'நீதி நிலைக்க வேண்டும்!' - திலீப் கைதை வரவேற்ற வரலட்சுமி

கேரளாவில், மலையாள நடிகை ஒருவரை ஆள்வைத்துக் கடத்தி, பாலியல் துன்புறுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டுள்ளார். திலீப் கைது நடவடிக்கை, கேரளத் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி பெண்களின் பாதுகாப்புக்காக 'சேவ் சக்தி' அமைப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி, நீதி வெல்லும் என்று கூறியுள்ளார்.

 சமூகத்தில்  எத்தகைய பெரிய ஆளாக இருந்தாலும், குற்றம் செய்துவிட்டால் நீதியின் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு உதாரணமாக, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த  திலீப் கைது நடவடிக்கை சான்றாகிவிட்டது. பிரபல நடிகையைப் படப்பிடிப்பு முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில், ரவுடிகளைவைத்து கடத்தியிருக்கும் திலீப்பின் இந்தச் செயல், சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வரலட்சுமி


மேலும்,கேரளாவில் திலீப்புக்குச் சொந்தமான தியேட்டர் மற்றும் ஹோட்டல்கள்மீது கற்களை வீசித் தாக்கியும் வருகின்றனர். திலீப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டும், அதே நேரத்தில் திலீப்பை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் கேரளாவைச் சேர்ந்த அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நடிகை என்பதால்தான் இந்தப் பிரச்னையில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டார்களா..?  இந்த நிகழ்வை நடிகை பெண்களின் நலனுக்காக ' சேவ் சக்தி' அமைப்பை ஆரம்பித்திருக்கும் வரலட்சுமி, எப்படிப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ள அவரிடம் பேசினோம். 

''இந்த விவகாரத்தில் உண்மையாகவே நடிகர் திலீப் தவறு செய்திருந்தால், கண்டிப்பாக அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஒரு நடிகை என்பதால்தான் இதில் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று சிலர் பேசுகிறார்கள். இந்தச் சம்பவம் , ஒரு சாதாரண குடிமகளுக்கு நடந்திருந்தாலும். காவல் துறையினர் கண்டிப்பாக துரித நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நீதியின் முன் அனைவரும் சமம். நீதி அனைவருக்கும் சமம்தான். நீதி நிலைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்று கூறினார் வரலட்சுமி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!