வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (28/06/2017)

கடைசி தொடர்பு:13:58 (28/06/2017)

ஹேக்கிங் முதல் AI வரை... மிஸ் பண்ணக்கூடாத டெக்னாலஜி டிவி சீரியல்கள்!

கடந்த 10 வருடத்தில், இந்திய டிவி சீரியல் உலகம் முழுக்க முழுக்க குடும்பக் கதைகளை மட்டுமே தன் களமாக்கிக் கொண்டது. தமிழ், ஹிந்தி தொடங்கி அனைத்து மொழிகளிலும் இதே நிலைமை தான்! இதனால், தமிழில் ஜென்மம் எக்ஸ், மர்மதேசம், சிதம்பர இரகசியம், என்று வித விதமாக கண்டு ரசித்தவர்கள் அனைவரும், இப்போது ஆங்கில டிவி சீரியல் உலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones), ரோம் (Rome), ஸ்பார்டக்கஸ் (Spartacus) என வரலாறு தொடங்கி, அடிதடி, சாகசம், பேய் கதைகள் என பல விஷயங்களை ரசித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இவற்றுள் டெக்னாலஜியை மையக்கருவாகக் கொண்டு மாபெரும் வெற்றிபெற்ற சீரியல்கள் நிறைய உண்டு. அதிரடி ஆக்ஷன், திடீர் திருப்பங்கள், திக் திக் நிமிடங்கள் என ஒவ்வொரு எபிசோடிலும் அவ்வளவு உழைத்திருப்பார்கள். நீங்கள் டெக்னாலஜி பிரியர் என்றால் இந்த சீரியல்களை சீக்கிரமே பார்க்கத் தொடங்குங்கள்.

டெக்னாலஜி டிவி சீரியல்கள் Westworld

வெஸ்டவேர்ல்ட் (Westworld)

1973இல் Westworld என்ற பெயரிலேயே வெளிவந்த படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதியதோர் கதை சொல்கிறார் இந்த சீரியலை உருவாக்கிய ஜோனத்தன்  நோலன். இவர் இன்செப்ஷன் (Inception), தி டார்க் நயிட் (The Dark Knight), இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar) போன்ற படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர். செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களுக்கு மனித உணர்வுகள் தலைத்தூக்கினால் என்னவாகும்? இதுதான் ஒற்றைவரிக் கதை!  மனிதர்களைப் போலவே தோற்றமும், யோசிக்கும் திறனும் கொண்ட ரோபோக்களை கொண்டு உல்லாச பார்க் ஒன்று செயல்படுகிறது. மனிதர்கள் யார் வேண்டுமானாலும் அதே பார்க்கில் அந்த ரோபோக்களுடன் புதுவிதமான வாழ்க்கை வாழத்தொடங்கலாம். ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த ரோபோக்களுக்கு தாங்கள் மனிதர்கள் அல்ல என்ற உண்மை தெரியவே தெரியாது. ஏகப்பட்ட திருப்பங்கள், யூகிக்கமுடியாமல் இருவேறு  காலகட்டங்களில் பயணிக்கும் திரைக்கதை, என பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது  வெஸ்டவேர்ல்ட். முதல் சீசன் (10  எபிசோடுகள்) சென்ற வருட இறுதியில் முடிந்த நிலையில், 2ஆம் சீசனை 2018ஆம் வருடம் வரை  எதிர்பார்க்க வேண்டாம் என ரசிகர்களை அன்புடன்  கேட்டுக்கொண்டுள்ளது மிகுந்த பொருட்செலவில் இதைத் தயாரிக்கும் HBO  நிறுவனம்.

டெக்னாலஜி டிவி சீரியல்கள் Mr Robot

மிஸ்டர். ரோபோட் (Mr. Robot)

பகலில் ஒரு வாழ்க்கையும், இரவில் ஒரு வாழ்க்கையும் வாழும் எலியட் என்ற இளைஞனை சுற்றி நகர்கிறது கதை. மனக்கவலை, வெளிப்படையாக பேசத்தெரியாத மனப்பாங்குடைய அவனை, தான் உருவாக்கிய ஹாக்கர்கள் சாம்ராஜ்யத்தில் (fsociety) ஒருவனாக அமர்த்திக்கொள்கிறார் மிஸ்டர். ரோபோட். ஏகப்பட்ட ஹாக்கிங் நுணுக்கங்கள், வாழ்வியல் தத்துவங்கள், அனல் பறக்கும் திரைக்கதை, திடீர் திருப்பங்கள் என பலவற்றை அளித்து பெரும் வரவேற்பை பெற்றதோடு நில்லாமல், 2 கோல்டன் க்ளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்று சாதித்து இருக்கிறது  மிஸ்டர். ரோபோட். இரண்டு சீசன்கள் (22 எபிசோடுகள்) முடிந்த நிலையில், அக்டோபரில் தொடங்கவிருக்கும் இதன் 3ஆம் சீசனுக்காக இப்போது உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

டெக்னாலஜி டிவி சீரியல்கள் POI

பர்சன் ஆப் இன்டெரெஸ்ட் (Person of Interest)

செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஒரு மெஷின் உருவாக்கப்படுகிறது. அது நகரம் முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் செக்யூரிட்டி கேமெராக்களால் அனைவரையும் கண்காணிக்கிறது. இதன் மூலம் ஒரு குற்றம் நிகழ்வதற்கு முன்பே அதை அறிந்துக்கொண்டு, அது நிகழாமல் இருக்க பெரும் உதவி செய்கிறது. மெஷினிற்கு பக்கபலமாக அதை உருவாக்கிய ப்ரோக்கிராமரும், ஒரு எக்ஸ் மிலிட்டரி ஆபிசரும் செயல்பட்டு குற்றங்கள் நிகழும் முன்பே தடுக்கின்றனர். என்னதான் அறிவியல் பேசி, திருப்பங்களுடன் இருக்கை நுனியில் நம்மை அமர்த்தினாலும், மனிதநேயம் இதன் அடிநாதமாக இருப்பது தான் இது பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்று கருதப்படுகிறது. வெஸ்டவேர்ல்ட்டை தற்போது உருவாக்கிவரும் ஜோனத்தன்  நோலன் உருவாக்கியிருந்த இது, AI முதல் ஹாக்கிங் வரை அனைத்து நெட்வொர்க்கிங் சம்மந்தமான விஷயங்களை பற்றியும் மிகவும் ஆழமாக அலசிய டிவி சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.  

டெக்னாலஜி டிவி சீரியல்கள் Black Mirror

பிளாக் மிரர் (Black Mirror)

பிளாக் மிரர் என்றவுடன் உங்களுக்கு ஞாபகத்தில் வருவது எது? லாக் செய்யப்பட்ட உங்கள் ஸ்மார்ட்போனும், அணைத்து வைக்கப்பட்ட உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனும் தான் என்றால் நீங்கள் டெக்னாலஜியின் அடிமை. எண்ணற்ற சாகசங்களை நம் கண் முன்னே நிகழ்த்திக்காட்டும் நம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்களுக்கும் மனிதர்களை போலவே இன்னொரு முகமுண்டு. அது தான் இந்த பிளாக் மிரர்! டெக்னாலஜியால் நாம் எவ்வாறு கட்டுண்டு இருக்கிறோம், மனிதம் தொலைத்துவிட்டு, அதனால் நாம் எப்படி எல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறோம் என்பதுபோன்ற திகிலூட்டும் நிதர்சனங்களை, உண்மைக்கு மிக அருகில் சென்று படம் பிடித்துக்காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடிற்கும் ஒவ்வொரு கதை என்ற முறையில் ஒரு கதைத் திரட்டாக வெளிவருவது இதன் தனி சிறப்பு. இளம் தலைமுறையினர் பலரின் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியலை, புகழ்பெற்ற  நெட்ப்ளிக்ஸ் (Netflix) நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த வருடம் வரவிருக்கும் இந்த சீரியலின் 4ஆம் சீசனுக்காக அனைவரும் வெயிட்டிங்!

டெக்னாலஜி டிவி சீரியல்கள் AH

ஆல்மோஸ்ட் ஹியூமன் (Almost Human)

இதன் தலைப்பே கதை சொல்கிறதல்லவா? எதிர்காலத்தில் (2048ஆம் வருடம்) மனிதனுக்கும், ஆண்ட்ராய்டிற்கும் (மனிதனை போன்ற தோற்றம் கொண்ட ரோபோட்) நட்பு என்பது சாத்தியமா? போலீஸ் டிடெக்ட்டிவ் ஆன ஜான் கென்னெக்ஸிற்கு இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் விதி வலியது அல்லவா? அவருக்கு பார்ட்னராக ஆண்ட்ராய்டு ஒன்று வருகிறது. 400% கிரைம் ரேட் கூடிவிட்ட அந்த தருணத்தில், அதனுடனான ஜானின் பயணம் எப்படி இருந்தது என்பதை சாகசங்கள் பல சேர்த்து சுவாரசியமாக வழங்கி இருக்கிறார்கள். முதல் சீசன் (13 எபிசோடுகள்) முடிந்தவுடன் 88% மக்களாதரவு இருந்த போதிலும் இரண்டாம் சீசன் வேண்டாமென்று முடிவுசெய்து கதையை முடித்துக்கொண்டது இதை தயாரித்த பாக்ஸ் (Fox) சேனல்.

டெக்னாலஜியை கருவாகக் கொண்டு வெளிவரும் எந்த சீரியலுக்கும், படங்களுக்கும் உலகம் முழுவதும் என்றுமே ஒரு கிராண்ட் ஒப்பனிங் இருப்பதாக கூறுகிறார்கள் சினிமா ஆர்வலர்கள். இதில் நிறைய சீரியல்களும், படங்களும் டெக்னாலஜியால் வரும் பிரச்னைகளை எடுத்துக் கூறி நம்மை பயப்படுத்தவே செய்கிறது. இருப்பினும், நம் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய ஒரு இடத்தை டெக்னாலஜிக்கு நாம் எப்போதே வழங்கிவிட்டோம், இதிலிருந்து என்றுமே மீள முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்