சசிகுமார், விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் தயாரிப்பாளர்!

’மருது’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் முத்தையா எடுக்கும் திரைப்படம், 'கொடிவீரன்'. சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், இவருக்கு ஜோடியாக மஹிமா நடிக்கிறார். சசிகுமாரின் தங்கை கேரக்டரில் சனுஷா நடிக்கிறார். பூர்ணிமா மற்றும் வித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், தயாரிப்பாளர் இந்திர குமார் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய்யின் ’குற்றம் 23’ மற்றும் 'தடம்' படங்களுக்கு இவர்தான் தயாரிப்பாளர். 

indera kumar



தயாரிப்பாளராக இருந்து வில்லனாக அறிமுகமாகும் இந்திரகுமாரிடம் பேசினோம். ''முதலில் 'கொடிவீரன்' படத்தில் ஒரு வில்லன் கேரக்டர் இருக்கு நீங்கள் பண்ணுங்கள் என்று சசிகுமார் சொன்னார். நான், முதலில் வேண்டாம் என்று மறுத்தேன். அதன்பிறகு, இயக்குநர் முத்தையா என்னை நேரில் பார்க்க வேண்டும் என்றார். நான் சென்று அவரைப் பார்த்தபோது, `நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் வில்லன் கேரக்டர் பண்ண வேண்டும்’ என்றார். என்னிடம் கதை சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது, சம்மதம் சொல்லிவிட்டேன். இந்தக் கதையில், நான் நடிக்க வேறு ஒரு காரணமும் இருக்கு.

அது, இந்தப் படத்தில் என் கேரக்டர் பெயர்தான். அந்தப் பெயருக்காகவே நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், அந்தப் பெயரை இப்போது நான் சொல்ல மாட்டேன். அது, சஸ்பென்ஸ்'' என்றவரிடம், 'கொடிவீரன்' படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டோம். ''நல்ல கேரக்டர் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். விஜய் சேதுபதி படத்தில்கூட நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு அவருடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது . அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தபிறகு, அதைப் பற்றி சொல்கிறேன்'' என்று முடித்தார் இந்த நியூ வில்லன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!