தமிழன் ஆளுறது இருக்கட்டும்... தமிழ் வாழ வேண்டாமா? - 'மெர்சல்' பஞ்சாயத்து | Mersal Poster Spelling mistake

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (10/08/2017)

கடைசி தொடர்பு:15:18 (10/08/2017)

தமிழன் ஆளுறது இருக்கட்டும்... தமிழ் வாழ வேண்டாமா? - 'மெர்சல்' பஞ்சாயத்து

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம், ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கான முதல் சிங்கிள் டிராக், இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) மாலை 3.30 மணிக்கு வெளியாகவிருக்கிறது. அந்த அறிவிப்புக்கான போஸ்டர் நேற்று வெளியானது. 

மெர்சல்

அந்த போஸ்டரில், ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற டேக் லைன் இடம் பெற்றுள்ளது. போஸ்டர் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘றா’, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய பழைய தமிழ் எழுத்து. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மாற்றம் செய்யப்பட்ட புதிய தமிழ் எழுத்துகளையே இப்போது பயன்படுத்துகிறோம். அப்படி இருக்கையில், ‘றா’ - வுக்கான  பழைய தமிழ் எழுத்து, மெர்சல் போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே பிரச்னை இல்லை. பழைய கால முறைப்படி சுழிக்கப்பட்ட ‘றா’ எழுத்தே நெடில் எழுத்துதான். இதில், கூடுதலாக துணைக் கால் தேவையில்லை. நெடில் எழுத்துக்குப் பக்கத்தில் துணைக்கால் போட்டிருக்கிறார்கள்  'மெர்சல்' போஸ்டரில். 

டேக் லைனே ‘ஆளப்போறான் தமிழன்’ என்றிருக்கையில், அதிலேயே தமிழ் பிழையாக இருக்கிறது. பிழையோடுதான் தமிழன், தமிழை ஆளப்போகிறானா பாஸ்?! என்று சமூக வலைதளங்களில் நக்கலடிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க