Published:Updated:

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

Published:Updated:
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சே
லத்துச் சிங்கம் என்பது செல்லப் பெயர். முதல்வர் கருணாநிதி அந்த மாவட்டத்துக்கு வந்தால்... 'வீரபாண்டியார் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது’ என்றுதான் வரவேற்புப் பலகைகள் சொல்லும். மற்ற மந்திரிகள் சொல்லத் துணியாத ஸ்லோகம் இது!

'முருகனுக்கு எப்படி வீரபாகு துணையாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்தானோ, அதைப்போல இந்த கருணாநிதிக்குக் கிடைத்தவர் வீரபாண்டி’ - சேலம் பக்கம் எப்போது வந்தாலும், ஆறுமுகத்தைப்பற்றி இப்படித் தவறாமல் புகழ்ந்துவிட்டுப் போவார் கருணாநிதி.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளரை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. 'வீரபாண்டி தொகுதியில் என்னோட பையன் ராஜாவுக்கு ஸீட் கொடுத்தே ஆகணும்’ என்று வீரபாண்டி ஆறுமுகம் கோரிக்கைவைக்க... 'ரெண்டு பேரில் யாராவது ஒருத்தருக்குத்தான் ஸீட் கொடுக்க முடியும். வாரிசுகளுக்கு ஸீட் கொடுத்தா, கட்சிக்காரங்க மத்தியில் அதிருப்தி வரும்ப்பா!’ என்று கரகரத்த குரலில் கருணாநிதி சொல்ல... 'அப்போ, ஸ்டாலினுக்கு ஸீட் கொடுக்க மாட்டீங்களா?’ என்று பட்டெனக் கேட்டவர் ஆறுமுகம். பதில் எதுவும் சொல்ல முடியாமல், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சேலம் - 2 தொகுதியும், அவர் மகன் ராஜாவுக்கு வீரபாண்டி தொகுதியும் வழங்கினார் கருணாநிதி. இப்படித் துணிச்சலாக, கருணாநிதியிடமே பேசும் ஒரே தி.மு.க. அமைச்சர் இவர் ஒருவர்தான். கருணாநிதியை மறுத்து கோ.சி.மணியும் பேசக்கூடியவர்தான். இருந்தாலும், அவரது வார்த்தைகளில் அளவுக்கு மீறிய பவ்யம் இருக்கும். ஆனால், இவரோ... தனது ஆறுமுகங்களையும் காட்டக் கூடியவர்!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

1958-ம் ஆண்டு சேலம் பக்கத்தில் உள்ள பூலாவரி கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு தேர்தல் நடந்தது. வழக்கமாகப் போட்டியிடும் காங்கிரஸ்காரரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார், 21 வயது இளைஞரான 'புல்லட்’ ஆறுமுகம். இவருடைய அப்பா, சோலை கவுண்டரும் காங்கிரஸ்காரர். அப்பா தடுத்தும்,  தேர்தலில் சுயேச்சையாகக் களம் இறங்கி, மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றார் 'புல்லட்’ ஆறுமுகம்.

பூலாவரி கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகம் தொடங்கியபோது, அந்த முதல் கிளைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1958-ம் ஆண்டு கடைசியில் வேலூரில் தி.மு.க. மாநாடு நடைபெற்றபோது, தொண்டர் படைக்குத் தலைவராக இவரை நியமித்தனர். தொண்டர் படையைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தியதற்காக, ஆறுமுகத்தைப் பாராட்டிக் கௌரவித்தார் கட்சித் தலைவரான அண்ணா. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான நேரத்தை சேலத்தில்தான் கருணாநிதி கழித்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்காக கதை வசனம் எழுத கருணாநிதி சேலம் வந்தபோது, அறிமுகமான ஆறுமுகம்... அரசியலில் வளர ஆரம்பித்தார். 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில், வீரபாண்டி தொகுதியில் அண்ணாவிடம் சொல்லி ஆறுமுகத்துக்கு ஸீட் வாங்கிக் கொடுத்ததும் கருணாநிதியே. தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆறுமுகம், சேலத்தில் இருந்து சென்னை சட்டமன்றத்துக்குத் தனது புல்லட்டிலேயே போனதாகப் பழைய ஆட்கள் சொல்கிறார்கள். அதன் பிறகுதான் தனது பெயரை வீரபாண்டி ஆறுமுகம் என்று அடையாளப்படுத்திக்கொண்டார் இந்த புல்லட் அங்கிள்.

1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த தேர்தலிலும் வென்றார். அதன் பிறகு, ஆறுமுகத்துக்கு எல்லாமே ஏறுமுகம்தான்!  1974-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டவர், இன்று வரை பதவியில் தொடர்கிறார். 36 ஆண்டுகள் ஒரே கட்சியில் மாற்ற முடியாத மாவட்டச் செயலாளராக வலம் வருபவர் என்ற பெருமை வேறு யாருக்கும் இருக்காது.

1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். 96-ல் வென்றபோதும், இப்போதும் வேளாண்மைத் துறை அமைச்சராகத் தொடர்கிறார்.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

இது விவசாய நாடு. விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் தொகைதான் அதிகம். ஆனால், அந்தத் துறை அதற்கான அக்கறையுடன் கவனிக்கப்படவே இல்லை. அதற்கு, எந்த ஆட்சியும் விதிவிலக்கு இல்லை. இன்றைக்கு விவசாயப் பொருட்களின் உற்பத்தி நிறையவே குறைந்திருக்கிறது. அரிசியில் இருந்து, அத்தனை உணவுப் பொருட்களையும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யும் நிலைமை. விவசாயத்துக்கு அடிப்படையான உரங்கள், மருந்துகள் விலை எகிறிவிட்டது. விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய விலைகள் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, விவசாயம் பார்ப்பதைவிட, கைவசம் இருக்கும் நிலத்தை விற்று வங்கியில் டெபாசிட் பண்ணிச் சாப்பிடலாம் என்று நினைக்கிறான் விவசாயி. இதனால், விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாகிவிட்டன. விவசாயம் பார்க்கக் கூலிகள் கிடைப்பது இல்லை. 100 நாள் வேலைத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தால், வேலை பார்க்காமல் பலருக்கும் பணம் கிடைக்கிறதே தவிர... விவசாயம் பார்க்க ஆள் கிடைக்கவில்லை. இந்தக் குறையை, மத்திய அரசாங்கத்திடம் சொல்லி, அந்தத் திட்டத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்யவாவது தமிழக அரசு முயன்றிருக்க வேண்டும். தமிழக கேபினெட்டில் இதுபற்றி விலாவாரியாக விசாரித்துவிட்டு, அப்படியே விட்டு விட்டார்கள். மழை, சில ஆண்டுகள் பெய்து கெடுக்கிறது. பல ஆண்டுகள் பெய்யாமல் கெடுக்கிறது. மழை நீர் சேகரிப்பு, நீர் ஆதாரத் திட்டங்கள் குறித்த முன் யோசனைகள் எதுவும் இல்லை. ஆக, சட்டசபையில் பதில் சொல்லவும், விழாக்களில் பங்கேற்கவும் மட்டுமே இவர் மந்திரியாக இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது!

ஆறுமுகத்தின் குடும்பம் பெரியது. முதல் மனைவி பெயர் ரங்கநாயகி. இவர்களுக்கு மூத்த மகன் நெடுஞ்செழியன். அப்பாவுக்குத் தப்பாத வாரிசாக கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, முழு நேர அரசியல்வாதியானார். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வரை பதவி வகித்த நெடுஞ்செழியன், கடந்த 2002-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோக... இடிந்துபோனார் வீரபாண்டியார். அரசியல் அடிச்சுவடே இல்லாமல் இருந்த தனது இரண்டாவது மகன் ராஜாவை அரசியலுக்குக் கொண்டுவந்து, கடந்த தேர்தலில் எம்.எல்.ஏ. ஆக்கினார். ஆனால், நெடுஞ்செழியன் அளவுக்கு ராஜாவால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. இதற்குஇடையில் சென்னையில் லீலாவதி என்பவரைத் திருமணம் செய்தார் ஆறுமுகம். இவர்களுக்கு பிரபு என்ற ஒரு மகன் உண்டு. சேலமே ஜொலிஜொலிக்க... கருணாநிதி தலைமையில் தடபுடலாக பிரபுவின் கல்யாணம் நடந்தது. பல ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இந்தத் திருமணத்தின் மூலமாகத்தான் ரங்கநாயகி - லீலாவதி குடும்பத்தினர் ஒன்றாக இணைந்தார்கள்.

சேலம் மாவட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை வைத்தும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரை வைத்தும் பல இடங்களில் நிலங்களை மிரட்டி அபகரிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. வி.எஸ்.ஏ. (வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்பதன் சுருக்கம்) வணிக வளாகம், வி.எஸ்.ஏ. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, வி.எஸ்.ஏ. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் எனத் தனது சாம்ராஜ்யத்தை சேலத்தைச் சுற்றி விரிவுபடுத்திக்கொண்டார்.

ஸ்டாலினுக்கும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்வது இல்லை என்றாலும், உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான், வீரபாண்டியாருக்கு எதிராக பனைமரத்துப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனை ஸ்டாலின் வளர்த்துவிட ஆரம்பித்ததை, ஒட்டுமொத்த மாவட்டமும் அதிர்ச்சியோடுதான் பார்த்தது. இவரை மீறி பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி கட்சிக்காரர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், ராஜேந்திரனும் ஸ்டாலின் ஆதரவோடு ஜொலிக்க ஆரம்பிக்க... சேலம் தி.மு.க-வில் வீரபாண்டியாருக்குப் பக்க பலமாக இருந்த சுபாஷ், சூடாமணி போன்ற பெருந்தலைகளும் ராஜேந்திரன் பக்கம் போய்விட்டார்கள். இதற்கு மேல் அமைதியாக இருந்து பிரயோஜனம் இல்லை என நினைத்த வீரபாண்டி ஆறுமுகம், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னை அழகிரியின் ஆதரவாளராகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். அழகிரியும் மதுரை மண்டலத்தைத் தாண்டி தனது கொடியைப் பறக்கவிட வீரபாண்டியார்தான் சரியான சாய்ஸ் என முடிவெடுத்தார். இப்போது, சேலத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும் அழகிரியின் படமும் தவறாமல் இருக்கும்.

சேலத்தில் நடந்த ஆறு கொலைகள் வழக்கில், ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆறுமுகம் அமைச்சராக இருக்கும்போதே இந்தக் கைது சம்பவம் நடந்ததில், மனிதர் விரக்தியில் விழுந்தார்.  வரலாறு ஒரு சக்கரம்தான். தனது அண்ணன் பழனியப்பனும் அவரது மகன் சுகுமாரனும் கொலையான வழக்கில் 35 ஆண்டுகளுக்கு முன்னால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதே சந்தேக ரேகை படர்ந்தது. அதைக் காரணமாகக் காட்டி எம்.ஜி.ஆர். பழி வாங்குகிறார் என்று சொல்லி, தி.மு.க-வில் முக்கியத்துவம் அடைந்தார் ஆறுமுகம். ஆனால், இன்று ஆறு பேர் கொலை வழக்கு அவரது அரசியல் எதிர்காலத்தையே அஸ்தமனம் ஆக்கத் துடிக்கிறது.

'அடுத்த முறை நான் அமைச்சராக இருப்பேனா என்பது தெரியாது. ஆனால், என் உயிர் உள்ள வரை தி.மு.க-வின் தொண்டனாக இருப்பேன்’ என்று வீரபாண்டியார் சொல்வதை சிங்கத்தின் புலம்பலாக மட்டுமே சொல்ல முடியும்!

ஓவியம்: அரஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism