’’இது கோலி சோடா படத்தின் சீக்வல் கிடையாது..!’’ - விஜய்மில்டன் #GoliSoda2 | ' This is not the sequel of Goli soda ..! '' - Goli Soda2 with Vijay Milton

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (11/07/2017)

கடைசி தொடர்பு:22:04 (11/07/2017)

’’இது கோலி சோடா படத்தின் சீக்வல் கிடையாது..!’’ - விஜய்மில்டன் #GoliSoda2

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் `கோலி சோடா'. `பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஶ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோருடன் சுஜாதா, இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார் இயக்குநர் `பசங்க' பாண்டிராஜ். 2006 -ல் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தை இயக்கிவிட்டு, கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, தனது இரண்டாவது படமான `கோலிசோடா'வை இயக்கினார் விஜய்மில்டன். அது கொடுத்த வெற்றியின் ஊக்கத்தில், விக்ரம், சமந்தா ஆகியோர் நடிக்க `பத்து எண்றதுக்குள்ள' படத்தை இயக்கினார். அது மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போக, பரத் மற்றும் ராஜகுமாரன் நடிக்க `கடுகு' திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு`கோலி சோடா 2 ' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது `கோலி சோடா' படத்தின் சீக்வலா  என்பது தெரியவில்லை.

Goli soda

இதுபற்றி விஜய்மில்டனிடம் பேசியபோது, ''கோலி சோடா 2 படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில்தான் இருக்கிறேன். இந்தப் படம் 'கோலி சோடா' படத்தின் தொடர்ச்சியா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை. அதே பசங்க. அதே ஸ்க்ரிப்ட் என எதுவும் 'கோலி சோடா 2' படத்தில் இல்லை. ஆனால், எமோஷனலாக மட்டும் ஒன்றாக இருக்கும். 'கோலி சோடா' படத்தில் எப்படி அந்தப் பசங்க தங்களது அடையாளத்தைத் தேடினார்களோ, அதே மாதிரி இதிலும் மூன்று இளைஞர்கள் தங்களது அடையாளத்தைத் தேடுவார்கள். அதில் இடையூறாக வரும் வில்லன்களை அவர்கள்  எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் ஒரு பையன் கூடைப்பந்து விளையாட்டு வீரனாக வருகிறார். அவர் உண்மையாகவே கூடைப்பந்து விளையாட்டு வீரர். மேலும் இருவர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் '' என்று கூறி ஷாட்டுக்கு நேரமாச்சு என்று கிளம்பினார் விஜய் மில்டன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க