Published:Updated:

அம்மா வாங்கிக் கொடுத்த போண்டா, டீ!

கே.ராஜா திருவேங்கடம்படம் : தி.விஜய்

அம்மா வாங்கிக் கொடுத்த போண்டா, டீ!

கே.ராஜா திருவேங்கடம்படம் : தி.விஜய்

Published:Updated:
##~##

வெள்ளியங்கிரியை ஞாபகம் இருக்கிறதா? நம்ம வடக்கலூர் வெள்ளியங்கிரி. இன்னமும் தெரியலையா? அட, 'ஜெயலலிதா’ வெள்ளியங்கிரி? ஆங்... அவரேதான்!  

 ''வணக்கம் சீமான். நான் ஜெயலலிதா பேசுறேன். உங்க சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கின்றன. நீங்க நடிச்ச 'மாயாண்டி குடும்பத்தார்’ படத்தை இப்போதான் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்துஇருந்தீர்கள்.  என் வாழ்த்துக்கள்!''என்று  அச்சு அசல் ஜெயலலிதா குரலில் சீமானுக்குப் பேசி பரபரப்பு கிளப்பிய பார்ட்டி. இப்போது என்ன செய்கிறார் வெள்ளியங்கிரி?

''நான் அ.தி.மு.க. இளைஞர் பாசறையில் வடக்கலூர் பகுதிச் செயலாளராக இருக்கேங்க (பார்றா... இது அம்மாவுக்குத் தெரியுமா?) ஊர்ல கேபிள் டிவி லைன் மேனா இருக்கேன். அம்மா ரெண்டாவது தடவையா முதல்வரா இருந்தப்போ, அவங்க பேச்சை ஜெயா டி.வி-யில் கேட்டுக் கேட்டு, அதேபோல பேசிப் பயிற்சி எடுத்தேன். வாய்ஸ் நல்லா வொர்க் அவுட் ஆச்சு. சீமான் நம்பர் கிடைக்கவும் சும்மா அவருக்கு போன் போட்டேன். அம்மா வாய்ஸ்ல பேசவும் பதறிட்டாரு. குழம்பிட்டே இருந்துருப்பாராட்டம் இருக்கு. மூணு நாள் கழிச்சு திரும்பக் கூப்பிட்டார். 'சொல்லுங்க சீமான்... ஏதாவது முக்கியமான விஷயமா?’னு கேட்டதும் எதுவும் பேசாம டக்குனு வெச்சிட்டாரு. சீமான்கிட்ட நம்பர் வாங்கி, பாடகி சித்ரா எனக்கு போன் பண்ணாங்க. 'ஜெயலலிதா ஹியர்’னு நான் சொன் னதும் சித்ராவுக்கு வார்த்தையே வரலை. 'அம்மா ரெண்டே ரிங்ல போனை எடுப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை’னு படபடப்பாப் பேசினாங்க. 'எத்தனை ரிங்னு நான் எண்றது இல்லை சித்ரா. நீங்க பேசினது சந்தோஷமா இருக்கு’னு சொன்னேன். அதுக்கு மேல என்ன பேசுறதுனு தெரியலை. 'இன்னிக்கு சண்டேங்கிறதால நான் கார்டன்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். இன்னொரு சந்தர்ப்பத்துல பேசுங்க’னு சொல்லி வெச்சுட்டேன். சில நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வரும். திருப்பிக் கூப்பிட என்கிட்ட பேலன்ஸ் இருக்காது. அதுவும் இல்லாம, மிஸ்டு கால் பார்த்துட்டுத் திரும்பக் கூப்பிட்டா, எப்படி அம்மானு நம்புவாங்கனு கண்டுக்காம விட்டுருவேன்!''

அம்மா வாங்கிக் கொடுத்த போண்டா, டீ!

''கட்சிக்காரங்க யாராவது பேசுவாங்களா?''

''ஏகப்பட்ட பேர்கிட்ட என் நம்பர் போயிருச்சு. ஆனா, பயமோ என்னமோ... யாரும் போன் பண்ணலை.  'குட் மார்னிங் அம்மா’, 'குட் நைட் அம்மா’னு மெசேஜ் மட்டும் வரும். எழுத்துக் கூட்டிப் படிக்கவே எனக்குக் கஷ்டம். அப்புறம் எங்கே நான் பதில் அனுப்புறது? திருநெல்வேலியில இருந்து ஒருத்தர் மட்டும் தைரியமா போன் பண்ணி, மாவட்டச் செயலாளர் பத்தி புகார் சொன்னாரு. 'எனக்கு இப்படி எல்லாம் நேரடியா போன் பண்ணக் கூடாது. எந்தப் புகாரா இருந்தாலும், கார்டனுக்கு அனுப் புங்க. நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன். இனி போன் பண்ணினா, உங்களைக் கட்சியைவிட்டே நீக்கிடுவேன்’னு சொன்ன தும் பதறி அழுதுட்டாரு. அப்புறம் தினமும் நாலு 'ஸாரிம்மா’ மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாரு.

விழுப்புரத்துல இருந்து ஒன்றியச் செயலாளர் 'அம்மா..’னு நடுங்கிகிட்டே பேசினார். சிரிச்சுக்கிட்டே 'சொல்லுங்க ரத்தத்தின் ரத்தமே’னு பேசினேன். கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வரலை. 'என்ன ஆச்சு?’னு கேட்டதும், 'அம்மா உங்க குரலைக் கேட்டதும் போனை கீழே வெச்சு சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டுட்டு இருந்தேன்மா’னு சொன்னாரு. 'உங்க சேவை கட்சிக்குத் தேவை. உற்சாகமாக வேலை பாருங்க’னு சொல்லி வெச்சுட்டேன்!''

''போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது?''

''எல்லா அதிகாரிங்களும் சுத்தி நின்னுக்கிட்டு அம்மா மாதிரி பேசிக் காட்டச் சொன்னாங்க. 'தம்பி வெள்ளியங்கிரி, என் மீது உள்ள பற்று காரணமாக இப்படிப் பேசிவிட்டார். அவரை மன்னித்து, ரெண்டு போண்டாவும், டீயும் வாங்கிக் கொடுத்து, உடனே வீட்டுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடுகிறேன். தேவைப்பட்டால், அவருக்கு வழிச்செலவுக்குப் பணம் கொடுக்கவும் ஆணை இடுகிறேன்’னு பேசினதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க. போண்டாவும் டீயும் வாங்கிக் கொடுத்தாங்க.

'ரொம்ப நல்லவங்களா இருக்காங் களே’னு சந்தோஷப்பட்டேன். 'இனிமே, அம்மா வாய்ஸ்ல யாருக்கும் போன் பண்ண மாட்டேன்’னு எழுதி வாங்கிட்டு, என்கிட்டே இருந்த மொபைல் போனைப் பிடுங்கிட்டாங்க. இப்போ வரை செல் வாங்கக் காசு சேரலை. அம்மாவே செல்போன் வெச்சுக்கிறது இல்லையாம். அப்புறம் நமக்கு மட்டும் எதுக்கு செல்போன்னு பேசாம இருக்கேன்!''  

''கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறாங்களா?''

அம்மா வாங்கிக் கொடுத்த போண்டா, டீ!

''அந்தக் கொடுமையை ஏன் கேட்குறீங்க? சில இடங்களில் பொண்ணு பார்க்கப் போனப்ப, என்னை அம்மா மாதிரி பேசிக் காட்டச் சொன்னாங்க. நானும் விவரம் இல்லாம, பொண்ணுக்குப் பிடிக்குமேனு பேசிக் காட்டினேன். எல்லாரும் கை தட்டிட்டு, சொல்லி அனுப்புறோம்னு அனுப்பிடுறாங்க. அப்புறம் எந்தத் தகவலும் வர்றதில்லை. இப்போதைக்குக் கல்யாணம் ஆகாதுனு தோணுதுங்க. எனக்கு ஒரே ஒரு ஆசை தான். அம்மாவை ஒரு தடவை நேர்ல பார்த்து, அவங்க முன்னாடியே அவங்க குரலில் பேசிக் காட்டிச் சிரிக்கவைக்கணும். அது போதும் எனக்கு!''