இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கின்றனர். படம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பெயருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘தளபதி 67’ படம் தொடர்பான புகைப்படங்களும், அப்டேட்டுகளும் பகிரப்பட்டு வருகின்றன. படத்தின் டீசர் குறித்தும் அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மன்சூர் அலிகானிடம் விகடன் சார்பாக கேட்டபோது, “எனக்கு ட்விட்டர் அக்கவுன்ட் எல்லாம் கிடையாது. தளபதி 67-னு லோகேஷ் கனகராஜ் படத்தோட கெட்டப்பப் போட்டு யார் யாரோ என்னோட ஐடி-னு சொல்லி ஷேர் பண்றாங்க. எனக்கே இது ஆச்சரியமாதான் இருக்கு. எனக்கு பேங்க்ல மட்டுந்தான் அக்கவுன்ட் இருக்கு. எனக்கு ட்விட்டர் அக்கவுன்ட் பத்திலாம் தெரியாது. நான் ஷீட்டிங்ல நடிச்சிட்டு இருக்கேன். யாரோ எனக்கு வேண்டாதவங்கதான் இப்படி பண்ணிட்டு இருக்காங்க. ஏன் இப்படி பண்றாங்கனு தெரியல. இப்படி பண்றது மூலம் நல்ல குஷி ஆவாங்க போல" என்று தெரிவித்தார்.