வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (26/07/2017)

கடைசி தொடர்பு:17:47 (26/07/2017)

பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கலாமா? ஓர் அலசல் #BiggBossTamil

பிக் பாஸ்

இருவர் சந்தித்துக்கொண்டால், அவர்களின் பேச்சில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகள் நிச்சயம் இருக்கும் என்று கருதும்படி ஆகிவிட்டது. பல வீடுகளில் குடும்பத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர். அதில் குழந்தைகளும் அடங்குவர்.  இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கி பத்து, பத்தரை வரை நீளும் இந்நிகழ்ச்சியை ஒரு நாள் கூடத் தவறாமல் பல குழந்தைகள் பார்க்கின்றனர். குழந்தைகளின் உரையாடலிலும் இந்நிகழ்ச்சி கலந்துவிட்டது. இந்தப் போக்கு சரிதானா என்று சிலரிடம் கேட்டோம். 

சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் எழுத்தாளர் விழியன்: குழந்தைகள் தாங்கள் கேட்கும், படிக்கும் விஷயங்களை, படங்களாக மாற்றித் தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள். அடுத்த முறை அந்த விஷயத்தைக் கேட்கும்போது மனதிலுள்ள படங்களையே நினைவுப்படுத்திக்கொள்வார்கள். அதனால்தான் குழந்தைகளைக் காட்சி ஊடகம் அவ்வளவு வசீகரிக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பும் குழந்தைகளை அனுமதிக்கலாம். (மறுக்கப்படும் ஒன்றின்மீது அதிக ஆர்வம் ஏற்படும்) ஆனால், தனியாக அல்லாமல் பெற்றோருடன் இணைந்து அவர்கள் பார்க்கும் சூழல் இருக்க வேண்டும். நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையைப் பெற்றோர் பயன்படுத்திக்கொண்டு சிலவற்றைப் பேச வேண்டும். யார் உன்னைப் பார்க்கிறார்களோ இல்லையோ நேர்மையாக இரு. எதிர்கருத்துகளுடன் ஒருவருடன் பழக நேர்தாலும் அவரிடம் அன்புக் காட்ட மறக்காதே. மற்றவரைப் பற்றிப் புறம் பேசினால், அது சம்பந்தப்பட்டவருக்குத் தெரியவரும்போது ரொம்பவே வருத்தப்படுவார். மற்றவர்கள் மீது வன்மம் காட்ட வேண்டாம். இதுபோன்ற விஷயங்களை இந்த நிகழ்ச்சியின் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளைக் கொண்டே கூறலாம். இது அறிவுரையாக இல்லாமல் உரையாடலின் ஓர் அங்கமாக இருப்பது நல்லது.  

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து தினமும் சமூக வலைதளத்தில் தன் கருத்துகளைப் பகிர்ந்துவரும் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்: "என்னைக் கேட்டால் இந்த நிகழ்ச்சியைக் குழந்தைகள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்வேன். ஏனென்றால், இது பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி. அதனால், அதன் தன்மையில்தான் இருக்கும். அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் குழந்தைகள் தடுமாறக்கூடும். நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் புரணிதான் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் குழந்தைகளும் புரணி பேசுவது சாதாரணமான ஒன்றுதான் என்ற முடிவுக்கு வரலாம் இவையெல்லாம் என் கருத்து. ஆனால் நிஜத்தில் பல வீடுகளில் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறார்கள். என் நண்பரின் மகன் எந்தவொரு விஷயத்துக்கும் சட்டென்று அழுதுவிடுவான். அவனுக்கு 'பிக் பாஸ்' ஓவியாவைப் பிடிக்கும். அதனால் என் நண்பர் என்ன செய்கிறார் என்றால், அவன் அழும்போதெல்லாம் உனக்குப் பிடித்த ஓவியா இப்படியெல்லாம் அழுவதில்லையே. அவன் அந்த நேரத்தில் அழுவதை நிறுத்தி விடுகிறான். 'ஏதேனும் பிரச்னையென்றால் ஓவியாவைப் போலப் பேசித் தீர்க்க வேண்டும்' என்று தன் மகனிடம் கூறுகிறார் நண்பர். அவனும் அதை ஏற்றுக்கொள்கிறான். இது சரிதானா... நல்ல விஷயங்கள் சொல்ல வேறு வழிகளே இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், இந்த நல்ல மாற்றம் இப்படிக் கிடைத்தால் அதை ஏற்பதில் என்ன தவறு. உங்கள் வீட்டில் பிக் பாஸ் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றால் அதிலிருந்து நல்ல விஷயங்களைப் பெற பெற்றோர் உதவ வேண்டும். 


ஓவியா

ஆசிரியரும் சிறுவர் நலன் சார்ந்த செயல்பாடுகளின் தன்னை ஈடுபடுத்திவரும் சுடரொளி: வீட்டுக்குள் வந்துவிட்ட நிகழ்ச்சி ஒன்றைக் குழந்தைகளைப் பார்க்க விடாமல் செய்ய முடியாது. ஏனெனில் பெற்றோர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அந்த நேரத்தில் குழந்தைகளும் பார்க்கத்தானே செய்வார்கள். அந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை, வேறு கோணத்தில் கூற வேண்டும்.  ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் அவர்களின் பெர்சனல் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறார்கள். அவர்களின் அனுமதியுடனே என்றாலும் இதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு அது புரியாது. அதனால், அடுத்தவர்களின் பெர்சனல் விஷயங்களில் நாம் விதித்துகொண்டிருக்கும் எல்லைக் கோட்டை குழந்தைகள் கடப்பதற்குத் துணிவார்கள். அது அவர்களை அறியாமலேகூட நடக்கலாம். ஒட்டுக்கேட்பது, புரணி பேசுவது எல்லாம் இயல்புதானோ என்று கருதக்கூடும். வெற்றி ஒன்றை நோக்கிச் செல்ல ஏமாற்றம், வஞ்சகம் உள்ளிட்டவற்றைச் செய்வது தவறில்லை என்பதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, அடுத்தவரின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளும் விருப்பம் ஏற்படக்கூடும். இந்த விஷயங்களிலிருந்து அவர்களை விடுபட சரியான விளக்கங்களைத் தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. இது ஒரு நிகழ்ச்சிதான். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதை அடிக்கடி கூற வேண்டியதும் அவசியம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் குழந்தைகள் பார்க்க அனுமதிக்கும்போது பெற்றோர் சற்று கவனத்துடன் இருக்கவும், சரியாக வழிகாட்டவும் வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்