என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

உயர் நீதிமன்றம் 150

ப.திருமாவேலன்படம் : கே.ராஜசேகரன்

##~##

ழக்கறிஞர்கள் ரோட்டுக்கு வரும்போதும்... காவல் துறை கோர்ட்டுக்குள் போகும்போதும்... அந்த நெடிய கட்டடம் உங்கள் மனத்திரையில் வந்து போகும். நீதி தேவதை கொலு இருக்கும் உயர் நீதிமன்றம் 150 - வது வயதை எட்டிப் பிடிக்க இருக்கிறது. தலைவிதியைத் தீர்மானிக்கும் இடம் என்பதால், கோயிலைப் போலவே இங்கும் கோபுரம் இருக்கிறது!

கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் மூன்றும் பேரையும் முகத்தையும் மாற்றிக்கொண்டாலும் பிரிட்டிஷ்காரர்களால் மறக்க முடியாத மூன்று நகரங்கள் இவை. வர்த்தகத்துக்கு வசதியாக இருந்த நகரங்களாக இதைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படித்தான் சென்னைக்குள்ளும் வந்தார்கள்.  செயின்ட் ஜார்ஜ் கோட்டை அப்படித்தான் அமைக்கப் பட்டது. பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய அதிகாரி இந்த இடத்தைத் தேர்ந்து எடுத்ததற்கு இன்னொரு காரணமும் சொல்வார்கள். அவரது காதலி சாந்தோமில் இருந்ததால் அதற்குப் பக்கத்தில் இங்குதான் கோட்டையை அமைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாராம். அப்போது கோட்டை இருந்த பகுதி 'ஒயிட் டவுன்’ என்று அழைக்கப்பட்டது. கொஞ்சம் தள்ளி இருந்த இடங்கள் 'பிளாக் டவுன்’ என்று அழைக்கப்பட்டன. பிளாக் டவுனில் தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது இருக்கிறது. கறுப்பர்கள் என்று இந்தியர்களைக் கொச்சைப்படுத்துவதற்காகச் சொன்னாலும், கறுப்பு அங்கிகள் காலப்போக்கில் அதிகமாக நடமாடும் என்பதற்கான பீடிகையாகவும் அது அமைந்து போனது.

உயர் நீதிமன்றம் 150

பாளையக்காரர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாக்க முதலில் போலீஸ் படை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த இடத்தில் ஒரு சுப்ரீம் கோர்ட்டை உருவாக்கினார்கள். அப்போது அதற்கு சுப்ரீம் கோர்ட் என்றுதான் பெயர். அப்போது நீதிபதியாக இருந்தவர் ஹென்றி சிவில்லிம். 'போலீஸ் படையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? இதெல்லாம் கொடுங்கோன்மையை உருவாக்குவதற்கு மட்டும்தான் பயன்படும்’ என்று நீதிமன்றத்திலேயே அவர் கொந்தளித்தது, பிரிட்டிஷ் ஆட்சிக்கே சிக்கலாக மாறிப் போனது. தலைமை நீதிபதி அவரை அழைத்துக் கண்டிக்க.... தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார் சிவில்லிம். இன்றைய வழக்கறிஞர்களுக்கும் போலீஸுக்கும் தொடர்ந்து சண்டை நடப்பதற்கு இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

வெள்ளைக்காரர்களை நீதிபதிகளாக வைத்து கோர்ட்டை நடத்திவிடலாம் ஆனால் சட்டம்? இந்தியாவில் இருக்கும் அத்தனை விதிகள், பழக்க வழக்கங்கள், மரபு கள், ஊர் பஞ்சாயத்துகள்... எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு மெக்காலே தலைமையிலான குழு சட்டத்தை எழுதியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1861-ல் சென்னையில் ஓர் உயர் நீதிமன்றத்தை உருவாக்கலாம் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது. ஊருக்கு ஊர் நாட்டாமை வைத்துக்கொண்டு... சாதிக்கு ஒரு நீதியை வைத்துக்கொண்டு... வல்லவன் வகுத்ததே வேதம்... என்று அதுவரை இருந்த அத்தனையையும் சமப்படுத்தி விக்டோரியா ஒரு சட்டம் கொண்டுவந்தார். அந்த ஒன்றுக்காகவே அவரை 'மகாராணி’ எனலாம்.

உயர் நீதிமன்றம் 150

''அவர்கள் வாழ்வு எங்கள் வலிமை! அவர்களது திருப்தி எங்கள் ஊக்கம்! அவர்கள் நன்றி எங்கள் வெகுமதி!'' என்ற பீடிகையை விக்டோரியா அறிவிக்கும்போதுதான், இந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டடம் கம்பீரமாக எழ ஆரம்பித்தது. 160 அடி கொண்ட கூண்டு அமைக்கப்பட்டபோது சென்னைக்கான கலங்கரை விளக்கமாக அது ஆனது. கூம்பைச் சுற்றிலும் பல்வேறு நிறங்களில் கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டதால் சூரிய ஒளி படும்போது தகதகக்க ஆரம்பித்தது. நீதிமன்ற வளாகத்தின் தரையில் சிறு சிறு ஓவியங்கள் ஆரம்ப காலத்தில் தீட்டப்பட்டன. அந்த வடிவத்தைப் பார்த்து திருகாணிகள் செய்தார்களாம் வியாபாரிகள். சென்னைப் பெண்களின் காதுகளை நீண்ட காலம் அலங்கரித்த திருகாணிக்கு 'ஐகோர்ட் திருகாணி’ என்று பெயரே இருந்ததாம்.

வெள்ளைக்காரன் நமக்கு விட்டுச் சென்றது ஜெயிலும் ரயிலும் என்பார்கள். அப்போதெல்லாம் 'டிராம் வண்டிகள்’  தெருவுக்குள் புகுந்து இன்றைய ஷேர் ஆட்டோக்கள்போல ஓடும். வெள்ளைக்கார பாரிஸ்டர்களும் மயிலாப்பூர் வக்கீல்களும் அந்த டிராம் வண்டிகளில் உட்கார்ந்து சட்டப் புத்தகங்களைப் படித்தபடியே இங்கு வந்து இறங்குவார்கள். 'டிராம் வண்டியை வீதிக்குள் விடுவதால் வீட்டில் க்ராக் ஏற்படுகிறது’ என்று ஒருவர் வழக்குப் போட்டதாகவும், 'உங்கள் வீட்டில் எத்தனை க்ராக் இருக்கின்றன; உங்களையும் சேர்த்து?’ என்று அரசு வக்கீல் கேட்டு அவரை நோகடித்ததாகவும் எழுத்தாளர் ராண்டார்கை சொல்வார். மெத்தப் படித்த மேதாவிகளும்... சட்டம் தெரியாத மக்களுமான சூழ்நிலையில் உருவான இந்த நீதிமன்றத்தில் எத்தனையோ ஜாம்பவான்களின் காலடித் தடங்கள் இன்னமும் இருக்கின்றன.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வெண்கலச் சிலை இருக்கிறது. அது சர் டி. முத்துசாமி ஐயர் உருவம் தாங்கியது. பிரிட்டிஷ்காரர்கள்தான் நீதிபதிகளாக வர முடியும் என்ற சூழலில் நீதிபதியான முதல் இந்தியர் முத்துசாமி ஐயர். நீதிபதி ஹாலோவே ஓய்வு பெற்ற பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முத்துசாமி ஐயர் உட்கார வைக்கப்பட்டபோது வெள்ளைக்கார வியாபாரிகள் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள். ''எங்கள் வழக்குகளை ஒரு இந்தியன் விசாரிப்பதா?'' என்று கேட்டார்கள். ஆனால், அவரது தீர்ப்புகளைத்தான் லண்டனில் நடந்த ப்ரிவ்யூ கவுன்சிலே ஏற்று வழிமொழிந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கான வழக்கறிஞராக - அதாவது - முதல் இந்திய அட்வகேட் ஜெனரலாக ஆனவர் சி.சங்கரன் நாயர். அவர் பின்னர் நீதிபதியாகவும் ஆனார். இன்றைக்கு வரை சிக்கலாக இருக்கும் கலப்புத் திருமணங்களைச் செல்லும் என்று 111 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு அளித்தவர் இந்த சங்கரன் நாயர். அதன் பிறகு வைஸ்ராயின் ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னாளில், ஆங்கில அரசின் நடவடிக்கையை எதிர்த்து ராஜினாமா செய்யும் துணிச்சல்காரராகவும் சங்கரன் நாயர் இருந்தார்.

உயர் நீதிமன்றத்துக்கு வெளியே நிற்கிறது பிரகாசம் பந்துலுவின் சிலை. அந்தக் காலத்தில் ஆயிரக் கணக்கில் ஃபீஸ் வாங்கிய வக்கீல் அவர். ஆனால், இல்லாத வர்களிடம் காசு வாங்காமல் வாதாடவும் செய்தார். சுதந்திரப் போராட்டம் தீவிரமானதும் கவலையே இல்லாமல் கறுப்பு கவுனைக் கழற்றிப் போட்டுவிட்டு... பொது வாழ்க்கையில் இறங்கினார். சைமன் கமிஷனை எதிர்த்து இவர் ஆர்ப்பாட்டம் செய்தபோது, ''இந்தா சுடு'' என்று துணிச்சலாக சட்டையைக் கழற்றி மார்பைக் காட்டினார்.

இப்படி எத்தனையோ நீதி தேவதைகள் நடமாடிய இடம் இது. வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்து இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர், ''வழக்கறிஞராக நான் சமூக அக்கறையுடன் செயல்பட்டதும், நீதிபதியாக நான் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகள் சொன்னதும், என் நடுத்தர வயதில் வெற்றியின் அத்தியாயங்கள். நல்ல தீர்ப்புகளை வெளியிடுவதில் உள்ள மகிழ்ச்சி மற்ற எந்தத் தொழிலிலும் இல்லை!'' என்று சொல்வார்.

அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தங்கள் பாரம்பரியத்தைக் காக்க இந்தப் பெருமிதம் மிக்க தருணத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்!