'தரமணி' வெற்றி ராம் பாக்கெட்டில் பணம் நிரப்புமா? - மம்முட்டி கேள்வி

இயக்குநர் ராம், 'தங்க மீன்கள்' படத்தின் வாயிலாக பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தைமார்களின் இதயங்களில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிகொண்ட மனிதர்.  

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது வெளியான 'தரமணி' திரைப்படம் தாறுமாறான பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்திருக்கிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தாண்டி அனைத்து சோஷியல் மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டி மகிழ்கின்றன. அடுத்து, பி.எல்.தேனப்பன்  தயாரிப்பில் வெளிவரும் 'பேரன்பு' படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, ராம் இயக்கியிருக்கிறார். கேரளா சென்ற ராம், மம்முட்டியைச் சந்தித்து 'பேரன்பு' படத்தின் கதையைச் சொல்ல, அதைக்கேட்டு கலங்கி விட்டார் மம்முட்டி. ஏற்கெனவே ஒப்புக்கொண்டு கால்ஷீட் தேதிகளைக் கொடுத்திருந்த மலையாளப் படங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, 'பேரன்பு' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதெல்லாம் தயாரிப்பாளருக்குக் கேரவன் செலவை ஏற்படுத்த விரும்பாத மம்முட்டி, கேரளாவிலிருந்து தன்னுடைய சொந்த கேரவனை எடுத்துவந்து கலந்துகொண்டார். 

அப்பா-மகள் பாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பிரமாதமான திரைப்படமாக 'பேரன்பு' உருவாகியிருக்கிறது. சமீபத்தில் 'பேரன்பு' படத்தின் முதல் பிரதியை இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திரையிட்டுக் காட்டினார், ராம். முழுப்படத்தையும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்த பாரதிராஜா, மம்முட்டியின் அற்புதமான நடிப்பால் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார்.

'பேரன்பு' பார்த்துவிட்டு வெளியில்வந்த பாரதிராஜா, சிறிதுநேரம் யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தார். சமீபத்தில், ராம் இயக்கத்தில் வெளிவந்த 'தரமணி' திரைப்படம், அவருக்குப் பெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. மூன்று படங்களைப் பாராட்டும்படி இயக்கியிருக்கும் ராம், பணரீதியாகக் கஷ்டப்படுகிறார் என்கிற வருத்தம் மம்முட்டி மனதில் உண்டு. கேரளாவுக்குச் சென்ற சினிமாப்புள்ளி ஒருவர், மம்முட்டியைச் சந்தித்திருக்கிறார். அவரிடம், ' ஏம்பா 'தரமணி' படம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அந்தப்பட வெற்றி ராம் பாக்கெட்டுல பணத்தை நிரப்புமா?' என்று மம்முட்டி அக்கறையோடு விசாரித்திருக்கிறார். சென்னைக்குத் திரும்பிய அந்த சினிமாப்புள்ளி, ராமிடம் மம்முட்டி சொன்னதைச் சொல்ல, நெகிழ்ந்துபோய் கண்கலங்கிவிட்டாராம், ராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!