Published:Updated:

`அரிய வகை புற்றுநோய்; 2 வருடப் போராட்டம்; தாயின் இறப்பு’ - உயிரிழந்தார் நடிகர் இர்ஃபான் கான்

கடந்த 2 வருடங்களாக அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமல்லாது `ஸ்லம்டாக் மில்லினியர்', `தி அமேசிங் ஸ்பைடர்மேன்', `லைஃப் ஆஃப் பை', `ஜூராஸிக் வேர்ல்டு' போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமாகவும் பலரின் இதயங்களை வென்றெடுத்தவர் இர்ஃபான் கான். அவருக்கு ஹாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக நடைபோடுவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. சிறு வயதில் கிரிக்கெட்டில் திறமைசாலியான இர்ஃபானுக்கு அந்தத் துறையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்தது.

நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான்

விளையாட்டில் பங்கேற்க வேண்டுமானால் அதற்குப் பணம் செலுத்த வேண்டும். அதைச் செலுத்த இயலாமல் வாய்ப்பு கைநழுவிப் போனது. பின்னர் தேசிய நாடகப் பள்ளியில் சேர்வதற்கு ஆசைப்பட்டபோது அவரின் தந்தை உயிரிழந்துவிட்டார். ஒரு கட்டத்தில் குடும்பப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றினார், தொடர்ந்து ஸ்காலர்ஷிப்பின் உதவியால் தேசிய நாடகப் பள்ளியில் நுழைந்தார் இர்ஃபான். அதன்பிறகு திரைப்படத் துறையில் நுழைந்து தன் கனவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.

தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை திரையில் சிறப்பாகக் கொண்டு வருவதற்கு கடுமையாக முயல்வது இவரது சிறப்பு. நடிப்பில் தனக்கென்று முத்திரையைப் பதித்த இர்ஃபான் பெயர், பணம், புகழ் ஆகியவற்றுக்கிடையில் சந்தோஷமாக ஓடிக்கொண்டேயிருந்தபோது திடீரென வந்தது ஒரு ஸ்பீட் பிரேக்கர். இவருக்கு ஒரேநாளில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சோதனையின் முடிவில் இர்ஃபானுக்கு எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த அரிதான நோயானது ரத்தத்துக்கு ஹார்மோன்களை அனுப்பும் செல்களைப் பாதிக்கும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்களை ரத்தத்துக்குள் அனுப்பி இதயநோய்கள், ரத்த அழுத்த பாதிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான்

2018-ம் ஆண்டு முதல் இதற்காக லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு கடந்த வருடம் ஒரு படத்தில் நடித்தார். தற்போது 54 வயதான இர்ஃபான் புற்றுநோயிலிருந்து மீளாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இதற்கிடையில்தான் இந்தியாவில் கொரோனாவுக்கான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இர்ஃபான் தன் குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். ஆனால் அவரது தாய் சயீதா பேகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 26-ம் தேதி சயீதா உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த இர்ஃபான், ஊரடங்கு உத்தரவால் தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். பின்னர் வீடியோ கால் மூலம் தாயின் இறுதிச் சடங்கை பார்த்துக் கண்ணீர் விட்டுள்ளார். இர்ஃபானின் நிலையறிந்த பல பாலிவுட் பிரபலங்கள் அவரது தாய்க்கு இரங்கலும் இர்ஃபானுக்கு ஆறுதலும் தெரிவித்திருந்தனர்.

நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான்
facebook.com/irrfanofficial
அரியவகை புற்றுநோய், 6 கீமோ, வாழ்வதற்கான சிறிய வாய்ப்பு... புற்றிநோயிலிருந்து மீண்ட நடிகர் இர்ஃபான்!

தொடர்ந்து நேற்று இர்ஃபானின் உடல்நிலை மிகுந்த மோசமடைந்துள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்குப் பெருங்குடலில் பிரச்னை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி நடிகர் இர்ஃபான் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இர்ஃபானின் இறப்பு குறித்து ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் அவரது நண்பரும் இயக்குநருமான ஷீஜித் சிர்கார், “ என் அன்பு நண்பன் இர்ஃபான், நீ போராடினாய் போராடினாய் போராடிக்கொண்டே இருந்தாய். உன்னை நினைத்து நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். நாம் மீண்டும் சந்திப்போம். மனைவி சுடாபாவுக்கு என் இரங்கல், அவரும் உன்னுடன் சேர்ந்து போராடினார். அவரால் முடிந்த அளவுக்கு உனக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தார். உனக்கு அமைதி நிலவட்டும். சல்யூட் இர்ஃபான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் இர்ஃபான் இறப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு அவரது செய்தித் தொடர்பாளர், “ இர்ஃபான் இன்னும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்’ என அறிக்கை வெளியிட்டார். இது வந்த சில மணிகளில் இர்ஃபான் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு