வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (11/07/2017)

கடைசி தொடர்பு:19:54 (11/07/2017)

'சுவாதி கொலை வழக்கு' படத்தின் டைட்டில் மாறியது..!

தமிழ் நாட்டையே பரபரப்பாக்கிய சம்பவம் சென்ற ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதியின் கொலை. இது சம்பந்தமாக ராம் குமார் என்பவரும் கைதானார். இதையடுத்து, ராம் குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை கூறியது. பின்னர் அந்த விவகாரம் சூடு பிடித்து கொஞ்ச நாள்களிலேயே அடங்கிவிட்டது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் 'சுவாதி கொலை வழக்கு' என்ற டைட்டிலை வைத்து அப்படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டார். இந்தப் படத்தில் அஜ்மல் புலனாய்வு செய்யும் காவலராக நடித்துள்ளார். அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வந்தது.

சுவாதி கொலை வழக்கு

இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியானதை அடுத்து சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், ''என் அனுமதி இல்லாமல் எப்படிப் படம் எடுக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்தால் எங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் மன ரீதியாகப் பாதிக்கப்படுவோம். இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்தார். 'சுவாதி கொலை வழக்கு' திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் மீது, மூன்று பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. 

நுங்கம்பாக்கம்

இந்நிலையில் படத்தின் 'சுவாதியின் கொலை வழக்கு' எனும் டைட்டிலை 'நுங்கம்பாக்கம்' என்று மாற்றியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.