வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (03/08/2017)

கடைசி தொடர்பு:21:40 (03/08/2017)

எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை - விஷால் அணி!

கடந்த சில நாள்களாகவே ஃபெப்சி தொழிலாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.  `ஃபெப்சி அமைப்பினருடன் வேலைசெய்ய மாட்டோம்' என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஒப்புக்கொண்ட சம்பளத்தைக் குறைக்கக் கூடாது, பொது விதிகளை மதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இவர்களின் போராட்டத்தினால், 'காலா', 'மெர்சல்' உட்பட பல படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தை ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஃபெப்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, ரஜினி, இருதரப்புக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

 


இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, ''ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது. நாளை முதல் படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை செய்வர்.  சம்பளப் பிரச்னை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது'' என்று கூறினார். இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒரு அறிக்கையை செயலாளர் கதிரேசன் விடுத்துள்ளார். அதில், 

''தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயித்த சம்பள விதிக்கு உட்பட்ட யாருடனும் படப்பிடிப்பைத் தொடருவோம். ஃபெப்சி தொழிலாளர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை. தொழிலாளர் நலவாரிய அழைப்பை ஏற்று நாளைய கூட்டத்தில் கலந்துகொண்டபின் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க