Published:Updated:

ரெபேக்கா புரூக்ஸ்

சார்லஸ்

ரெபேக்கா புரூக்ஸ்

சார்லஸ்

Published:Updated:
##~##

ரெபேக்கா புரூக்ஸ்... இங்கிலாந்து அரசியலில் புயல் கிளப்பி இருக்கும் அதிரடி மீடியா பெண்மணி. இங்கிலாந்து அரசியலை அதிரவைத்த, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தின் முக்கியப் புள்ளி இவர்தான். ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசில் முதல் பெண்மணியாக நுழைந்து, சாம்ராஜ் யத்தின் லகானை இறுக்கிப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி, இன்று 43-வது வயதில் சிறை வாசலையும் தொட்டு இருக்கும் ரெபேக்கா புரூக்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது!

 இங்கிலாந்தின் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் ரெபேக்கா. சிறு வயதில் இருந்தே பத்திரிகையாளர் கனவுடன் சுழன்ற ரெபேக்காவுக்கு, அந்தக் கனவு சுலபத்தில் கைகூடவில்லை. கல்லூரிப் படிப்பை முடிக்காத ரெபேக்கா, 'தி போஸ்ட்’ என்னும் பத்திரிகையில் அலுவலகச் செயலராக வேலைக்குச் சேர்ந்தார். அலுவலகத்தில் உற்சாகமாகப் பேசிப் பழகி, அவர்களிடம் இருந்து நாசூக்காக செய்திகளைக் கவர்ந்தார். ரெபேக்காவின் திறமையைக் கண்டு வியந்த 'தி போஸ்ட்’ பத்திரிகையின்

ரெபேக்கா புரூக்ஸ்

ஆசிரியர், அவரை நிருபராகப் பதவி உயர்த்தினார். தினமும் 75 லட்சம் பேர் படிக்கும், உலகிலேயே அதிகம் விற்பனை ஆன நம்பர் ஒன் ஆங்கில நாளிதழான 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ பத்திரிகையில் நிருபர் ஆகும் வாய்ப்பு ரெபேக்காவைத் தேடி வந்தது. தினமும் தேடி அலைந்து பகீர் திகீர் ஸ்கூப் நியூஸ்களை அள்ளிக்கொண்டு வந்தார். செய்திகளைச் சேகரிக்க எந்த எல்லைக்கும் சென்றார். 1994-ம் ஆண்டு டயானாவின் கள்ளக் காதலரான ஜேம்ஸ் ஹெவிட்டை லண்டனில் உள்ள ஹோட்டல் அறையில் தனிப்பட்ட முறையில் சந்திக்க ஏற்பாடு செய்து, அந்த அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி ஹெவிட்டின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெபேக்காதான். தொடர்ந்து பத்திரிகையில் அதிரடிச் செய்திகளை எழுதி, இங்கிலாந்து அரசியலில் அனல் கிளப்பிய ரெபேக்கா, 32-வது வயதில் அதாவது, 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து 11 வருடங்களில் அதன் ஆசிரியர் பதவியை எட்டிப் பிடித்தார்.

2000 முதல் 2003-ம் ஆண்டு வரை 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ பத்திரிகையின் ஆசிரியராகவும், 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை 'தி சன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய ரெபேக்கா, அதன் பிறகு நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆக உச்சகட்டப் பதவியில் அமரவைக்கப்பட்டார். 2000-ம் ஆண்டில் 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, தொலைபேசி ஒட்டுக்கேட்பு கலாசாரத்தைத் துவக்கிவிட்டார் ரெபேக்கா. அரசியல்வாதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், நடிகர் - நடிகைகள் வரை அனைவரது தொலைபேசிகளையும் ஆள் வைத்து ஒட்டுக்கேட்டு அம்பலப்படுத்தினார். நடிகர் - நடிகைகளின் அந்தரங்கம் முதல் அரசியல்வாதிகளின் செல்போன் இன்பாக்ஸ் எஸ்.எம்.எஸ்-கள் வரை அனைத்தும் பத்திரிகையில் பிரசுரம் ஆகின. ''காவல் துறை உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்துத்தான் ஸ்கூப் செய்திகளை வாங்குகிறோம்!'' என்று பகிரங்கமாகவே  அறிவித்தார் ரெபேக்கா.

'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, சிறுமிகளைக் கற்பழிக்கும் கும்பலுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் விழிப்பு உணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார் ரெபேக்கா. சாரா என்னும் சிறுமியைக் கற்பழித்தவருக்கு எதிராகப் போராட ஆரம்பித்த ரெபேக்கா, தினமும் தனது பத்திரிகையில் 'உங்கள் ஏரியாவில் இவர் பீடோஃபில்’ (pedophile - குழந்தைகள் மீது பாலியல் மோகம்கொள்பவர்!) என்று பெயரிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையில் பெயர் வெளிவந்த நபர்களை பொதுமக்கள் ஓட ஓட அடித்தார்கள். மக்கள் மத்தியில் பத்திரிகையின் செல்வாக்கும் உயர்ந்தது.

ரெபேக்கா புரூக்ஸ்

ரெபேக்கா, முதலில் ராஸ் கெம்ப் என்னும் நாடக நடிகரை 2002-ம் ஆண்டு திருமணம் செய்தார். மூன்று வருடங்கள் கழித்து, 'என்னை அடித்தார்’ என்று அவரது கணவர் ராஸ் போலீஸில் புகார் கொடுத்தார். மீடியா செல்வாக்கு காரணமாக வழக்கில் இருந்து வெளியே வந்து ராஸிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். 2009-ம் ஆண்டு ரேஸ் குதிரைப் பயிற்சியாளர் சார்லி ப்ரூக்ஸைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், தற்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் போன்ற டாப் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் கலந்துகொண்டார்கள்.

டோனி ப்ளேர், கார்டன் பிரவுன், டேவிட் கேமரூன் என இங்கிலாந்தின் மூன்று பிரதமர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் ரெபேக்கா வைத்திருந்தார் என்று எல்லாம் செய்திகள் உலவின. ''நான் பிரதமராக இருந்தபோது, என் மகனுக்கு சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என்னும் நோய் இருப்பதை பத்திரிகையில் வெளியிடப்போவதாக புரூக்ஸ் சொன்னார். அதை எண்ணி அப்போது குடும்பத்தோடு அழுதுகொண்டு இருந்தேன்!'' என்று இப்போது வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் கார்டன் பிரவுன்.

தனி மனுஷியாக மீடியாவில் நுழைந்து, அசுர பலம் காட்டினாலும்... தவறான அணுகுமுறையால் இப்போது தலை குனிந்து நிற்கிறார் ரெபேக்கா புரூக்ஸ்!