மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி வைரவன். தமிழில் 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் ஹரி வைரவன். சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள் என்று சமீபத்தில் அவரது மனைவியும் உதவி கோரியிருந்தார். நடிகர் ஹரி வைரவனின் உடல்நிலை சரியில்லாத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் ஹரி வைரவன் நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "'வெண்ணிலா கபடி குழு' திரைப்படப்புகழ் நடிகர் ஹரி வைரவன், இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல் நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹரி வைரவன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரி வைரவன் மறைவுக்கு மறைவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது சொந்த ஊரான மதுரையில் வைத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.