வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (16/08/2017)

கடைசி தொடர்பு:17:25 (16/08/2017)

''அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியரா போகணும்'' - 'கேப்டன் டிவி' விஜே ரேஷ்மா

ரேஷ்மா

கேப்டன் டிவி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை, ஒளிபரப்பாகும் 'சமையல் டாட்காம்' நிகழ்ச்சியை ஒரு வருடமாக தொகுத்து வழங்கிவருபவர், ரேஷ்மா. இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல. போட்டோகிராபி, பெயிண்டிங், மியூசிக், பிசினஸ், டீச்சிங் என ஆல்ரவுண்டராக அசத்துபவர். ரேஷ்மாவுடன் ஒரு குட்டி சாட்...

''போட்டோகிராபி மேல எப்படி ஆர்வம் வந்தது?'' 

''ஒவ்வொருத்தருக்கும் சின்ன வயசில் எதன் மீதாவது பெரிய கிரேஸ் இருக்கும். எனக்கு போட்டோன்னா அவ்வளவு பிடிக்கும். யாராவது போட்டோ எடுக்கிறதா சொன்னா போதும், அசராம போஸ் கொடுப்பேன். அதுவே, போட்டோகிராபி மேலே பெரிய ஈர்ப்பை உண்டாக்கிடுச்சு. நிறைய நுணுக்கங்களைத் தேடித்தேடி கத்துக்கிட்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேமராவைத் தூக்கிட்டு கிளம்பிடுவேன். இயற்கையைப் படம் பிடிக்கிறது ரொம்பவே பிடிக்கும்." 

''நீங்க எடுத்த புகைப்படங்களிலேயே மறக்க முடியாதது எது?'' 

''நான் எடுத்த ஒவ்வொரு புகைப்படமுமே எனக்குப் பிடிச்சதுதான். அதில் மறக்க முடியாததுன்னா... ஒரு தேனீ படம்தான். ஒரு தேனீ, தான் சேகரிச்ச தேனை, தேனடையில் வைக்கப்போறதைப் பார்த்தேன். குளோசப்ல எடுக்கிறதுக்காக, பக்கத்திலே போய் ஆடாம அசையாம கேமராவோடு ரெடியா இருந்தேன். உள்ளுக்குள்ளே பயம். கொஞ்சம் எசகுபிசகா நகர்ந்தாலும் தேனீக்கள் கலைஞ்சு நம்மை கொட்டி எடுத்திடுமோனு உதறலோடு எப்படியோ எடுத்துட்டேன். வீட்டுக்கு வந்து பாத்தப்போ அவ்வளவு சந்தோஷம். இப்பவும் அந்த போட்டோ என் கண்ணுக்குள்ளயே இருக்கு.'' 

ரேஷ்மா

''மீடியா பக்கம் வந்தது எப்படி?'' 

''மீடியாவுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அதுமேல தனி ஈர்ப்பு இருக்கும். அதுதான் என்னையும் ஈர்த்துச்சு. கேப்டன் டி.வி தொகுப்பாளர் கார்த்தி நடத்தின ஒரு ஷோவுக்கு ஆடியன்ஸாகப் போயிருந்தேன். என்னைப் பார்த்துட்டு, 'ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமா?'னு கேட்டாங்க. அப்படி எதேச்சையாக வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய மற்ற திறமைகளையும் விட்டுடலை. இப்பவும் வெப்நாடிக்ஸ் (webnatics) பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜரா இருக்கேன்.'' 

''நீங்க ஆசிரியர்னு கேள்விப்பட்டோமே..'' 

''ஆமாம்! எம்.ஏ,பி.எட் படிச்சிருக்கேன். பி.எட் படிக்கும்போது, ஓர் அரசுப் பள்ளியில் நாற்பது நாள்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரணும். அப்படி நான் சொல்லிக் கொடுக்கப்போன அரசுப் பள்ளியில், மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க சரியான ஆசிரியர்களே இல்லை. அதைப் பார்த்து ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ஆசிரியர் பயிற்சிக்காக அங்கே போனதும், குழந்தைகள் நல்லாப் பழக ஆரம்பிச்சுட்டாங்க. நாற்பது நாள்கள் முடிஞ்சு கிளம்புறேனு சொன்னேன். 'டீச்சர், நீங்க போக வேணாம், இங்கயே இருந்து எங்களுக்குச் சொல்லிக்கொடுங்க'னு கேட்டாங்க. நான் இங்கே வேலைப் பார்க்க முடியாதுனு சொல்லியும் குழந்தைங்க கேட்கலை. ஹெச்.எம் சொன்னா இருப்பேன்னு நினைச்சு, நேரா போய் எனக்காகப் பேசினாங்க. அந்த அளவுக்கு என் மேல அந்தக் குழந்தைங்க உயிரா இருந்தாங்க. காரணம், சொல்லிக்கொடுக்கிற விதம். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பணம் மட்டுமே குறிக்கோளா இருக்கும். நானும் ஒரு தனியார் பள்ளியில் ஒரு வருஷம் வேலைப் பார்த்தேன். அங்கே அடிமையா வேலைப் பார்க்க பிடிக்காம கிளம்பி வந்துட்டேன். ஆசிரியர் பணி செய்தால் அது அரசு பள்ளியில்தான் என்கிறதில் உறுதியா இருக்கேன்.'' 

ரேஷ்மா

''உங்க குடும்பத்தைப் பற்றி...'' 

''என் கணவர் பெயர் ஷுமாயூன் பாஷா. தனியார் கம்பெனியில் வேலைப் பார்க்கிறார். ஒரு வயசில் ஆண் குழந்தை இருக்கு. அவன் பெயர் அயான். அன்பான கணவன்,  அழகான குழந்தை, பிடிச்ச வேலை என விரும்பிய விஷயங்களோடு ஹேப்பியா இருக்கேன். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வருது. ஆனால், எனக்கு ஆர்வம் இல்லை. அந்த மீடியாவில் இருக்கிற நிறையப் பேரைத் தெரியும். அதனால், முன்னெச்சரிக்கையாக விலகிட்டேன். வாழ்க்கை நிம்மதியா இருந்தா போதும்'' என்றார் ரேஷ்மா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்