வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (24/05/2017)

கடைசி தொடர்பு:15:26 (24/05/2017)

'என் பையன் பார்ப்பானே... முத்தம் கொடுக்க மாட்டேன்..!’ - சிபிராஜ்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் திரைப்படம், 'சத்யா'. தெலுங்கு ரீமேக்கான இந்தப் படத்தில், வரலட்சுமி, ரம்யா நம்பீசன், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலட்சுமி, இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

'சத்யா' படத்தைப் பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, 'சத்யா’ என்ற டைட்டில்  ராஜ்கமல் இன்டர்நேஷனல்  நிறுவனத்திடம் பதிவாகியிருந்தது. கமல் சாரிடம் 'சத்யா' பெயர், எங்கள் படத்துக்குச் சரியாக இருக்கும் என்று கேட்டவுடன், அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இதற்காக எங்கள் யூனிட் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

மேலும் 'சத்யா' திரைப்படம் கமலுக்கு எப்படி திருப்புமுனையாக இருந்ததோ அதேபோல சிபிராஜுக்கும் திருப்புமுனையாக இருக்கும். சிபிராஜ் இதுவரை 12 படங்களில் நடித்துள்ளார். எந்தப் படத்திலும் அவர் தன் லுக்கை மாற்றவில்லை. இந்தப் படத்தில், நான் கேட்டதற்காக தன் லுக்கை மாற்றியுள்ளார். 'சத்யா' திரைப்படத்தை வர்தா புயல் வந்தபோது அம்பத்தூரில் செட் போட்டு படமாக்கிக்கொண்டிருந்தோம். புயல் வரப்போவது தெரியும், ஆனால், இந்த அளவுக்குப் புயல் அடிக்கும் என்று தெரியவில்லை. புயல் அடித்து முடித்த பின்புதான், நாங்கள் செட்டை விட்டே வெளியே வந்தோம். 

இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சிக்கு, லிப் லாக் தேவைப்பட்டது. சிபிராஜிடம் நான் அந்தக் காட்சியைப் பற்றிக் கூறியதும், 'என்னால் நடிக்க முடியாதுங்க, சாரி...’ எனக் கூறிவிட்டார். அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை நான் எவ்வளவோ விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவருடைய மகன் அதைத் திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால்தான் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்தார், சிபி’’ என்று கூறினார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. 

விஜய் ஆண்டனியின்  நடிப்பில் வெளிவந்த 'சைத்தான்' படம்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு முதல் படம். இது அவரின் இரண்டாம் படமாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க