'ஜிகர்தண்டா படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' - நடிகர் பாபி சிம்ஹா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவுக்கு 'ஜிகர்தண்டா' திரைப்படம் வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் நடித்திருந்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

பாபி சிம்ஹா

'அசால்ட் சேதுவாக' பாபி சிம்ஹா நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது. இந்தப் படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. மூன்று வருடங்கள் கடந்த நிலையில் 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்த அனுபவம் பற்றி பாபி சிம்ஹாவிடம் பேசினோம்.

''ஜிகர்தண்டா படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. மக்களின் பார்வை முழுவதையும் இந்தப் படம் என்மீது பார்க்க வைத்தது. மூன்று படங்களில் நடித்த ஒரு ஹிட்டை இந்த ஒரு படம் எனக்குக் கொடுத்தது. தேசிய விருது, மாநில விருது எல்லாம் இந்தப் படத்தில் நடித்ததற்காக எனக்குக் கிடைத்தன. 

''அசால்ட் சேது' கதாபாத்திரத்துக்கு டெஸ்ட் நடந்தது. அதை நினைக்கும்போது இப்போதுகூட சிலிர்ப்பாக உள்ளது. இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும்போது என் கதாபாத்திரத்துக்கு விஜய்சேதுபதியை நடிக்க வைக்கும் ஒரு எண்ணத்தில்தான் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார். அப்போது, அந்த ஸ்க்ரிப்ட்டை நான் படித்துவிட்டு, அசால்ட் சேது கேரக்டர் நான் பண்ணுகிறேன் என்றேன். அப்போது அதற்கான எந்த அனுபவம் மற்றும் அந்தக் கேரக்டருக்கான வயதும் என்னிடம் இல்லை. கார்த்திக் என்னிடம், 'இல்லைடா உனக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது. விஜய்சேதுபதி பண்ணட்டும்' என்று சொன்னார். நாம் ஒரு பொருளை உண்மையாகவே நேசித்தால் அந்தப் பொருள் நமக்கு வந்து சேரும்னு இருக்குல. அதனால்தான் என்னிடமே 'அசால்ட் சேது' வந்துவிட்டது. நிறைய சாய்ஸ் இருந்தது 'அசால்ட் சேது' கதாபாத்திரம் செய்வதற்கு, நான் தினமும் கார்த்திக் சுப்புராஜை தொல்லை செய்வேன். இந்தப் படத்துக்காக வெயிட் குறைத்தும் இருந்தேன், அதன்பிறகு நல்ல வெயிட்டும் போட்டேன். இந்தப் படத்துக்காக எனக்கு விருது எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்தப் படம் 'தளபதி',  'நாயகன்' படம் மாதிரி நல்ல பெயர் வாங்கும் என்ற நம்பிக்கை என்னிடம் அதிகமாகவே இருந்தது'' என்கிறார் இந்த அசால்ட் சேது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!