டி சினிமாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு..! நடிகர் திலீப் குமாருக்கு மேலும் ஒரு சிக்கல் | HC ordered to investigate D cinemas case: Dileep Kumar trapped one more intricacy

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (29/07/2017)

கடைசி தொடர்பு:19:31 (29/07/2017)

டி சினிமாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு..! நடிகர் திலீப் குமாருக்கு மேலும் ஒரு சிக்கல்

மலையாள நடிகர் திலீப்குமார் தொடர்பான நில அபகரிப்பு வழக்கில், உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

dileep kumar


கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் டி சினிமாஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இது, நடிகர் திலீப் குமாருக்கு சொந்தமானது. இந்த வணிக வளாகம், கருமலூர் மாவட்டத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அபகரித்து கட்டப்பட்டுள்ளது என்று அந்தப் பகுதி பஞ்சாயத்துத் தலைவர் குற்றம் சாட்டினார். அதனையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள், வணிக வளாகம் கட்டியதில் நிலம் ஏதும் அபகரிக்கப்படவில்லை என்று அறிக்கை தாக்கல்செய்தனர்.

இந்த நிலையில், திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 'திலீப் குமாருக்கு சொந்தமான டி சினிமாஸ், கிருஷ்ணா கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நில வருவாய் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அந்த அறிக்கையை செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், 'நில அபகரிப்புப் புகார் நிரூபிக்கப்பட்டால், நிலம் பறிமுதல்செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திலீப்குமார் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். அவருக்கு, இப்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.