Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெனிஃபர் லோபஸ் - இசை உலகின் பிக் பாஸ்..! #HappyBirthdayJLO

'எவ்வளவுக்கு எவ்வளவு பேரும் புகழும் இருக்கின்றதோ அவ்வளவு சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் உடைத்தெறிந்து சமூகத்தில் நம் திறமையை வெளிப்படுத்துபவரால்தான் வெற்றியைத் தொட முடியும்' என்பதற்கு ஜெனிஃபர் லோபஸ் ஒரு மிகப் பெரிய உதாரணம். போர்ப்ஸ் பத்திரிகை வெளியீட்டின் படி ஹாலிவுட்டின் லத்தீன்-அமெரிக்க தலைமுறையினரில் லோபஸ் அதிக செல்வாக்கு பெற்றவர். மேலும், 'People en Espanol' என்ற பிரெஞ்சுப் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்களுள் ஒருவராக லோபஸ் இடம்பிடித்துள்ளார். 'ஜெ.லோ' என செல்லப் பெயரால் பெரும்பாலும் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடன கலைஞர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

ஜெனிஃபர் லோபஸ்

டேவிட் லோபஸ் - கவுட்லுக் ரோடிரிகியூஸ் தம்பதியினருக்கு 1969-ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். தனது 19 வயதிலிருந்தே பாடுவதிலும் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் அவர், அவற்றை முழுமையாகக் கற்றுக்கொள்வதிலும் அதிக நேரத்தை செலவிட்டார். கல்லூரி வாழக்கையில் அடியெடுத்து வைத்தவுடன் நடன வகுப்புகளுக்குச் செல்வதோடு, பார்ட் டைமாக சில வேலைகளும் பார்த்தார். அப்படியான பார்ட் டைம் வேலைகளில் ஒன்றுதான் இரவு கிளப்களில் நடனம் ஆடுவது. மேன்ஹட்டன் நகரத்தில் உள்ள ஒரு சிறு கிளப்பில் லோபஸ் தனது முதல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். 1987-ஆம் ஆண்டு வெளிவந்த 'மை லிட்டில் கேர்ள்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு இசை ஆல்பங்களில் இவரது பங்கேற்புகள் அதிகமாகி வர இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் பெருகியது. 1990-ஆம் ஆண்டு 'In Living Colour" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக பங்கேற்றார். இதன் மூலம் இவருக்கு 'That's the way love goes' என்ற இசை ஆல்பத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மற்றும் 1995-ஆம் ஆண்டில் 'மை பேமிலி' என்ற திரைப்படத்தில் மரியா கதாபாத்திரத்தில் தோன்றினார். 1997-ஆம் ஆண்டு இவர் நடித்த 'செலினா' திரைப்படத்தின் மூலம் மக்களிடையே அதிக செல்வாக்கையும் புகழையும் பெற்றார். மேலும் இவர் 1998-ஆம் ஆண்டு எல்மோர் லியோனார்டின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ரவுண்ட் ஆஃப் சைட்' திரைப்படத்தில் நடித்தது பரவலாகப் பேசப்பட்டது. இதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். 2002 முதல் 2004 வரை ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக  இருந்து வந்தார். 

ஜெனிஃபர் லோபஸ்

இப்படி புகழின் உச்சம் ஒருபுறம் இருக்க லோபஸுக்கு 1997-ஆம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான 'ஒஜானி நோவா'வுடன் முதல் திருமணம் நடந்தது. மியாமி உணவு விடுதியில் பார்ட் டைம் பணியாளராக இருந்தபோது லோபஸ், நோவாவை சந்தித்தார். இவர்களின் 'கண்டவுடன் காதல்' திருமணத்தில் முடிந்தது. அடுத்த வருடம் 1998-லேயே இருவருக்கும் விவாகரத்தும் ஆனது. பின் 2001-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகர் க்ரிஸ் ஜூட் என்பவருடன் திருமணம் நடந்து. பின் 2003 ஆம் ஆண்டு லோபஸின் இரண்டாவது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இறுதியில் லோபஸின் இசைத் தொகுப்பை வெளியிடுவதற்கு உதவியாக இருந்த பிரபல பாடகர் மற்றும் நடிகருமான மார்க் ஆண்டனியை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆண்டனிக்கு இது இரண்டாவது திருமணம், லோபஸுக்கு இது முன்றாவது திருமணம். திருமணத்தின் போது  ஆண்டனிக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. மேலும், லோபஸுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன. எனவே ஆறு குழந்தைகளும் லோபஸிடம்தான் வளர்ந்தன. அந்த நேரத்தில், 'தான் ஏஞ்சலினா ஜோலியைப் போல் உணருகிறேன்' என்று ஒரு நிகழ்ச்சியில் கூறினார் லோபஸ். காரணம் ஏஞ்சலினாவுக்கும்-பிராட் பிட்டுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. தவிர அவர்கள் இன்னும் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ஆகமொத்தம் இவர்கள் இருவரும் ஆறு குழந்தைகளை வளர்த்து வருவதனால், லோபஸ், ஏஞ்சலினாவைப் போல் உணர்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஜெனிஃபர் லோபஸ்

அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற 'லடினோ டிஸ்கோ' இசை நிகழ்ச்சியில் தோல் நிற ஆடை அணிந்து அனைவரையும் கவர்ந்தார் லோபஸ்.  

ஜெனிஃபர் லோபஸ்

கவர்ச்சி, நடனம், நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாமல், சமூகப் பங்களிப்பிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வரும் லோபஸ், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர’ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக  தனது பெரும் செல்வத்தை உதவித்தொகையாக வழங்கினார். 2009ஆம் ஆண்டு தனது தங்கை லிண்டாவுடன் சேர்ந்து 'லோபஸ் பேமிலி பவுண்டஷன்' என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் இருவரும் சமூக சேவை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழைந்தைகள் நலத்திட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 2015-ல் நடந்த முகாம் ஒன்றில் குழந்தைகளின் மருத்துவ அக்கறை குறித்து, 'Put Your Money Where the Miracles are' என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. காரணம் "எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோமோ, அதில் ஒரு பாதியைக் கூட சமூகத்திற்காக செலவழிக்காமல் வாழ்வது பயனற்றது" என்று கூறினார். மேலும் LGBT- மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு இவருக்கு 'அல் ஃபார் ஈகுவாலிட்டி விருது' அமெரிக்க மனித உரிமைக்கு கழகத்திடம் இருந்து வழங்கப்பட்டது. 

இவரது 'J to tha lo' ஆல்பம் அமெரிக்காவின் சிறந்த ஆல்பமாக கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் லோபஸின் 'ஆன் தி ஃபிளோர்' என்ற சிங்கிள் பாடல் இதுவரை அதிகம் விற்கப்பட்ட ஆல்பங்கள் பட்டியலில் இடம்பெற்று கின்னஸ் சாதனை படைத்தது. தவிர, இவர் வேர்ல்ட் மியூசிக் அவார்ட், பில் போர்ட் ஐகான் அவார்ட், டெலிமுண்டோ ஸ்டார் அவார்ட் போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரர். இன்று வரைக்கும் 24 படங்களிலும், 11 ஆல்பங்களிலும், 63 சிங்கிள் ட்ராக் பாடல்களிலும் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு 'வேர்ல்ட் ஆஃப் டான்ஸ்' டிவி நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி, அதன் மூலம் இளம் நடனக் கலைஞர்களை திரைக்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல் 2018 ஆம் ஆண்டிலும் 'பை பை பேர்டி' என்ற டிவி இசை நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார். இப்படி இயல், இசை, நாடகம் மூன்றிற்கும் 1986 முதல் தற்போது வரை தனது பங்களிப்பை ஆற்றி வரும் ஜெனிஃபர் லோபஸின் 48 வது பிறந்த தினம் இன்று. 

#HappyBirthdayJLO

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close