''பெண்களுக்கான சூப் பாடல்கள் என் படத்தில் இருக்கு..!'' - 'மகளிர் மட்டும்' மகிழ்ச்சியில் பிரம்மா

'குற்றம் கடிதல்' படத்துக்குப் பிறகு, 'மகளிர் மட்டும்' படத்தை இயக்கியிருக்கிறார் பிரம்மா. ' படத்துக்காக கமல் சாரிடம் பேசி டைட்டிலை வாங்கிக் கொடுத்தார் சூர்யா. என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த பெண்ணின் பாதிப்புதான் இந்தப் படம்' என்கிறார் பிரம்மா. 

magalir mattum

"வணிக ரீதியிலான படம் என்பது சரியான முதலீட்டை வைத்துக் கொண்டு, அந்த முதலீடுக்கு மேல் லாபம் கொடுத்தால், அது கமர்ஷியல் படம். அந்த வகையில், குற்றம் கடிதல் படம் பொருளாதாரரீதியாக வெற்றி பெற்றது. சென்னையில் மட்டும் ஐந்து வாரங்களுக்கு மேல் இந்தப் படம் ஓடியது. ஏராளமான விருதுகளையும் வென்றோம். குற்றம் கடிதலுக்குப் பிறகு, அனைவரும் கொண்டாடக் கூடிய படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில், நடிகர் சூர்யா மற்றும் 2டி கம்பெனி ராஜசேகர் ஆகிய இருவரும் என்னிடம் ஸ்கிரிப்ட் கேட்டனர். உடனே, மூன்று ஸ்கிரிப்ட்களுடன் அவர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு 'மகளிர் மட்டும்' ஸ்க்ரிப்ட் சொன்னேன். சூர்யா சாருக்கு இந்தக் கதை பிடித்துவிட்டது. அதன்பிறகு, ஜோதிகாவிடமும் கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துவிட்டது. அப்படித்தான் இந்தப் படத்தில் ஜோதிகா வந்தார்" என விவரித்த இயக்குநர் பிரம்மா, தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

"இதில் நடித்துள்ளவர்கள் அனைவரும் சீனியர்கள்தான். இருப்பினும், படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் அனைவருமே ஜாலியாக இருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகலப்புதான். இந்தப் படத்தில் வரும் பெண்கள் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். இந்தப் படத்தில் வரும் 'அடி வாடி திமிரா' பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இன்றைய சூழ்நிலையில் பெண்கள் பல்வேறு நிலைகளில் தயக்கமாகத்தான் இருக்கிறார்கள். 'குடும்ப காரணத்துக்காகவோ அலுவலகக் காரணத்துக்காகவோ தயக்கத்தை கூடவே வைத்திருக்கின்றனர். இந்தப் பாடலில் அதை உடைக்கும்விதமாக முதல் இரண்டு வரிகள் இருக்க வேண்டும்' என்று கவிஞர் உமாதேவியிடம் சொன்னேன். அவர் அழகாக வரிகள் கொடுத்தார். இந்தப் பாடல்தான் டைட்டில் பாடலாகவும் இருக்கும். இந்தப் பாடலை கவிஞர் தாமரை, உமாதேவி, விவேக் என  மூன்று பாடலாசிரியர்களும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். 

magalir mattum

அதன்பிறகு காந்தாரி, பாஞ்சாலி, சீதை, கண்ணகி ஆகிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் வரிகளை கவிஞர் தாமரையிடம் கேட்டு வாங்கினோம். பெண்கள் பற்றிய கொண்டாட்ட பாடலாக இது இருக்கும். ஆண்களின் உணர்வுகளைச் சொல்லும் எத்தனையோ சூப் பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு அப்படி எந்த விதமான சூப் பாடல்களும் இல்லை.  இந்தப் படத்தில் பெண்களுக்கு அந்தவகையில் மூன்று பாடல்கள் இருக்கும். இவற்றுக்கு மிக அழகான இசையைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான். மகளிர் மட்டும் என்ற தலைப்புக்குப் பதிலாக, வேறு டைட்டிலைத் தேடினேன், கிடைக்கவில்லை. சூர்யா சாரிடம் கதை சொல்லும்போது இந்தப் பெயரே நன்றாக இருக்கிறது எனக் கூறி, கமல் சாரிடம் பேசி இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்துவிட்டார். நான் வாழ்க்கையில் பார்த்த பெண்ணின் பாதிப்பு இந்தப் படத்தில் இருக்கும். அந்தப் பெண்ணின் பெயரைக்கூட படத்தில் பயன்படுத்தியிருப்பேன். ஆனால், அது யார் என்று இப்போ சொல்ல மாட்டேன். ஏனென்றால், அந்தப் பெண்ணுக்கே இந்த விஷயம் தெரியாது" என சஸ்பென்ஸுடன் பேசி முடித்தார் பிரம்மா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!