வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (11/05/2017)

கடைசி தொடர்பு:21:05 (11/05/2017)

‘‘என் ஒளிப்பதிவை இயக்குவது என் அம்மாதான்!’’ - ‘காற்று வெளியிடை’ ரவிவர்மன் #MothersDay

அம்மா

ஞ்சை தரணியில் உள்ள நெற்களஞ்சிய குக்கிராமத்தில் பிறந்தவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். அன்னையர் தினத்துக்காக தன் அம்மா பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ரவிவர்மன்.

'' அம்மா இறந்த போன சமயம் அது. பக்கத்து வீட்டுல திருமண வைபவம் நடந்துட்டு இருந்தது. அங்க படம் பிடிக்க வந்த வீடியோகிராபர் அம்மாவை படம் பிடிச்சதா கேள்விப்பட்டு அவரைப் பார்க்க ஸ்டூடியோவுக்குக் கிளம்பினேன். அப்பதான் எனக்கு வீடியோ, கேமரா எல்லாம் அறிமுகமாச்சு" என்கிறவர் இன்று கோலிவுட்டில் தடம் பதித்து சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்ற பெருமைக்குரியவர்.

அம்மா
  


''அம்மா படத்தை வாங்க போனப்ப அவரோடது அவுட் ஆஃப் போகஸ்ல இருந்ததை பார்த்து மனசு ஒடைஞ்சு போச்சு. மனசை திசைதிருப்ப அங்கிருந்த வீடியோ சாமான், கேமரா பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன். ஒரு கட்டத்துல வாழ வழி தெரியாம தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். அப்ப என்னை போலீஸ் கைது பண்ணினாங்க. அந்த சம்பவம்தான் எனக்கு வாழ்க்கையோட ருசியை கத்துக் கொடுத்தது.

 சின்ன வயசுல இருந்து எனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கிறது எங்கம்மாதான். அம்மா எப்படி இருப்பாங்கன்னா... களையிழந்த முகமும், கருமை படிஞ்ச கண்களுமா விரக்தியா, வேதனையானு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும் அவங்க முகம். ஆனா அந்த முகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பா இறப்புக்குப் பிறகு எங்களை தன் உலகமா நினைச்சு வாழ்ந்தவர். அவர் மகிழ்ச்சியா இருந்தோ, வாய்விட்டு சிரிச்சோ நான் பார்த்ததில்லை. தனி மனுஷியா எங்களை வளர்க்க அவங்க பட்ட பாடு வார்த்தைகள்ல வடிக்க முடியாது. அவங்களை அவளோப் பிடிக்கும். அம்மான்னாலே அவங்க கண்டிப்புதான் நியாபகத்துக்கு வரும்.

அம்மா

இன்னைக்கு நான் ஒரு அப்பா. எங்கம்மாவோட கண்டிப்பும், அன்பும் இப்போதான் புரியுது. நான் வளார்ந்ததும் எங்கம்மாவை நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அந்த கொடுப்பினை எனக்கு வாய்க்கலை. நான் சாதிக்கிறப்ப என்கூட அவங்க இல்லாதது என் துரதிருஷ்டம். ஒரு கண்ணை மூடி இன்னொரு கண்ணால பிரேமை பார்க்கிறப்ப என்னை இயக்குறது என் அம்மாதான்.  அவங்களை நினைச்சு நான் எழுதின கவிதையை சொல்றேன்.

எங்கம்மாவை நினைத்து நான் எழுதிய கவிதை:

என் தந்தையை தாய் சுமந்தாள்

பல இரவில்

என்னை தான் சுமந்தாள்

கரு அறை இரவில்

நான் அவளை சுமந்தேன்

ஒரு பகலில்

அதுவும் நான்கு பேர் துணைகொண்டு

அவளோட கடைசி நாள் மட்டுமே’ .

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்