Published:Updated:

`சினிமாவைப் போலவே உறவுகளையும் உசுராகக் கொண்டவர் ஆச்சி மனோரமா!’ -நெகிழும் தம்பி மகள் ஜோதி

 ‘ஆச்சி’ மனோரமா
‘ஆச்சி’ மனோரமா

திரைத்துறையில் சிவாஜியும், சிவக்குமாரும் என் கூட பொறக்காத அண்ணன் தம்பிகள் என எங்களிடம் அடிக்கடி சொல்வார். அத்தை இருந்தவரை தீபாவளி, பொங்கல் என சிவாஜியும், அதன்பிறகு பிரபும் பிறந்த வீட்டு சீர்வரிசை கொடுத்துவந்தாங்க.

`நடிகர் சிவாஜியும், சிவக்குமாரும் என் கூட பொறக்காத அண்ணன், தம்பிகள் என அடிக்கடி சொல்வார். அனைவராலும் அன்பாக ஆச்சி என அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும், கடைசி வரை உறவுகளை விட்டுக்கொடுக்காமல் இறுகப் பற்றிக்கொண்டு வாழ்ந்தவர் மனோரமா’ என அவரது நினைவுகளைத் தம்பி மகள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மனோரமா
மனோரமா

நடிகை மனோராமா, தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ்த் திரையுலகில் பெரும் புகழ்பெற்று விளங்கியவர். திரைத்துறையில் அனைவரிடத்திலும் அன்போடு பழகியதாலும் மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகையாகத் திகழ்ந்ததாலும் அனைவராலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.

90-களில், தமிழ் சினிமாவில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்தார் எனச் சொல்வதைவிட வாழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திரையில் தன் யாதர்த்தமான நடிப்பை வெளிக்காட்டியவர். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த மனோரமா, முதுமை காரணமாகக் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இன்று, அவருடைய 83-வது பிறந்தநாள். எப்படி ஆச்சி மனோரமா இல்லாதது திரைத் துறையினருக்கு ஈடுகட்ட முடியாததோ அதே போல், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் இழப்பாக இன்று வரை இருந்துவருகிறது.

மனோரமா
மனோரமா

உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து வாழ்ந்தவர் என மனோரமாவின் தம்பி பக்கிரிசாமியின் மகள் ஜோதி, அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ``நான், அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். என் அத்தைக்கு (மனோரமா) மன்னார்குடிதான் சொந்த ஊர். அவருடைய அப்பா ரொம்பவே கண்டிப்பாக இருப்பார். அதுவே, மனோரமா சென்னைக்கு நடிக்கச் செல்வதற்குக் காரணமாக அமைந்தது.

அவருடைய தம்பியான எங்க அப்பாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். நாங்க பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எங்க அப்பா இறந்துவிட்டார். எங்க அம்மா, எங்களை வைத்துக் கொண்டு தவிச்சப்ப, `நான் இருக்கேன் கவலைப்படாதீங்க’ என எங்களுக்கு பண உதவி செய்ததுடன், அப்பா ஸ்தானத்தில் வழிகாட்டியாக இருந்து எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கினார். இன்றைக்கு நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு எங்க அத்தைதான் காரணம்.

மனோரமா
மனோரமா

அவருக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்க பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்தவர், குழந்தையாகவே மாறி அந்த விழாவை சிறப்பித்தார். அத்தைக்கு வயல் நண்டுன்னா ரொம்பப் பிடிக்கும். நாங்க எப்ப சென்னைக்குப் போனாலும் வயல் நண்டைப் பிடித்துக்கொண்டு செல்வோம். நண்டு ரசம் அவருக்கு ரொம்பவே பிடிக்கும், விரும்பி சாப்பிடுவார்.

'திரைத் துறையில் சிவாஜியும், சிவக்குமாரும் என் கூட பொறக்காத அண்ணன் தம்பிகள்' என எங்களிடம் அடிக்கடி சொல்வார். அத்தை இருந்தவரை தீபாவளி, பொங்கலுக்கு சிவாஜியும், அதன்பிறகு பிரபும் பிறந்த வீட்டு சீர்வரிசை கொடுத்து வந்தாங்க. கடைசி காலத்தில் சிவக்குமார், ஆச்சியை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொண்டதுடன், ஆறுதலாகவும் இருந்துவந்தார். அப்போ, `நீங்கதான் நான் சம்பாதித்த சொத்து’ என அத்தை உருகிக் கூறுவார். `சினிமாதான் உங்க உசுரு, வீட்லேயே முடங்கியிருந்தா நல்லா இருக்காது’ எனக் கூறிய சிவக்குமார் சார், சிங்கம் 2-வில் அவரை நடிக்கவைத்தார். அதுதான் அத்தை நடித்த கடைசிப் படம்.

ஆசிரியர் ஜோதி
ஆசிரியர் ஜோதி

நாங்க அவரை பார்க்கச் சென்றால், கட்டிப் பிடித்துக்கொண்டு அழுவார். அந்த அளவிற்கு உறவுகளை இறுகப் பற்றிக்கொண்டு வாழ்ந்தவர். சினிமா இருக்கிற வரை அவர் புகழ் இருக்கும் அவருடைய பெருமை நிலைத்து நிற்கக்கூடிய வகையிலும், வரும் தலைமுறையினர் அவரைத் தெரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் நடிகர் சங்கத்தினர் அவருக்கு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அதுதான் அவருடைய உறவினர்கள் அனைவரின் விருப்பமும்” என்கிறார் ஜோதி.

அடுத்த கட்டுரைக்கு