என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

டாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்!

சமஸ், இர.ப்ரீத்தி, க.நாகப்பன்

##~##

''கொஞ்சம் இலக்கியம் கலந்து கேளுங்கப்பா!''-கவிஞர் சல்மாவின் கோரிக்கை.

 ''சார், நான் படிப்புல ரொம்ப வீக். கிரிக்கெட், அரசியல் சம்பந்தமா கேளுங்க. விளாசித் தள்ளிடுவேன்!''-இது இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்.

''அய்யய்யோ... நான் ஒரு வாரமா பேப்பரே பார்க்கலையே!''- தங்கம் சீரியலில் தகதகக்கும் ஸ்ரீதேவியின் 'முன்னெச்சரிக்கை’ தற்காப்பு!

''மனம் நோகாம சிரிக்கவைக்குறது ஒரு கலை. அதை நல்லா செய்யுறீங்க. உங்க குறும்புல நானும் கலந்துக்கிறேன்!''- ஆர்வமாக முன்வந்தார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

''ரெண்டு மணி நேரம் கழிச்சுக் கூப்பிடுங்க. கொஞ்சம் வெப்சைட்ஸ், நியூஸ் பேப்பர் மேய்ஞ்சுட்டு வர்றேன்!'' என்று 'எக்ஸ்க்யூஸ்’ வாங்கி 'எக்ஸாமுக்கு’த் தயாரானார் ப்ரியாமணி.

டாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்!

அடுத்த ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ள நகரம் எது?

சரியான பதில்: லண்டன்

சல்மா: ''ஆங்... சைனா? அப்படித்தான் நெனைக்கிறேன்... சரியா?''

யுவராஜ்: ''இது அரசியலும் இல்லை... கிரிக்கெட்டும் இல்லை. சிக்கலா இருக்கே!''

ஸ்ரீதேவி: ''இப்போ சென்னையில் ஏதோ ஒரு ஃபைனல்ஸ் நடந்துச்சே... அப்போ அடுத்து மதுரையா? அய்யோ ப்ளீஸ்... எனக்குத் தெரியலை!''

ஞானசம்பந்தன்: ''பூனாவா... சீனாவா... ம்... அநேகமா ஏதாச்சும் வெளிநாடாகத்தான் இருக்கும். 'இந்தியாவில் இல்லை’னு போட்டுக்குங்க. பாதி மார்க்காவது விழட்டும்!''

ப்ரியாமணி: ''சீனாவா... இல்லல்ல. போன தடவைதான் அங்கே நடந்து முடிஞ்சது. ஐ திங்க் இட்ஸ் பிரிட்டன்!''

சமீபத்தில் இந்து மதத்தைத் தழுவிய நயன்தாராவின் கிறிஸ்துவப் பெயர் என்ன?

சரியான பதில்: டயானா மரியம் குரியன்.

சல்மா: ''அதெல்லாம் தெரியாதுங்க. நடிகைங்க பேரைத் தெரிஞ்சுவெச்சுக்கணும்னு என்ன அவசியம்?''

யுவராஜ்: ''அப்போ, நயன்தாராங்கிறது  கிறிஸ்டியன் பெயர் இல்லையா? தெரிய லையே சார் எனக்கு!''

ஸ்ரீதேவி: ''ஏதோ நல்ல பேர்... அய்யய்யோ... மறந்துடுச்சே!''

ஞானசம்பந்தன்: ''ம்... அவங்க கிறிஸ்துவப் பொண்ணு அப்படிங்கிறதே இப்பத்தான் தெரியுது எனக்கு. எந்த மதமா இருந்தா என்னங்க... நல்லா நடிச்சா, ரசிச்சுட்டுப் போவோமே!''  

ப்ரியாமணி: ''அட, ரெண்டு நாளைக்கு முன்னாடிகூடப் படிச்சேனே... டயானா கொரியன்?''

டாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்!

நடிகர் கார்த்திக் நடத்தும் கட்சியின் பெயர் என்ன?

சரியான பதில்: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி.

சல்மா: ''ஃபியூஸ் போன கட்சிகளைப் பத்திலாம் ஏன் கேக்குறீங்க? முழு மூச்சா கட்சி நடத்துற யாரைப்பத்தியாவது கேளுங்க. பதில் சொல்றேன்!''

யுவராஜ்: ''ஹா... ஹா... ஹா... உண்மையிலேயே தெரியும். ஆனா... ஆனா... என்னமோ நாடாளுமன்றம்னு வரும். முன்னாடி ஃபார்வர்டு பிளாக் கட்சியில இருந்தாரு. இப்போ அந்த நாடாளுமன்றத்துல தனி ஆளா உக்காந்து இருக்கார்!''

ஸ்ரீதேவி: ''பாஸ்..!''

ஞானசம்பந்தன்: ''அய்யய்யோ... சாண் ஏறினா முழம் சறுக்குதே... இது ரொம்ப சிரமமான கேள்வி. கார்த்திக் முன்னேற்றக் கழகமா?''

ப்ரியாமணி : ''அச்சச்சோ! எனக்கு பாலிடிக்ஸ்ல சுத்தமா இன்ட்ரெஸ்ட்டே கிடையாது. விட்ருங்க ப்ளீஸ்!''

'சரோஜா சாமான் நிக்காலோ’ - என்ன அர்த்தம்?

சரியான பதில்: 'சரோஜா சாமான்களை எடுத்துக்கிட்டு வா!’ ('முதல்வன்’ படத்தில் சேட் ஒருவர் சொல்வதுபோல வரும் வசனம்!)

சல்மா: ''ஹா... ஹ்... ஹா... இதெல்லாம் சத்தியமாத் தெரியாதுங்க. ஏதாவது தெரிஞ்ச மாதிரி ரெண்டு கேள்வியாவது கேட்கக் கூடாதா?''

யுவராஜ்: ''வெங்கட்பிரபு என் ஃப்ரெண்ட். வேணும்னா, வெங்கட் பிரபுகிட்ட கேட்டுச் சொல்லலாமா பாஸ்? கூடாதா... அப்ப பாஸ்!''

ஸ்ரீதேவி: '' 'சரோஜா சாமானைத் தூக்கிட்டுப் போ’னு அர்த்தம். பட், ஆக்சுவலா அது 'டபுள் மீனிங் டயலாக்’னு சொல்வாங்க. ஆனா, எனக்கு ஒரு மீனிங்தான் தெரியும்!''

ஞானசம்பந்தன்: ''இது சென்னையில வடக்கத்தி ஆளுங்க பேசுவாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். ம்... ஆமா, அதுவரைக்கும் தான் தெரியுது. ம்ம்ம்... ஒண்ணுமே தெரியலையே எனக்கு. நான் ஒரு தமிழ்ப் பேராசிரியன். கொஞ்சம் தமிழ்க் கேள்வியும் வெச்சுருந்தாத்தானே நானும் பாஸாக முடியும்? சங்க காலத்தைப்பற்றியோ, பெண்பால் புலவர்களைப் பற்றியோ, ஒரு கேள்வியாவது கேட்கக் கூடாதா? வழக்கமா தமிழ் சம்பந்தமா ஒரு கேள்வி கேட்பீங்களே... இந்த முறை இல்லையா ராஜா? என் கோரிக்கையை ஏற்று வினாத்தாளை மறுபரிசீலனை பண்ணுங்களேன்!''

ப்ரியாமணி: '' 'சென்னை 28’ படத்தில் ஒரு பாட்டு வருமே... ஆங்... 'வெளியில் எடுத்து வை’னு அர்த்தம்!''

டாக்டர் விஜய் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார். எதற்காக?

சரியான பதில்: தமிழக சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் விஜய், அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த செய்தி சமீபத்தில் பெரிய அளவில் நாளிதழ்களில் இடம் பிடித்தது!

சல்மா: ''எந்த விஜய்... நடிகர் விஜய்யா? அவர் இலங்கை அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துல கையெழுத்து போட மறுத்துட்டார்னு படிச்சேன். வேற என்ன... வேற யாரும் விஜய்னு டாக்டர் இருக்காங்களா என்ன?''

யுவராஜ்: ''தன் ரசிகர் மன்றம் சார்பா சேலத்துல ஏழை மக்களுக்கு நல்லது செஞ்சார் விஜய் அதானே!''

டாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்!

ஸ்ரீதேவி: ''ஏழை மக்களுக்கு இலவசக் கல்யாணம் பண்ணி வெச்சார் இளைய தளபதி!''

ஞானசம்பந்தன்: ''இதுதான் கடைசி கேள்வியா? நீங்க எந்த விஜய்னு வேற சரியா சொல்ல மாட்டேங்குறீங்க. எனக்கு நடிகர் விஜய் நெனைப்புக்கு வர்றார். ஆனா, உங்க கேள்வியிலேயே ஏதோ உள்குத்து இருக்குனு என்னால கணிக்க முடியுது. அவர் பேரை வெச்சு வேற யாரையோபத்திக் கேட்குறீங்க. என்ன பதில் சொல்றது? ஆங்... இப்படிப் போட்டுக்குங்க. அவர் ரொம்ப நல்லவர், அமைதியானவர், எல்லோருக்கும் இனியவர். யாராக இருந்தாலும் அந்த விஜய் வாழ்க!''

ப்ரியாமணி: ''இப்போ ஷங்கர் சார்கூட 'த்ரீ இடியட்ஸ்’ ரீ-மேக்ல நடிச்சுட்டு இருக்கார். அது மட்டும்தான் தெரியும்!''