'கமல்ஹாசனுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் சின்மயி வெளியிடவில்லை..!' - கொதிக்கும் சின்மயி அம்மா

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக, சில அமைப்புகள் தொடர்ந்து குரல்கொடுத்துவருகின்றன. சமீபத்தில், தமிழக அரசியல் சூழலையும் விமர்சனம்செய்திருந்தார் கமல். இதற்கு எதிராக, தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். 'கமலுக்கு ஆதரவாக என்னுடைய மகள் சின்மயி அறிக்கை வெளியிட்டதாகச் செய்தி வெளியாகிவிட்டது. உண்மையில் அப்படி எந்தக் கருத்தையும் சின்மயி தெரிவிக்கவில்லை' என்கிறார், சின்மயியின் தாயார். 

சின்மயி தாயார்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக, நேற்று சின்மயி பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், 'நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கருத்து தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும் பணத்துக்காக எதையும் செய்வார் என்றும் குறை கூறியுள்ளார். கமல்ஹாசன் நடத்திவரும் தொலைக்காட்சித் தொடர், மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையிலும் வரலாறு படைத்துவருகிறது. அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இது எப்படிக் கலாசார சீரழிவாகும். 40 வருடங்களுக்கு முன்பு கிராமப்புற கோயில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் தெருக்கூத்துகளும் நடந்தன. ஆனால், இப்போது கோயில் விழாக்களுக்குச் சென்று பாருங்கள். ரிக்கார்டு நடனங்களையும் வீடியோ படங்களையும்தான் பார்க்க முடியும். இது கலாசார முன்னேற்றமா, கலாசார பாதுகாப்பு என்று பேசுவதாக இருந்தால், கடற்கரையைச் சுத்தப்படுத்துங்கள். அங்கு சாமானியர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் சென்று நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்குக் கண்கூசும் காட்சிகளைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். அவரை நீங்கள் மூன்றாம் தர நடிகர் என்று ஒருமையில் கூறுகிறீர்கள். உங்கள் அமைச்சர் பதவியின் கண்ணியம் ஒப்பிட முடியாதது. பிரபலமாக இருப்பவரைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது சந்தர்ப்பவசமானது. ரஜினிகாந்த்தும் 'அமைப்புகள் ஊழல்மயமாகிவிட்டது' என்று கூறி இருக்கிறார். அவருக்கு ரசிகர் பலம் உள்ளது. மத்திய அரசும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான் அவரைப் பற்றி நீங்கள் பேசவில்லை. கலைஞர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான். கருத்துக் கூறும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

இதுகுறித்து விளக்கம் கேட்க பின்னணிப் பாடகி சின்மயியைத் தொடர்புகொண்டோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவருடைய தாயார் பத்மஹாசினி, ''நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் சின்மயி வெளியிடவில்லை. அந்தப் பதிவு என்னுடையது. என்னுடைய பார்வையில், இந்த விவகாரம்குறித்து நான் வெளியிட்ட பதிவு அது. என்னுடைய சமூக வலைதளத்தின் கணக்கில் இருந்துதான் அதையும் பதிவுசெய்திருந்தேன். ஆனால், அதை சின்மயி பதிவு செய்தாகச் சில ஊடகங்களில் செய்திவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறு. இந்தப் பதிவுக்கும் சின்மயிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!