''ஹாலிவுட் படத்தில் நடித்த ஃபீலை துப்பறிவாளன் கொடுத்திருக்கு..!'' - கே.பாக்யராஜ்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'துப்பறிவாளன்.' விஷால் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அண்மையில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ஹிட் அடித்தது. 

bhakiyaraj

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' மற்றும் தமிழில் வெளிவந்த 'துப்பறியும் சாம்பு' போன்ற ஒரு கதையாக இது இருக்கும் என்றும்,  இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு,  இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கெனவே வந்தன. அதுபற்றி கே.பாக்யராஜிடம் பேசினோம்.

''கன்னிப்பருவத்திலே, விடியும் வரை காத்திரு­ படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் என் கதாபாத்திரம் ஸ்டைலிஷான வில்லனாக இருக்கும். படத்தில் நான் செய்யும் கொலைகளைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகயிருக்கும். அறிவியல் விஞ்ஞானியாக ஆக வேண்டுமென்று நினைக்கக் கூடிய ஒருவர், விஞ்ஞானியாக ஆக முடியாமல் போகிறது. இதையொற்றி நடக்கும் சம்பவங்கள்தான் படம். இந்தப் படத்தில் விஷால், வினய், பிரசன்னா எல்லோர் கூடவும் சீக்வென்ஸ் இருக்கும். ஆனால், சிம்ரன் கூட மட்டும் எனக்கான காட்சிகள் இல்லை. 

மிஷ்கின் கதை சொன்னபோதே நெகட்டிவ் கேரக்டர் என்று சொன்னார். வீட்டில் டிஸ்கஷ் பண்ணினேன். ’எல்லோரும் கதை வித்தியாசமாக இருக்கு, பண்ணுங்க’ என்றனர். நானும் உடனே ஓகே சொல்லிட்டேன். படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும். ஆனால், எனக்காக ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. ஷேஸ்சிங் காட்சிகள் மட்டும்தான் எனக்கு இருந்தது. வழக்கமான கதையாக இந்தப் படம் இருக்காது. 

இந்தப் படத்தில் எனக்குப் பெயர் கிடையாது. எல்லோரும் 'அங்கிள்' என்றுதான் கூப்பிடுவார்கள். இந்தப் படத்தின் திரைக்கதை ஹாலிவுட் ஃபீல் கொடுக்கும். எனக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்ததுபோல்தான் இருந்தது'' என்றார் கே.பாக்யராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!