என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

தினம்... தினம்... அணுதினம்!

ந.வினோத்குமார்

##~##

கஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம். அணு ஆயுதத்தின் கொடூரத்தை உலகம் உணர்ந்துகொண்ட நாள். மரணத்தின் விஷ நாவுகள் தீண்டிய விபரீத நாட்களை ஜப்பானியர்களால் இன்னும் மறக்க முடியவில்லை. ஆனால், இன்னொரு புறம் அணு உலைகளை ஆதரிக்கும் குரல்களும் அடங்கவில்லை!

சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அணு உலைகளுக்கு ஆதரவாகப் பேசிய பேச்சுகள் அணு உலை எதிர்ப்பாளர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தையும் கோபத்தையும் எழுப்பி உள்ளன. மத்திய அரசு ஏற்கெனவே கொண்டுவந்துள்ள அணு சக்தி தொடர்பான இழப்பீட்டுச் சட்டத்தில், அமெரிக்காவுக்குச் சாதகமான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஹிலாரி அழுத்தம் தெரிவித்து இருக்கிறார்.

தினம்... தினம்... அணுதினம்!

அமெரிக்காவின் தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் போடும் மன்மோகன் அரசு, மேலும் மேலும் அணு உலைகள் அமைப்பதை விரிவாக்கிக்கொண்டே வருகிறது. கொரியாவுடன் சேர்ந்து இந்தியாவில் ஐந்து அணு உலைகள் தொடங்க, புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திராவில் துமலப்பள்ளி என்கிற இடம், உலகில் யுரேனியம் அதிகம் உள்ள இடமாக அறிவிக் கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, அங்கே ஏழு புதிய அணு உலைகளைத் தொடங்க இருக்கிறது அரசு. என்ன, ஏது என்று மக்களுக்குத் தெரிவிக்காமல் பாத்திரம் வாங்கிக் குவிப்பதைப்போல அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

ஃபுகுஷிமா விபத்தைத் தொடர்ந்து ஜப்பான், கொஞ்சம் கொஞ்சமாக அணு உலைகளைக் குறைத்து வருகிறது. ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் 'தங்கள் நாட்டு அணு உலைகள் குறை உடையவை’ என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார். ஜப்பான் அரசாங் கம் பல இடங்களிலும் கதிர்வீச்சின் அளவை அளந்தது. அந்த அரசு அளக்காத பெரும்பகுதிகளில் மக்களே டோஸி மீட்டர் கொண்டு அளந்தனர். அந்தப் பகுதிகளில் 67 மைக்ரோ சீவர்ட்கள் வரை கதிர்வீச்சின் அளவு இருக்கின்றன. பொதுவாக, அணு உலைகளில் 20 வயதில் பணிக்குச் சேர்ந்த ஒருவருக்கு 40 வயதாகும்போது, அந்த 20 வருடங்களில் 2 முதல் 5 சீவர்ட்கள் கதிர்வீச்சை உள்வாங்கி இருப்பாராம்.  

ஜப்பான் உணர்ந்துகொண்டாலும் இங்கு இருக்கும் அணு ஆதரவாளர்கள் அணு அபாயத்தை உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. உணர்ந்துகொண்டாலும் அதை மறைப்பதற்கான வேலைகளிலேயே இறங்குகிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்: கல்பாக்கத்தில் வசிக்கும் மக்களுக்குப் புற்றுநோய் உள்ளது என்பதை மறுப்பதற்காக, 'காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆய்வு மையம்’ வெளியிட்ட அறிக்கை. இந்த அறிக்கை கல்பாக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு கதிர்வீச்சால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறது. ஆனால், இந்த அறிக்கையில் உள்ள அபத்தங்களை விளக்குகிறார் மருத்துவர் புகழேந்தி.

தினம்... தினம்... அணுதினம்!

''அடிப்படையில் இவர்கள் செய்திருப்பது 'Cross Sectional Study’. அதாவது, குறிப்பிட்ட ஒரு நாளில் எத்தனை பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதை அறிவதற்கான ஆய்வு. அந்தத் தேதியில், அந்தக் கால வரையறைக்குள் புற்றுநோய் இல்லை என்றால், அவர்களுக்குப் பிற்காலத்தில் புற்றுநோயே வராது என்று சொல்வதற்கு இல்லை. அணு நிலையத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா... இல்லையா என்பதைக் கண்டறிய அணு சக்தி ஒழுங்கமைவு வாரியம் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை ஆகியவற்றின் விதிகளின்படி நீண்ட காலத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அப்படி எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எக்ஸ்ரே எடுத்தல், ரத்தப் பரிசோதனை, புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட் டால் மட்டும் சைட்டாலஜி மேற்கொள் வது என மூன்றே மூன்று பரிசோதனை களை மட்டுமே செய்திருக்கிறார்கள். பொதுவாக, சில புற்றுநோய் வகைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது. பரிசோதனை செய்த சமயத்தில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படாமல், பின்னாளில் ஓர் அணு நிலைய ஊழியர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளைச் செய்வார்களாம். புற்றுநோயைப் பொறுத்தமட்டில் தொடக்கத்தில் எந்தப் பிரச்னையும் காட்டுவது இல்லை என ஆய்வாளர்கள் நன்கு அறிவார்கள். மேலும், ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் புற்றுநோயை ஸ்கேன் போன்ற கருவிகளால் பரிசோதித்தாலும், ஒரு சென்டிமீட்டருக்குக் குறைவாகக் கட்டி இருக்கும்பட்சத்தில் அது தெரியாமல் போகும் வாய்ப்பும் நிறையவே இருக்கின்றன. இதுபோன்ற விஷயங்கள் இந்த அறிக்கையில் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

டிராஃபிக் ராமசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணத்தில், அணு சக்தி ஒழுங்கமைவு வாரியத்தின் முன்னாள் செயலர் ஓம்பால் சிங்கின் மகன் புற்றுநோயால் மரணம் அடைந்ததுபற்றி எந்த விவரங்களும் இல்லை. ஓம்பால் சிங் எப்போது கல்பாக்கத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார், எப்போது பணி விலகினார், அவர் மகன் எங்கு பிறந்தார், அவர் மகனுடைய நோய் எங்கு அறியப்பட்டது, அந்தச் சமயத்தில் அந்தச் சிறுவனின் வயது என்ன, அந்தச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது கல்பாக்கம் மருத்துவமனையிலா அல்லது வேறு எங்கேனுமா ஆகியவை குறித்த எந்தத் தகவல்களும் அந்தப் பதிலில் இல்லை.

தினம்... தினம்... அணுதினம்!

தற்போது கல்பாக்கத்தில் 'பாவினி’ நிலைய இயக்குநராக இருக்கும் பிரமோத் குமாருக்கு தைராய்டு புற்றுநோய் இருந்தது. அவருக்கு எப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, எவ்வளவு சீவெர்ட்ஸ் எடுத்துக்கொண்டார் என்ற தகவல்களாவது வெளியிடப்படுமா? அணு நிலையத்தில் செல்வகுமார் என்ற ஒப்பந்த ஊழியர் கடந்த 2002-ம் ஆண்டில் பணியாற்றி வந்தார். ஒரு விபத்தின்போது, அவர் அதிகபட்ச கதிர்வீச்சுக்கு உள்ளானார். இப்படி அதிகபட்ச கதிர்வீச்சுக்கு உள்ளானவர்களின் பெயர்களை 'Significant Event Report’-ல் பதிவு செய்வார்கள். அதில் டி.எல்.டி. மற்றும் டி.ஆர்.டி. மதிப்புகளைக் குறித்து இருப்பார்கள். டி.எல்.டி. என்பது தெர்மோ லுமினெஸ்சென்ட் டோஸிமீட்டர். இதுதான் பணியாளர்கள் உள் வாங்கிய சரியான கதிர்வீச்சு அளவைத் தரும். ஆனால், டி.ஆர்.டி. (டைரக்ட் ரீடிங் டோஸிமீட்டர்) முறையில்தான் அளவிடுகிறார்கள். இதன் மூலம் துல்லியமான கதிர்வீச்சு அளவைத் தெரிந்துகொள்ள முடியாது. அவருடைய சுகாதாரப் பரிசோதனை முடிவுகளை அவர் எழுதிக் கேட்டும் இதுவரை நிர்வாகம் தரவில்லை. இதை ஏ.இ.ஆர்.பி. பதிவு செய்ய வேண்டும் என இருந்தும் ஏன் பதிவு செய்யவில்லை? 2002-03ம் வருடத்துக்கான பட்டியலில் ஏன் செல்வகுமார் பெயர் இல்லை?

பொதுவாக, கடல் வெப்பம் 28 முதல் 29 டிகிரி சென்டிகிரேடுதான் இருக்க வேண்டும். 33 டிகிரிக்கு மேல் போகக் கூடாது. அப்படிப் போனால், கடல்சார் உயிர்ச்சூழல் பாதிப்பு அடையும். அணு உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப் படும் நீர், கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. அது இன்லெட். உலைகளைக் குளிர்வித்துவிட்டு, அதே நீர் வெளியேறி கடலில் கலக்கப்படுகிறது. அது அவுட்லெட். இந்த இன்லெட் மற்றும் அவுட்லெட் நீருக்கு இடையேயான தட்பவெப்ப வித்தியாசம் 5 சென்டிகிரேடுக்கு மேல் போகக் கூடாது என்று ஐ.ஏ.இ.ஏ. சொல்கிறது. ஆனால், கல்பாக்கத்தில் இது 8.4 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கிறது. இதனால், கடல் வெப்பம் உயரும் அபாயம் இருக்கிறது. கதிரியக்கம் என்பதைப் பொறுத்த அளவில் பாதுகாப்பான அளவு என்று எதுவுமே இல்லை. எனவே, அணு உலைகளின் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறித்து இனிமேலாவது வெளிப்படையான விவரங்கள் தரப்பட வேண்டும்!'' என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

வரலாறு நெடுகிலும் நமக்கான பாடங் கள் புதைந்துகிடக்கின்றன. அதில் ஹிரோஷிமாவின் பாடம் போர் வெறிக்கும் அணு அபாயத்துக்கும் எதிரான பாடம். இந்தப் பாடத்தை இப்போதும் நாம் கற்றுக்கொள்ளாவிட்டால், எதிர்காலம் என்னவாகும்?