'இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன்!' - பிக் பாஸிலிருந்து வெளியேறிய பரணி

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் நடிகர் பரணி. நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்புடன் அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களும் சச்சரவுகளும் நிகழ்ச்சிக்கான ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாகவே பார்க்கப்பட்டது. 'நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய என்னை, ஏராளமான மக்கள் விசாரித்தார்கள். நல்ல அனுபவத்தை பிக் பாஸ் கொடுத்தது' என நெகிழ்கிறார் பரணி. 

ஒவ்வொரு நாளும் பலவித டுவிஸ்ட்டுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. போட்டியில் பங்கேற்பவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், சச்சரவுகள் ஆகியவை பொதுமக்களிடையே விவாதத்தைத் தொடங்கியுள்ளன. நேற்று போட்டியில் பங்கேற்ற நடிகர் பரணி, வீட்டை விட்டு வெளியேறுவதற்காகச் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சிகள் அடங்கிய புரொமோவை வெளியிட்டனர்.

பரணி

இதனால், நேற்றைய நிகழ்ச்சி பரபரப்பைக் கூட்டியது. 'ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக நடக்கும் வியாபாரத் தந்திரம்' என்றெல்லாம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. இதுவரை போட்டியிலிருந்து நடிகை அனுயா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ஶ்ரீயும் உடல்நலக் குறைவு காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறினார். ஆனால், நடிகர் பரணியோ, 'பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு மிகவும் மன உளைச்சலைக் கொடுக்கிறது. இனி இந்த வீட்டில் இருக்க முடியாது' எனக் கருதித்தான் வீட்டை விட்டு வெளியேறினார் எனத் தகவல் பரவியது. 

பரணி

பரணியிடம் பேசினோம். "நான் இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன். சென்னையில் உள்ள என்னுடைய வீட்டில்தான் இருக்கிறேன். என்னைப் பார்க்காமல் என் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்தவுடன், சந்தோஷமாகத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் முருகனின் தீவிர பக்தன். இன்று காலையில் எழுந்தவுடன், குடும்பத்துடன் திருவாய முருகன் கோவிலுக்குச் சென்று வந்தேன். கோவிலுக்குப் போகும் வழியில், 'நல்லாயிருக்கீங்களா'ன்னு' ஏராளமான மக்கள் நலம் விசாரிச்சாங்க. அனைவரின் ஆசீர்வாதத்தாலும் நான் நன்றாக இருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 'நான் படப்பிடிப்புகளுக்குச் செல்லலாம். ஆனால், 'பிக் பாஸ்' பற்றி மட்டும் நூறு நாள்களுக்கு எதுவும் பேசக் கூடாது' எனக் கையெழுத்திட்டிருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. பாஸிட்டிவ் எனர்ஜி கிடைத்ததுபோல் இருக்கிறது" என்றார் நிதானமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!