வெள்ளிக்கிழமை படங்கள் ரிலீஸாகுமா..? - அபிராமி ராமநாதன் பதில்

தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேர்த்து மொத்தமாக தமிழ் சினிமாவுக்கான  வரி மட்டும் 58 சதவிகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ''திரையரங்குகள் காலவரையற்ற முறையில் மூடப்படும்” என்று அறிவித்திருந்தார். 

அபிராமி ராமநாதன்


அதன்படி, கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இதுவரை 35 கோடி ரூபாய் வரை திரைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

தமிழக முதல்வரைச் சந்தித்து திரைப்பட வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த இரட்டை வரிகளுக்கு எதிராகத் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தும், எந்தப் பலனும் இல்லாத காரணத்தால், போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 'இந்தப் போராட்டம் மேலும் தொடருமா?' என்பது குறித்து அபிராமி ராமநாதனிடம் கேட்டோம்.


''தமிழக அரசு, எங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வரை எத்தனை நாள்கள் ஆனாலும் இந்தக் காலவரையற்ற திரையரங்குகள் மூடல் தொடரும். இதனால் திரைத்துறைக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம். மாநில அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. எங்களின் போராட்டத்துக்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது. ரஜினி இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களின் ஆதரவும் உள்ளது. 
எங்களின் இழப்புகளிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதுகூட திரையரங்குகளை நாங்கள் மூடினோம். இயற்கை சீற்றங்களின்போதும், வர்தா புயலின்போதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இதிலிருந்து எல்லாம் நாங்கள் மீண்டு வந்த மாதிரி. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக இழப்பிலிருந்தும் மீண்டு வருவோம்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!