வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (07/07/2017)

கடைசி தொடர்பு:11:28 (08/07/2017)

'என்னை இயக்குநராக்க படம் தயாரித்தார் விஜய் சேதுபதி!' - லெனின் பாரதி நெகிழ்ச்சி பேட்டி

நடிகர் விஜய்சேதுபதி முதன்முறையாகத் தயாரிக்கும் திரைப்படம் 'மேற்குத் தொடர்ச்சி மலை'. அறிமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, தயாரிக்க விஜய்சேதுபதி எப்படி வந்தார். படத்துக்கான இசையில் இளையராஜா எப்படி கைகோத்தார் என்பதைத் தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் பேசினோம்.

Merku Thodarchi Malai


''என்னுடைய ஊர் தேனி மாவட்டத்தின் அடிவாரப் பகுதியில் இருக்கும் 'கோம்பை'.  நான் 11 வயது வரை அங்கேதான் இருந்தேன்... பிறகு, ஆறாவது படிக்கும்போது சென்னை வந்துவிட்டேன். சென்னை வந்தாலும் என் ஆழ்மனதில் தேனி மாவட்டத்தின் அடிவாரப் பகுதி, அதிலிருந்து மலை ஏறினால் வரும் மேற்குத் தொடர்ச்சி மலைதான் நினைவுகளாக இருந்தது. பெரியவனாக வளர்ந்த பின்பு, படம் எடுக்கலாம் என்று முடிவு எடுத்தபோது, நான் சிறு வயதில் பார்த்து, அனுபவித்த மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுக்கலாம் என்று இந்தக் கதையை எழுதினேன்.


தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைதான், தமிழகம்- கேரளாவின் எல்லைப் பகுதி. தேனி மாவட்டத்தின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதைதான் இந்தப் படம். இந்த மக்கள், தினம் அவர்களின் கூலி வேலைகளுக்காக மலையின் அடிவாரத்திலிருந்து, ஒன்றரை மணி நேரம் கால் கடுக்க நடந்து, மலையின் உச்சியை அடைவார்கள். அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்கள், அவர்கள் சந்திக்கும் அரசியல்தான் 'மேற்குத் தொடர்ச்சி மலை' . நாங்கள் படப்பிடிப்புக்காகத் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 'மலைப் பாதைகளைக் கடந்து செல்வதே சவாலான ஒரு விஷயமாக இருக்கும்'. கொஞ்சம் கடினமான பாதைகள். படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணன் லீட் ரோல் செய்திருக்காங்க. இதுதவிர, படத்தில் நடித்தவர்கள் 'மேற்குத் தொடர்ச்சி மலை'ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

Merku Thodarchi Malai


இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தயாரித்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம். 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் நான் இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். இந்தப் படங்களில் விஜய் சேதுபதி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போதிருந்தே எங்களுக்குள் அறிமுகம் இருந்தது. அதன் பிறகு, அவர் 'தென்மேற்கு பருவக்காற்று' , 'பீட்சா ' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த நேரத்தில் என்னிடம், 'சார்,  நீங்கள் ஒரு கதை வைச்சுயிருக்கீங்களா அந்தப் படத்தில் நான் ஹீரோவா நடிக்கவா'' என்று கேட்டார். நான், 'இல்லை சேதுபதி இந்த ஸ்க்ரிப்ட்டுக்கு  உங்கள் உடல்வாகு செட்டாகாது. அந்த கேரக்டரில் நடிக்கறவருக்கு எந்த ஒரு பிம்பமும் இருக்கக்கூடாது . 'நீங்கள் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவா நடித்துவிட்டீர்கள். அதனால் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன்.  அதன் பிறகு, ஒரு நாள் 'பண்ணையாரும் பத்மினியும்'  படத்தோட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி இருக்கும்போது 'இந்தப் படத்தின் ஒன் லைன் மட்டும் சொல்லி, குறைந்த பட்ஜெட்டில் படம் பண்ணக்கூடிய புரொடியூசர் இருந்தால் சொல்லுங்க'ன்னு சொன்னேன். விஜய் சேதுபதி, 'நானே புரொடியூஸ் பண்ணுறேன்' னு சொன்னார். ஆனா, 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கையில் காசு இல்லை, சீக்கிரம் பண்ணலான்னு சொன்னார். அதுவரைக்கும் நான் படத்தோட ப்ரீ புரொடக்‌ஷன் வேலைக்களுக்காக தேனியிலேயே இரண்டு வருடங்கள் தங்கி, படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன்.

Merku Thodarchi Malai


இந்தப் படத்தின் கதை, முழுப் படத்தையும் முடித்த பிறகும்கூட  தயாரித்திருக்கும் விஜய் சேதுபதிக்குத் தெரியாது. ஆனால், கதை எழுதி முடித்தவுடன், புரொடியூசர் எல்லாம் ஒப்பந்தம் ஆகுறத்துக்கு முன்னாடி படத்துக்கான கதையை இளையராஜா சாரிடம் சொன்னேன். ஏன்னா அவர் ஊர் வழியாகத்தான் மக்கள் மலை மீது ஏறி உச்சிக்குப் போவார்கள். அதுமட்டுமல்லாமல் இளையராஜா, அவரின் அப்பா எல்லோரும் அங்கயிருக்கும் ஏலக்காய் தோட்டத்தில் எல்லாம் வேலை பார்த்திருக்காங்க. அதனால், அவருக்குத் தெரிந்த மக்களின் கதை வேறு.  அவர் இசையமைத்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணினேன். 'நீங்கள்தான் படத்துக்கு மியூஸிக் பண்ணனும். குறைந்த பட்ஜெட்டில்தான் பண்ணப் போறேன், அதனால் குறைந்த சம்பளத்தில் பண்ண முடியுமா'னு கேட்டேன். அவர், 'டேய் அதெல்லாம் எதுவும் பிரச்னையில்லை, பண்ணுவோம்'  என்று சொன்னார். இப்படித்தான் அவரும் படத்துக்குள் வந்தார்.
இந்தப் படத்தை எடுத்து முடித்து, விஜய் சேதுபதியிடம் பார்க்கச் சொன்னேன். 'இல்ல சார், நீங்கள் இயக்குநர் ஆகணுன்னுதான் இந்தப் படம் பண்ணுனேன். நான் படத்தை தியேட்டரில் ஆடியன்ஸா பார்த்துக்குறேன்'னு சொல்லிட்டார். ஆனா, படம் பல விருதுகளுக்குப் போகும்போது, பலபேர் படம் பார்த்துவிட்டு விஜய்சேதுபதிகிட்ட நல்லாயிருக்கு, நீங்கள் பாருங்கன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் அவர் படம் பார்த்தார்’’ என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார் லெனின் பாரதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க