என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மரணம் தப்பினால் மரணம்!

எஸ்.கலீல்ராஜா

##~##

சாமா பின்லேடன், அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப் படை வீரர்களால் கொல்லப்பட்டபோது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இப்படி அறிவித்தார். ''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்குமோ... அதைச் செய்து முடிக்கும்!'' ஒபாமாவின் இத்தனை உறுதியான பேச்சுக்குக் காரணம்... சீல்!      

 கடல், காற்று, நிலம் என்று மூன்றிலும் அதிவேகமாகச் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு அதிரடிப் படைதான்... சீல். Sea, Air, Land ஆகியவற்றின் சுருக்கம்தான் SEAL. இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட அனுபவங்களால், எதிரி - நண்பன் எனப் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் குறித்து யோசித்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, வியட்நாம் போரின்போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீல். மூக்கை நுழைப்பது என்பது அடுத்த நாடுகளின் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டும் அல்ல. படுகொலை, சதித் திட்டங்கள் செய்வதன் மூலம், அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதும்கூட. பிற நாடுகளின் எல்லைப்புறத்தில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்துவது, எதிரி நாட்டு முக்கியத் தலைகளைக் காலி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீல், பின்னாட்களில் தீவிரவாதிகளைக் கொல்வது, போதைக் கடத்தல்காரர்களைப் போட்டுத் தள்ளுவது, பணயக் கைதிகளை விடுவிப்பது, விமானக் கடத்தலைத் தடுப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டு அதிரடிப் படைகளையும்விட சீல் வீரர்களுக்கு மிக மிகக் கடினமான பயிற்சி கொடுக்கப்படும்.

மரணம் தப்பினால் மரணம்!

முதல் பயிற்சி, தண்ணீரில் ஆரம்பிக்கும். நீச்சல் குளத்தில் தரை மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிறுகளுக்கு அடியிலேயே நீந்துவது முதல் பயிற்சி. ஆழ்கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் நீந்துவது உச்சகட்டப் பயிற்சி. வெறும் ரப்பர் படகில் துடுப்பைப் போட்டு அலையை எதிர்த்துக் கடலுக்குள் செல்ல வேண்டும். அடிக்கின்ற அலைக்கு படகில் இருந்து பல தடவை தூக்கி எறியப்பட்டாலும் இலக்கை அடையாமல் கரை திரும்பக் கூடாது. பாறைகளில் மோதாமல் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது அவரவர் பொறுப்பு. தோல்வியடைந்து திரும்பினால், கடும் தண்டனை காத்திருக்கும். அலையில் சறுக்கிக்கொண்டே (sea surfing) கரையில் இருக்கும் இலக்கைத் துல்லியமாகச் சுட வேண்டும். ஆழ்கடலில் பயிற்சி அளிக்கும்போது, கமாண்டர் ஒருவர் சத்தம் இல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூடிகளைக் கழற்றி விடுவார். பதற்றப்படாமல் அதை மாட்டி, இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆக்ஸிஜனைச் சுவாசித்து மேலே தப்பித்து வர வேண்டும். கிட்டத்தட்ட உயிர் போய் உயிர் வரும். முடியவில்லை என்றால் மயங்கியதும் ஆக்ஸிஜன் கொடுத்து மேலே கூட்டி வந்து, 'போய்ட்டு வா தம்பி!’ என்று துரத்திவிடுவார்கள். 1,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் ரப்பர் படகோடு கடலில் குதித்து, அதில் கரைக்குப் போய் காரியத்தை முடித்து, மீண்டும் கடலில் வந்து தண்ணீர் தொட்டுப் பறக்கும் ஹெலிகாப்டரில் படகை லோட் செய்யும் வரை சீல் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு சாகசமும் ஜேம்ஸ்பாண்ட் படக் கதாசிரியர்களால்கூடக் கற்பனை செய்ய முடியாதவை!

நிலம் என்பதைப் பனிமலை, பாலைவனம், காடு, பள்ளத்தாக்கு, சுரங்கம் என்று பிரித்துப் பயிற்சி கொடுப்பார்கள். பனிமலையில் மிகக் குறைந்த உடைகளோடு உயிர் பிழைக்க வேண்டும். முடியவில்லை என்றால், சக வீரரை நிர்வாணமாகக் கட்டிப்பிடித்து வெப்பம் ஏற்றிக்கொள்ள வேண்டும். சுரங்கத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலோடு இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். தண்ணீர்தீர்ந்து விட்டால், தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள். இப்படி சீல் வீரர்க ளுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் எல்லாமே மரண விளையாட்டுகள்தான்.

மரணம் தப்பினால் மரணம்!

ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்க அனுமதி. அதிலும் நின்றுகொண்டே தூங்கவும் பயிற்சி கொடுப்பார்கள். சீல் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் நாடுகளின் பூகோள அமைப்புகள் தெரியும். விமானம்  இயக்கத் தெரியும். அதில் இருந்து குதிக்கத் தெரியும். படகு ஓட்டத் தெரியும். மரம் ஏறத் தெரியும். காட்டாற்றில் நீந்தத் தெரியும். முதல் உதவி செய்யத் தெரியும். வயர்லெஸ் இயக்கத் தெரியும். எந்த ஆயுதமும் இல்லாதபோது, கைவிரல் அளவு கத்தியைவைத்து எதிரியின் கழுத்தைச் சீவத் தெரியும். இல்லை என்றால், கை விரல்களை மட்டும்வைத்து சங்கை உடைத்து கதையை முடிக்கத் தெரியும். விலங்குகளின் குணநலன்கள் தெரியும். 'நேற்று மட்டும்தான் எளிதான நாள்’, 'வெற்றி பெறுவ தற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும்’ இதுதான் சீல் வீரர்களின் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து!

சீல் வீரர்கள் பெரும்பாலும் பகலில் தூங்கி, இரவில் பயிற்சி எடுப்பார்கள். ஏனெனில், அவர்களுடைய ஆபரேஷன் பெரும்பாலும் நள்ளிரவில்தான் இருக்கும். அப்போதுதானே எதிரிகள், மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.

எப்போதும் ஆபரேஷன் முடிந்ததும் தடயங்களை அழித்துவிட்டு, அங்கே இருக்கும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு 20 நிமிடங்களில் இடத்தைக் காலி செய்து விட வேண்டும் என்பது சீல் வீரர்களுக்கான விதி. இதனால்தான் ஒசாமா ஆபரேஷனில், ரிப்பேரான ஹெலி காப்டரைக் குண்டுவைத்துத் தகர்த்தார்கள்.  

யானைக்கே அடி சறுக்கும்போது, சீலுக்கு மட்டும் சிக்கல் வராமல் இருக்குமா?

2005-ல் 'ஆபரேஷன் ரெட் விங்ஸ்’ என்று பெயரிட்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிளம்பிச் சென்றார்கள் சீல் வீரர்கள். 'அகமது ஷா’ என்கிற தலிபான் கமாண்டர் ஒருவரைக் காலி செய்வதுதான் அசைன்மென்ட். எம்.ஹெச். 47 என்கிற மெகா சைஸ் ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றது 20 பேர்கொண்ட சீல் படை. தலிபான்களில் 'மலைப் புலிகள்’ என்று ஒரு குரூப் உண்டு. தோராபோரா மலையில் உட்கார்ந்து கொண்டு ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் அந்தப் பகுதியில் பறக்கும் பாகிஸ்தான், அமெரிக்கப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது அவர்களின் பொழுதுபோக்கு.

எக்கச்சக்க சத்தத்தோடு பறந்த எம்.ஹெச். 47-ஐ சுலபமாகப் போட்டுத் தள்ளினார்கள் தலிபான்கள். ஒரு வீரரைத் தவிர மற்ற அனைவரும் அவுட். வியட்நாம் போருக்கு அடுத்த படியாக இந்த ஆபரேஷனில்தான் அதிக வீரர்களை இழந்தது சீல்.  

சீலுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு என்றே தனி ஆயுதத் தொழிற்சாலை உண்டு. 'ரெட் விங்க்ஸ்’ ஆபரேஷனில் பட்ட சூட்டை அமெரிக்கா அவ்வளவு சீக்கிரம் மறக்கவில்லை.

ஒசாமா என்கவுன்டருக்காக அதிகம் சத்தம் வராதபடி ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார்கள். ஒன்றுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தார்கள். பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி மிகத் தாழ்வாகப் பறந்தார்கள். ஒசாமா வீட்டு மொட்டை மாடியில் இறங்கினார்கள். 20 நிமிடங் களில் காரியத்தை முடித்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுதாரித்து, போர் விமானங்களை அனுப்பியபோது, அங்கே யாரும் இல்லை.

இப்போது அல் கொய்தாவின் அடுத்த தலைவர் அல் ஜவாஹிரியை அழிக்க நேரம் பார்த்துப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் சீல் வீரர்கள்.

ஒசாமா மரணத்துக்குப் பழி வாங்கும்விதமாக அமெரிக்கர்களை எப்படித் தாக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார் அல் ஜவாஹிரி. இப்போதைக்கு, இரு தரப்பிலும் யாருக்கும் நிம்மதியான தூக்கம் கிடையாது!