மும்மொழியில்... ரூ.500 கோடியில்... உருவாகிறது 'ராமாயணம்'! | Ramayana to be made in 3 languages with a whopping budget of 500 crore rupees

வெளியிடப்பட்ட நேரம்: 03:02 (12/05/2017)

கடைசி தொடர்பு:09:08 (12/05/2017)

மும்மொழியில்... ரூ.500 கோடியில்... உருவாகிறது 'ராமாயணம்'!

 இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை தமிழ், தெலுங்கு மற்றும்  இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சினிமாவாக எடுக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா மற்றும் மது மன்டேனா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனராம்.

 தயாரிப்பாளர்களில் ஒருவரான அரவிந்த், 'ராமாயாணத்தை சினிமாவாக எடுப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆனால், இருப்பதிலேயே சிறந்த வழியில் வெள்ளித்திரையில் ராமாயணம் கூறப்பட வேண்டும். நாங்கள் மிகச் சிறந்த படைப்பை உருவாக்குவதில் முனைப்போடு இறங்கியுள்ளோம்' என்று நம்பிக்கை ததும்பக் கூறியுள்ளார்.

இன்னொரு தயாரிப்பாளரான நமித், 'என் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைகள் சினிமாவில் இருந்திருக்கின்றன. இப்போது, ராமாயணக் கதையை சினிமாமூலம் கூறுவதற்கு மிகவும் சரியாக இருக்கும். அதைச் சாத்தியப்படுத்துவதற்கான கலைஞர்கள் நம்மிடம்  இருக்கிறார்கள். இந்தியாவின் மிக உன்னதமான கதையை உலகுக்குக் கூறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்காது'' என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படத்துக்கான பட்ஜெட் பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லையென்றாலும், திரைப்படக் குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள், கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.