Published:Updated:

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

என் கட்சி... மாணவர் கட்சி!

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

என் கட்சி... மாணவர் கட்சி!

Published:Updated:
##~##
'அ
ப்துல் கலாம் அவர்களைச் சந்திக்க வேண்டும்’, 'கலாமோடு தேநீர் அருந்த வேண்டும்’, 'கலாம் எனக்கு கவிதை வாசிக்க வேண்டும்’ - விகடனில் 'ஆசை’ பகுதி தொடங்கிய நாளில் இருந்து, வந்து குவிந்த பெரும்பாலான மாணவர்களின் 'ஆசை’ இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற சந்தோஷமாகச் சம்மதித்தார் கலாம். பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு, 28 மாணவிகள், 15 மாணவர்கள் உள்பட மொத்தம் 43 மாணவர்களோடு, சென்னையில் ஒரு மென் தூறல் இரவில் கவர்னர் மாளிகை தொட்டோம். பிரசிடென்ஷியல் ஹாலில் சின்னக் காத்திருப்பு. கண்கள் மினுங்க, கையெடுத்துக் கும்பிட்டபடி, வசீகரப் புன்னகை அணிந்து வந்தார் கலாம். அரங்கம் அதிர்ந்தது கைதட்டல் உண்டாக்கிய டெசிபலால். அறிமுக விசாரிப்புகளுக்குப் பிறகு துவங்கியது கலாம் கலந்துரையாடல்!  

''உங்களில் எத்தனை பேர் மருத்துவர் ஆகப் போகிறீர்கள்?'' கலாமின் கேள்விக்குச் சில மாணவர்கள் கை உயர்த்தினர். ''உங்களில் எத்தனை பேர் ஆசிரியர்கள் ஆகப்போகிறீர்கள்?'' அடுத்த கேள்விக்கு உயர்ந்தன கணிசமான கைகள். ''அரசியல் தலைவர்?'' ஒன்றிரண்டு கரங்களே உயர்ந்தன. அவர்களுள் ஒருவரான சிந்துஜாவைப் பார்த்து, ''நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார் கலாம்.

''முதலில் ஒரு பேனல் ஆரம்பிப்பேன். மக்களுக்கு என்ன தேவைன்னு ஆராய்ந்து, அதற்கேற்ற மாதிரி திட்டங்களை அறிவிப்பேன். சீனியர்களின் அனுபவங்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு என்னால் ஆன கடமையை நிறைவேற்றுவேன்!'' என்று பதில் அளிக்க, ''நல்ல பொண்ணும்மா நீ!'' என கை தட்டிப் பாராட்டினார் கலாம்.

கை தூக்கிய இன்னொரு மாணவர் சஞ்சய்யை கலாம் பார்க்க, ''சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன்!'' என்றார்.

மூன்றாவதாக எழுந்த விவேக், ''அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்து கல்வியைக் கொண்டுவருவேன்!'' என்று சொல்ல, கலாம் சட்டென்று கேட்டார்... ''லஞ்சத்தை ஒழிப்பது எப்படி?''

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

விவேக் ஒரு விநாடி யோசித்து, ''மக்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் லஞ்சம் கொடுக்க வேண்டும், வாங்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது!'' என்றதும் ஆர்ப்பரித்தது கை தட்டல். ஜனத்துல் பாத்திமா என்ற மாணவி, ''தண்டனைகள்தான் குற்றங்களைச் சரிப்படுத்தும். 'தப்பு செய்தால், தண்டனை உண்டு’ என்கிற பயத்தை மக்களிடம் ஏற்படுத்துவேன்'' என்று கணீர்க் குரலில் சொல்ல, ''சபாஷ்... சபாஷ்'' என்று உரக்கப் பாராட்டினார் கலாம்.  

கலாமின் மகிழ்ச்சி அரங்கில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தொற்றிக்கொள்ள, விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

''ஒன் மோர் தலைவர்?'' என கலாம் கேட்க, ''அரசியல் கறையை நீக்க அனைத்து இளைஞர்களையும் அரசியலுக்கு வரவழைப்பேன்'' என்றார் செல்ல விக்னேஷ்.

''ஏன், பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லையா?'' மாணவிகளைப் பார்த்து கலாம் கேட்க, காயத்ரி என்கிற மாணவி, ''முதியோர் இல்லங்களே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவேன்'' என்றார் தெளிவாக.

இன்னொரு மாணவர், ''இன்றைக்கு எல்லாமே பசுமை என்கிற அடிப்படைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். க்ரீன் டெக்னாலஜி, க்ரீன் பிசினஸ்... அந்த வரிசையில் க்ரீன் பாலிடிக்ஸ் என்பதை அறிமுகப்படுத்துவேன்'' எனத் தன் கருத்தைத் தெரிவித்தார்.

''அலுவலகத்தில், ஆபீஸருக்கும் பியூனுக்கும் இடையேயான சம்பள விகிதம்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். ஆகவே, அதை முதலில் ஒழிக்கப் பாடுபடுவேன்'' என்று பள்ளி மாணவி ஒருவர் சொல்ல, சிரித்துவைத்தார் கலாம். அரங்கின் முன் வரிசையில் டை அணிந்து அமர்ந்திருந்த பிரசாந்தைப் பார்த்து ''டை மேன்'' என்று கலாம் அழைக்க, ''நம் நாட்டு ராணுவத்துக்கு அதிகமாகச் செலவழிக்கிறார்கள். அதில் பாதிப் பணத்தை மற்ற துறைகளுக்குத் திருப்பிவிடலாம்'' என்று ஐடியா சொன்னார். ''நோ... நோ... நம் நாட்டுப் பாதுகாப்புக்குத் தரப்படுகிற தொகை 10 சதவிகிதத்துக்கும் குறைவானதுதான்''- தலை அசைத்து மறுத்தார் கலாம். ''இட ஒதுக்கீடு முறையை ஒழிப்பேன். மெரிட் முறையில் கல்வியைக் கொண்டுவருவேன்'' என ஒரு மாணவி சொல்ல, ''பொருளாதார அளவில் பின்தங்கியவர்களுக்குக் கைகொடுத்து வளர்க்க வேண்டும். ஒதுக்கீடு முறையை ஒழிப்பதற்குப் பதிலாக, இடங்களை அதிகப்படுத்த வேண்டும்'' என விளக்கம் கொடுத்த கலாம், ''சரி... எத்தனை பேர் நிலவில் நடக்க ஆசைப் படுகிறீர்கள்?'' என ஆர்வத்துடன் கேட்டார். உடனே, மாணவர்கள் அனைவரும் கை தூக்கினார்கள்.

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

''2030-ல் நிலவில் ஓர் இந்தியரை நடக்கவைப்பதுதான் இஸ்ரோவின் லட்சியம். ஒரு காலத்தில், நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதே நமது லட்சியமாக இருந்தது'' - கலாம் விவரித்துச் சொல்லும்போது, அவர் முகத்தில் ஆயிரம் சூரியன் பிரகாசம். எளிமையாகத் தன் உரையைத் துவக்கினார் கலாம். ''உங்க எல்லாருக்கும் லட்சியம் இருக்கு... அந்த லட்சியத்தை எப்படி அடைவது? எந்த லட்சியமா இருந்தாலும், அதை அடைய நான்கு வழிகள் இருக்கின்றன. முதலாவது, சரியான இலக்கு இருக்க வேண்டும். இரண்டாவது, அந்த இலக்கை அற வழியில் அடைய வேண்டும். மூன்றாவது, அறிவைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நான்காவது, விடா முயற்சியுடன் இலக்கை அடைய உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நான்கையும் நீங்கள் கடைப்பிடித்தால், லட்சியம் நிச்சயம் உங்கள் கைகளில் வரும். திருவள்ளுவரின் மொழியில் சொன்னால், 'தோல்வியைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்’. அந்தக் குறள் எதுன்னு தெரியுமா?'' என கலாம் கேள்வியுடன் மாணவர்களை எதிர்நோக்க,

'' இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்''

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவரான பி.கே.சரவணன் சொல்லி முடிக்க, கலாம் முகத்தில் சந்தோஷம்.

''2020-ல் நம் நாடு வளர்ந்த நாடாக மாற என்ன வேண்டும்?'' என்று கலாம் கேட்க, 'கடின உழைப்பு, கல்வி, தனி மனித ஒழுக்கம், ஒற்றுமை, நாட்டுப்பற்று’ என ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல,

''எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டீர்கள். அது என்ன தெரியுமா?'' என்று கேட்டுவிட்டு, கலாமே பதிலும் தருகிறார். 'I can do it, we can do it, India can do it'' என்றவர், சற்றே குரலை உயர்த்தி, ''எல்லா வளங்களும் நம் நாட்டில் இருக்கிறது; நம்மிடம் எது இல்லை? நம்மால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கைதான் இல்லை. அந்தத் தன்னம்பிக்கைதான் இப்போதைய உடனடித் தேவை'' என்றார்.

''நீங்கள் உங்களுக்காக வாழப்போகிறீர்களா, இல்லை... அனைவருக்காகவும் வாழப்போகிறீர்களா?'' என கலாம் கேள்வி எழுப்ப, ''எல்லோருக்காகவும்!''- கோரஸாகச் சொன்னார்கள் மாணவர்கள்.

''பல்ப் கண்டுபிடித்த எடிசன், டெலிபோன் கண்டுபிடித்த கிரஹாம் பெல், கப்பலில் போய்க்கொண்டு இருக்கும்போது, 'வானம் நீலமாக இருக்கிறது, கடலிலும் அந்த நீலம் பிரதிபலிக்கிறதே, ஏன்?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு, ராமன் விளைவை உருவாக்கிய சர்.சி.வி.ராமன் இவர்கள் எல்லாருமே தங்களின் தனித்துவத்தை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தினார்கள். அதேபோல, நீங்கள் ஒரு தனித்துவத்தைக்கொண்டு இருக்க வேண்டும். யார் முடியாது என்று சொல்கிறார்களோ, அவர்களோடு பழகுவதைத் தவிர்த்துவிடுங்கள். யார் முடியும் என்று சொல்கிறார்களோ... அவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்!'' என்று தன் உரையை நிறைவு செய்தார்.

''நீங்கள் பன்முக ஆளுமை பெற்றவர். எந்தப் பதவி உங்களுக்கு மனநிறைவு தந்தது?'' என்று கேட்டார் ராம்குமார்.

''1980-ம் ஆண்டு சேட்டிலைட் பண்ணினோம். 1990-ல் அக்னியை ஏவினோம். 1998-ல் பொக்ரான் பரிசோதனையில் வெற்றி. அதன் பிறகு, 'இந்தியா 2020’ திட்டக் கொள்கைகளுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது. இப்படி என் ஒவ்வொரு பணியும் எனக்கு மன நிறைவைத் தந்தது. எந்தத் தொழிலையும் நான் பிரித்துப் பார்த்ததே இல்லை'' என்றார் கலாம்.

''நீங்கள் திறமையான ஆசிரியர். ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?'' என்று கேட்டார் யாஷிகா.

''எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சிவசுப்ரமணியன். அவர் நடந்து போனாலே, அவரைச் சுற்றி அறிவு ஜுவாலை ஜொலிக்கும். அதற்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும். நீங்கள் ஆசிரியப் பணியை விருப்பத்துடன் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மூன்றாவதாக, புனிதமான வாழ்க்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்'' என்று சிரித்தார் கலாம்.

''ஒருபக்கம், 26 சதவிகித இந்தியர்கள் இரவு உணவு இன்றி பட்டினியுடன் படுக்கச் செல்கிறார்கள். மறு பக்கம், இந்திய உணவுக் கழகத்தில் தானியங்கள் மீந்துபோய் நாசமாகின்றன. இந்த முரண்பாட்டைக் களைவது எப்படி?'' என்று முத்துக்குமார் கேட்க...

''அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தால் மக்களுக்கு அதன் மகத்துவம் தெரியாமல் போய்விடும். உணவுப் பொருட்களையும் வீணாக்கக் கூடாது. இதற்காக சீரான வழங்குதல் முறையைப் பின்பற்ற வேண்டும்'' என்று பதில் சொன்னார் கலாம்.

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

''இங்கு டாக்டர், இன்ஜினீயர் ஆக வேண்டும் என ஆசைப்படும் அளவுக்கு முதல்வர், பிரதமர், ஜனாதிபதியாக வேண்டும் என யாரும் ஆசைப்படுவது இல்லையே ஏன்?'' என்று சரவணன் கேட்க,

''அதுதானே... சின்ன லட்சியத்தோடு வாழ்வதும் குற்றமே!'' என்கிற கலாமின் பதில் கை தட்டலை அள்ளியது.

''இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறீர்கள். ஏகப்பட்ட இளைஞர்கள், மாணவர்களைச் சந்திக்கிறீர்கள். நீங்களே ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக் கூடாது?'' என்று மாணவர் சந்தோஷ் கேட்க, அறையில் எழுந்த கை தட்டல் ஒலி அடங்கச் சிறிது நேரம் பிடித்தது.

''எப்பவோ ஆரம்பிச்சிட்டேனே. என் கட்சி எப்போதும் மாணவர் கட்சி!'' என்று கலாம் பஞ்ச் அடிக்க, மீண்டும் அதிர்ந்தது அரங்கம்.

''ஸ்பெக்ட்ரம் ஊழல், பல லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கிகளில் முடங்கி இருக்கும் இன்றைய இந்தியச் சூழலில், நம் நாடு எப்படி வல்லரசாக முடியும்?'' ஐஸ்வர்யா கேட்க,

''ஊழலை நீங்கள்தான் ஒழிக்க வேண்டும். நம் நாட்டின் மொத்த உற்பத்தி 10 சதவிகிதத்துக்கு மேல் போனால், நம் நாடு வளர்ந்த நாடாகும். நீங்கள் ஊழல்பற்றிக் கேட்டதால், இதைச் சொல்கிறேன். நான் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லுங்கள்'' என்று கலாம் சொல்ல ஆரம்பிக்கிறார்.

''எண்ணத்திலே
நல்லொழுக்கம் இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்
குடும்பத்தில் சாந்தி நிலவினால்
நாட்டில் சீர்முறை உயரும்
நாட்டில் சீர்முறை உயர்ந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்!'' கலாமோடு சேர்ந்து மாணவர்களும் திருப்பிச் சொல்லி முடிக்க, ''புரியுதா... இதுதான் தலைமையின் இலக்கணம்'' எனச் சொல்லிச் சிரிக்கிறார் கலாம்.

''இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்ப, நீங்கள் பள்ளி மாணவரா இருந்தீங்கன்னு படிச்சிருக்கேன். சுதந்திரச் செய்தியை எப்படி உணர்ந்தீர்கள்?'' என்று கிரேஸ் அனிதா கேட்க,

''அப்போது நான் ராமநாதபுரத்தில் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அய்யாக்கண்ணு என்கிற ஆசிரியர் சுதந்திரச் செய்தியைச் சொல்லிவிட்டு, லட்டு கொடுத்தார். அடுத்த நாள் தினமணியின் முதல் பக்கத்தில் நேரு தேசியக் கொடியை ஏற்றும் படத்தையும், கொண்டாட்டத்தில்கூடக் கலந்து கொள்ளாமல் தன்னோட வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்த காந்தியின் படத்தையும் அடுத்தடுத்து வெளியிட்டு இருந்தாங்க. கொண்டாட்டங்களில் மனதை ஈடுபடுத்தாமல், எங்கு துன்பம் இருக்கிறதோ அங்கு சென்று சேவை செய்வதுதான் ஒரு தலைவனுக்கான வரையறை'' என்று விடையளித்தார் கலாம்.

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

''முதியோர்கள் ஒரு நாட்டின் சொத்து. அவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள். மாணவர்களின் முதல் கடமை... படிப்பது. இரண்டாவது கடமை... படிக்கச் சொல்லிக் கொடுப்பது. விடுமுறை தினங்களில் ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள். மூன்றாவது... சேவை!

ஒவ்வொருவருக்கும் இரண்டு இதயங்கள் இருக்கின்றன. ஒன்று, உயிரியல் இதயம். இரண்டாவது, இரக்கமுள்ள இதயம். மருத்துவமனைகளுக்குச் சென்று சேவையாற்றுங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் இரக்கம் உள்ள இதயம் துடிப்பதை உணர முடியும்'' என்றவர், ''சரி, எனக்கு இப்போது ஓர் உறுதிப் பிரமாணம் தருவீர்களா?'' என்று கேட்க, ஆவலுடன் மாணவர்கள் 'ஆமாம்’ என்றார்கள். ''இன்று முதல் உங்கள் தாயைச் சந்தோஷப்படுத்துங்கள். உங்கள் தாய் சந்தோஷமாக இருந்தால், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால்... சமுதாயம், நாடு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று முத்தாய்ப்பாக முடிக்க, அரங்கம் எங்கும் ஆனந்த அலைகள்.

அது தேசம் எங்கும் பிரதிபலிக்கட்டும்!

அப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு

படங்கள் : கே.ராஜசேகரன், என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism