என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

பொருள் சென்னை!

துள்ளுது மீன்... துடிக்குது ஆள்!டி.எல்.சஞ்சீவிகுமார்,படங்கள் : என்.விவேக்

##~##

சில மாதங்களுக்கு முன் மழை பெய்து ஓய்ந்த ஓர் ஈர இரவு... திருவொற்றியூர் விம்கோ காலனி டாஸ்மாக் பாரில் இரவு 8 மணிக்கே பிளாக்கில் சரக்கு விற்கிறார்கள் என்று அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. '10 மணிக்கு மேல்தானே பிளாக்கில் விப்பாங்க. இதென்ன புது அடாவடியா இருக்கு!’ என்று டாஸ்மாக் அதிகாரிகள் குறிப்பிட்ட பாரில் ரெய்டு அடித்தார்கள். ஆனால், உள்ளே சென்றவர்கள் மறுநாள் காலை 8 மணி வரை வெளியே வரவில்லை. மாமூல் வாங்க மறுத்த அவர்களின் ஆடைகளை உருவி நிர்வாணமாக்கி பாரின் ஒரு மூலையில் இரவு முழுதும் உட்காரவைத்து, விடிந்தவுடன் விரட்டி இருக்கிறார்கள் பார் 'நிர்வாகி’கள்!

 மறு நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரை வாங்க மறுத்த  காக்கிகள், ' 'தம்பி’யைப் போய் பாருங்கய்யா!’ என்று வழி காட்டினர். 'கடவுள்’ அமைச்சரின் 'தம்பி’தான் அங்கு நாட்டாமை. கப்சிப் எனத் திரும்பினர் அதிகாரிகள்!

பொருள் சென்னை!

இன்னொரு சம்பவம்... காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருக்கும் ரேஷன் கடை அரிசி, கெரசின் உள்ளிட்ட பொருட் களைக் கடல் வழியே கடத்துவதாகப் புகார். சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவரை கடையின் விற்பனையாளர் உள்ளே அழைத்துச் சென்று பேரம் பேசினார். அதிகாரி மசியவில்லை. உடனே அதிகாரியை மடக்கிப் பிடித்து அவருடைய இரண்டு மணிக்கட்டுகளையும் கயிற்றில் கட்டி, ஒரே வெட்டாக மணிக்கட்டுகள் இரண்டையும் துண்டாக்கி பைக்குள் பார்சல் செய்து கொடுத்து அனுப்பினார். சம்பவம்பற்றி வாய்மொழிப் புகார்கூட இல்லை!

இரண்டு சம்பவங்களுக்கே ஈரக்குலை துடிக்கிறதா? ஆனால், வட சென்னைக்கு இது வாடிக்கை. பணம், பதவி, சொகுசு, செல்வாக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பான சூழல் என உயர்தர மிடுக்கோடு விளங்கும் தென் சென்னைக்கு அருகில், வறுமையும் வழியும் குருதியுமாகக் கிடக் கிறது வட சென்னை. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும் பனைமரக் குடிசைகளும் அருகருகே இருப்பது மாதிரி!

பொருள் சென்னை!

வார்த்தைகள் தொடங்கி வாழ்க்கைத் தரம் வரைக்கும் வட சென்னை பூசி இருக்கும் அடையாளம் தனி ரகம். 'ரெண்டு நிமிஷம்தான்ப்பா நின்னேன். அதுக்குள்ள பூட்டானுங்க’ எனக் கிழிபட்ட பாக்கெட்டைத் தடவியபடியே தவிக்கிற குரல்களுக்கு வட சென்னையில் குறைவு இருக்காது. அதே நேரம், அழுக்கும் அன்பும் கலந்து கட்டும் வாஞ்சையான வாழ்க்கைக்கும் அங்கு பஞ்சம் இல்லை. படகுத் துறையில் அமர்ந்து தாயம் உருட்டுபவர்களும், தெருவோரங்களில் கேரம்போர்டு விளையாடுபவர்களும், பந்தயப் புறாக்கள் வளர்ப்பவர்களும், காத்தாடி விடுபவர்களும், அரைக்கால் சட்டையோடு டாவு இழுப்பவர்களையும் நின்று பார்க்கத் தோன்றுகிறது. யாரையும் சட்டையே செய்யாமல் இருக்க வரம் வாங்கி வந்தார்களோ என்னவோ... அவரவர் வேலை அவரவர்களுக்கு என ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலை வாராத ஆட்களைப்போலவே தெருக்களும் அழுக்கைச் சுமந்துகிடக்கின்றன. சாக்கடைகளைச் சட்டை செய்யாமல் சமையல்... சாண் இடம் கிடைத்தாலும் தலைவைத்துப் படுக்கை.  கொண்டாட்டமோ... திண்டாட்டமோ... எதையும் அவர்கள் இறக்கிவைக்கிற இடம் கடற்கரை. 'போட்டக் கட்டு’ என்கிறபடி படகைக் கடலுக்குள் செலுத்தி உற்சாகத்தை ஏற்றிக்கொள்கிறார் கள். அதன் பிறகு அவர்களின் மனதில் முளைக்கும் எண்ணம் எதுவாக இருந்தாலும், அதற்கேற்ற மூடுக்கு செட்டாகிவிடுவார்கள்.    

எண்ணூர் தொடங்கி ராயபுரம் பனைமரத் தொட்டிக் குப்பம் வரை 80-க்கும் அதிக மான மீனவர் குப்பங்கள். பாய்மரப் படகில் இருந்து வெஸல் எனப்படும் மீன் பிடிக் கப்பல்கள் வரை தொழிலில் இருக்கும் ஏரியா இது. திங்கட்கிழமை காலைகளில் மட்டும் சுமார்

பொருள் சென்னை!

50 கோடி  வர்த்தகம் நடக்கும் காசிமேடு துறைமுகத் தில். மறு பக்கம் திருவொற்றியூர் கன்டெய்னர் கார்ப்பரேஷனில் மறைமுகமாக நடக்கும் கடத்தல், திருட்டு, மாமூல் எனத் தினமும் கோடிகளில் பணம் புரளும். கேடி, கோடி, வறுமை, வயிறு ஒட்டிய வாழ்க்கை என முற்றுமுரணான வாழ்வியலே வட சென்னை யின் அடையாளம்.  

எப்படி உருவாகிறார்கள் ரவுடிகள்?

'சின்னப்பய சேட்டையைக் காட்டிட்டான்’ என்கிற அளவுக்குப் படிக்கிற வயதிலேயே 'சாமான்’ சேகரிக்கிறார்கள் பையன் கள். அரசு இயந்திரம் என்கிற ஒன்று அந்தப் பக்கம் இயங்குகிறதா என்பதே கேள்வி. அந்த அளவுக்குப் பாரா முகமும் பகீர் ரகமுமாக வன்மம் காட்டுகிறது வட சென்னை!

அந்தக் காலத்தில் வட சென்னையின் கிராமங்களில் வர்த்தகம் உள்ளிட்ட நல்லது கெட்டதுகளைக் கவனிக்க நாட்டுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். திருவொற்றியூர் தொடங்கி ராயபுரம் வரை மொத்தம் 18 கிராமக் குப்பங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவர். இதை ஐக்கியப் பஞ்சாயத்து சபை என்பார்கள். இவர்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரு ஐக்கியப் பஞ்சாயத்துத் தலைவர். தேர்தல் எல்லாம் கிடையாது. இவர்களுக்கு என தனி சட்ட திட்டங்கள். மீன்பிடி, கன்டெய்னர் கார்ப்பரேஷன் என மொத்த வர்த்தகமும் இவர்கள் கண் அசைவில்தான்.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. முதல் முறையாக ஆட்சி அமைத்தபோதுத£ன், இதில் மாற்றம் ஏற்பட்டது. பழைய தலைவர்கள் தூக்கப்பட்டார்கள். மறுத்தவர்கள் 'கவனிக்க’ப்பட்டார்கள். அ.தி.மு.க-வினர் மட்டுமே தலைவர் பதவி களில் அமர்ந்தார்கள். அப்புறம் நிகழ்ந்த முட்டல் மோதல்களுக்குப் பிறகு வருடத் துக்கு ஒரு தலைவர் என்று முடிவாகி, தலைவர் பதவிக்கு ஏல நடைமுறை வந்தது. அப்போது காசிமேடு துறைமுகத் தலைவர் பதவி மட்டும் ஏலம் போன தொகை

பொருள் சென்னை!

50 கோடி. பிற்பாடு தி.மு.க. வந்தது... அ.தி.மு.க. வந்தது. மாறி மாறி ஆண்டார்கள்; பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்தக் கறை இல்லாத கரன்ஸி கட்டுக்களைப் பார்ப்பது அபூர்வமானது.  

அப்போது இந்தத் தலைவர்களின் தளபதிகளாக உருவானவர்கள்தான் 'மாலைக் கண்’ செல்வம், 'அசால்ட்’ ரவி, மாயாண்டி குடும்பத்தார், 'சி.ஜி.காலனி’ ரவி, சொரிக் குப்பன், நாட்டு ரகு போன்றோர். அதற்கு முந்தைய தலைமுறை வடிவேல் மற்றும் பாக்ஸர் வடிவேல். வெகு சமீபம் வரை இவர்களின் ஆதிக்கம் தான் ஒவ்வொரு விஷயத்திலும்.  

மாயாண்டிக் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமல், வட சென்னைப் பகுதிகளில் சினிமா ஷூட்டிங் நடத்த முடியாது. நிலக்கரி டீலிங் சொரிக் குப்பன் வசம். சாதாரண விஷயம் இல்லை இது. கப்பல்களில் ஏற்றி இறக்கும்போது கடலில் கொட்டும் நிலக்கரி சுமார் 69 கி.மீ தொலைவுக்கு கடற்கரையில் டன் கணக்கில் கரை ஒதுங்கும். கடலிலும் மிதக்கும். அதை அள்ளி வந்து விற்கும் 'உரிமை’க்கு அடிதடி வெட்டுக் குத்தே நடக்கும். தினமும் லட்சங்கள் கொட்டும் தொழில். டாஸ்மாக் மொத்தத்தையும் முக்கியப் பிரமுகரின் தம்பி ஒருவர் அசால்ட்டாக இருந்தவரின் கட்டுப்பாட்டில் விட்டு இருந்தார். இவர்கள் மட்டுமே பார் ஏலம் எடுக்க முடியும். இவர்கள் வைத்ததுதான் சட்டம்.

பொருள் சென்னை!

அடுத்து டீசல் தொழில். கரையில் இருந்து ஃபைபர் படகு நிறைய அரிசி, காய்கறி, மீன், இறால் போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 50 கி.மீ தொலைவில் இருக்கும் வெளிநாட்டுக் கப்பல்களுக்குச் செல்வார்கள். அங்கு பண்டமாற்றமாக டீசல் கிடைக்கும். படகுகளின் அடிப் பகுதியில் இருக்கும் 200 லிட்டர் கொள்ளவுகொண்ட டேங்குகளில் டீசல் நிரப்பப்படும். இப்படி ஒரு ட்ரிப்புக்கு 2,000 லிட்டர் டீசல் வரை கைமாறும்.

இவை எல்லாம் தம்மாத்துண்டு பிசினஸ் என்பதுபோல பிரமிப்பூட்டுகிறது தங்கம், வெள்ளி, அபின், ஹெராயின், ரிவால்வர் போன்ற பொருட்களின் பண்டமாற்றம். இந்த படா பிசினஸ், ரவுடிகள் வசம் வருவது இல்லை. வெஸல் வைத்திருக்கும் ஏற்றுமதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்கிறார்கள். 'மட் கிராப்’ எனப்படும் பெரிய வகை நண்டின் வயிற்றில் ஹெராயின், அபின் போன்றவற்றைத் திணித்துக் கடத்துவார்கள். இந்த வகை நண்டின் வயிற்றில் வைக்கப்பட்டால் மட்டுமே அந்தப் போதைப் பொருளின் தன்மை மாறாமல் இருக்குமாம். கேழல் பாறை என்கிற கட்டா மீன் வயிற்றில் நிறைய இடம் இருக்கும். இதில் தங்கம், வெள்ளிக் கட்டிகள், ரிவால்வர் போன்றவை இடம் பிடிக்கும்.

இந்தக் கடத்தலை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாது. ஒரு பெட்டி யில் நீலம், சிவப்பு, கறுப்பு நிறங்களில் 25 முதல் 40 நண்டுகள் வரை வைத்து இருப்பார் கள். இதில் இரண்டு அல்லது மூன்று நண்டில் மட்டுமே சரக்கு இருக்கும். இப்படி, நூற்றுக்கணக்கான பெட்டிகள். எந்தப் பெட்டியில், எத்தனையாவது வரிசையில், எந்த நிற நண்டில் சரக்கு இருக்கிறது என்பது குருவிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கஸ்டம்ஸை பல்க்காகக் கவனித்துவிடுவதால், அப்படியே கண்டுபிடித்தாலும் பிரச்னை வராது!

கொலை செய்யும் கலை!

30 ஆண்டுகளுக்கு முன் ரவுடி வடிவேல் கொலை தொடங்கி கடைசியாக கொல்லப்பட்ட பாபா பாஸ்கர் கொலை வரைக்கும் எல்லாமே அதிபயங்கர டெரர் குற்றங்கள். சடலத்தை மீன் வலையில் சுற்றி, பெரிய கோணிப் பையில் போட்டு சுமார் 200 கிலோ கருங்கற்களோடு சேர்த்துத் தைத்து, துறைமுகத் துவாரத்தில் கடலுக்குள் அமிழ்த்திவிடுவார்கள். சுனாமியே வந்தாலும் சடலம் வெளியே வராது. அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் மிகுந்திருக்கும் என்பதால், பிண நாற்றம் என்ற பிரச்னையும் இல்லை.

தவிர, கொலை செய்யப்பட்டவரின் உடலை, படகில் மீன்களைப் பாதுகாக்கும் ஃப்ரீஸர் பெட்டியில் பதுக்கிவிடுவார்கள். அல்லது கடலுக்குள் 100 கி.மீ தாண்டிக் கொண்டுபோய், சுறாக்கள் உலவும் பகுதியில் உடலைத் துண்டு துண்டாக்கி வீசிவிடுவார் கள். இதில் எலும்புகூட மிஞ்சாது. கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஏரியாவில் நடக்கும் கொலைகள் இன்னும் திகில் ரகம். கொலை செய்துவிட்டு, உடலைத் தரையில்கிடத்தி கிரேன் மூலம் கன்டெய்னரை உயரத்துக்குத் தூக்கி ஏழெட்டு முறை உடல் மீது போடுவார்கள். உடல் தரையோடு தேய்ந்து உருத்தெரியாமல் போய்விடும்.

'ஆளைக் காலி செய்ய வேண்டாம். ஆனால் ஆயுசுக்கும் நரக வேதனை கொடுக்க வேண்டும்!’ என்று வரும் அசைன்மென்ட்டுகளுக்கு வேறுவிதமான ட்ரீட்மென்ட். இதற்காகவே ஈர மணலில் 'உருப்படி’களை (கொலைக் கருவிகள்) ஊறப்போட்டு இருப்பார்கள். தொட்டாலே காயப்படுத்தும் நிலையில் துருவேறி இருக்கும். நடு வயிற்றில் செருகாமல் பக்கவாட்டில் லேசாகச் செருகி சில நிமிடங்கள் ஊறவிட்டு எடுப்பார்கள். உயிர் போகாது. ஆனால், இதற்குப் பதில் உயிரே போயிருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு ஆயுசுக்கும் ரணப்படுத்தும். திசுக்களில் ஒட்டிக்கொண்ட துரு எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் உடல் முழுக்கப் பயணித்து முடமாக்கும்!

மன்னர் காலத்து ஸ்டைலில் விஷம் தடவிய குறுவாளில் கொல்லும் கூலிப் படையினரும் உண்டு. இன்னொரு வகை ஸ்லோ பாய்ஸன். ஒரு காலத்தில் 'மாலை’ நேர அசைன்மென்ட்களில் கொடி கட்டிப் பறந்த ஒரு ரவுடி, ஸ்லோ பாய்ஸன் செலுத்துவதில் கில்லாடி. இப்போது அவனது மனைவியே துரத்தி அடிக்க, குப்பங்களில் பைத்தியம்போல திரிந்து வருகிறான் அவன். கொலை, கற்பழிப்பு என ஏகத்துக்கும் ஆடியவனை, கடந்த ஆட்சியில் சரண்டர் சலுகைகள் காட்டி நைச்சியமாக வரவழைத்தார் அந்த முறுக்கு மீசை அதிகாரி. வந்தவனுக்கு ஸ்லோ பாய்ஸன் ஏற்றி அனுப்பிவிட்டார்!

இன்றும் இரவு நேரங்களில் துறைமுகப் பகுதிகளில், போலீஸார் ஒருவர், இருவர் என்று ரோந்து வர மாட்டார்கள். 10 பேருக்குக் குறையாமல்தான் ரோந்து வருவார்கள். அதுவும் பிரதான சாலையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே ரோந்து இருக்கும். படகு கட்டும் ஜெட்டி பக்கம் செல்லவே மாட்டார்கள்.

ஆளும் கட்சியின் முக்கிய நாயகர் ஒருவர் சமீபத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களை 18 ஐக்கியப் பஞ்சாயத்துத் தலைவர்களாக நியமித்துள்ளார். நிழல் அரசாங்கத்தின் மறு சீரமைப்பு வேலைகள் சத்தம் இல்லாமல் நடந்து வருகின்றன.

அனைத்து ரகசியங்களையும் ஆழ் கடலில் புதைத்துக்கொண்டு அலையடிக்கிறது வங்காள விரிகுடா!