையில் உருவான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்' ரெண்டு படங்களிலுமே ரஜினி தனது இயல்பான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.  ரஜினி நடிப்பு குறித்து அந்த நிகழ்ச்சியிலேயே  பதில் சொல்லியிருப்பேன்... விழாவில் டென்ஷனாக இருந்ததால், ரஜினி பேச்சுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சினிமா நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் நானும் ரஜினியும் விரைவிலேயே சந்திப்போம். அப்போது ரஜினி நடித்த படங்களில் அமைந்துள்ள அவரது இயல்பான, எதார்த்தமான நடிப்பு குறித்து ரஜினி முன்னாடியே பேச இருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார் பாரதிராஜா.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!