''சுவாதியின் பெற்றோர்களுக்காக காட்சிகளை நீக்கத் தயார்..!'' - ‘சுவாதி கொலை வழக்கு’ பட இயக்குநர்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலைசெய்யப்பட்ட சுவாதியின் வழக்கை அடிப்படையாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை இயக்கியுள்ளார், ரமேஷ் செல்வன். ஆனால், 'சுவாதி கொலை வழக்கு' படத்தைத் திரையிடக்கூடாது என சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்தப் பட வேலைகள் தொடருமா என்று ரமேஷ் செல்வனிடம் விசாரித்தபோது...

’’சுவாதி கொலை நடந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை அதன் தீவிரம் யாருக்கும் புரியவே இல்லை. ஆனால், பல மாதங்களுக்குப் பின்னர் அதுதான் தமிழகத்தின் சென்சேஷனல் பிரச்னையாக அனலடித்தது. அப்படியிருந்தும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சி.சி. டிவி கேமராவையே சமீபத்தில்தான் பொருத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு கொலைக்குப் பின்னரும் நம் சமூகத்தில் எந்தளவுக்கு விழிப்புஉணர்வு உண்டாகியிருக்கிறது என்பதுதான், என் படம் எழுப்பும் கேள்வியாக இருக்கும். மற்றபடி, பேர் சம்பாதிக்கவோ, பணம் சம்பாதிக்கவோ இந்தப் படத்தை எடுக்கவில்லை. ஆனால், இந்தப் படம் சம்பந்தமாக சுவாதியின் பெற்றோரிடம் நான் இதுவரை எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவர்களிடமிருந்து ஆட்சேபம் எழுந்தால், படம் எடுப்பதற்கான காரணத்தை விளக்கி, திரைப்படத்தை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய பிறகுதான் சென்சாருக்கே அனுப்புவேன். அவர்கள் எந்தக் காட்சியை நீக்கச் சொன்னாலும், அதை கண்டிப்பாகச் செய்வேன். ஆனால், அதற்கு முன், படத்தின் தேவை மற்றும் திரைக்கதை குறித்து முடிந்த அளவுக்கு அவர்களுக்குப் புரியவைப்பேன்!’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!