சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து நாகார்ஜுனா தன் மௌனத்தை உடைத்ததாகவும், அது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகளாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை மறுத்துள்ள நாகார்ஜுனா, அந்தச் செய்திகளை `முட்டாள்தனம்' என்று சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிந்ததாக அறிவித்தனர். அதிலிருந்தே அவர்கள் மணமுறிவு குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக, சமந்தா, சைதன்யாவின் விவாகரத்து குறித்து தன் மௌனத்தை நாகார்ஜுனா கலைத்ததாகவும், பிரிந்து செல்லும் முடிவை சமந்தாவே எடுத்ததாகவும், அதை நாக சைதன்யா ஏற்றுக் கொண்டதாக நாகார்ஜுனா தெரிவித்ததாகவும் சமூக வலைதளங்களிலும், சில மீடியாவிலும் செய்திகள் வெளியாகின. மேலும், அது தங்கள் குடும்பத்தின் நற்பெயரை பாதிப்பது குறித்து தான் வருத்தப்பட்டதாக நாகார்ஜுனா தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி நீண்டது.
இதைத் தொடர்ந்து, நாகார்ஜுனா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வதந்திகளுக்கான தன் மறுப்பை பதிவு செய்தார். ``சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும், நான் சமந்தா, நாகசைதன்யா விவாகரத்துக் குறித்து குறிப்பிட்டதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது, மிகவும் முட்டாள்தனமானது. ஊடக நண்பர்கள் வதந்திகளை செய்திகளாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று ட்வீட் செய்திருந்தார் நாகார்ஜுனா.
அக்டோபர் 2-ம் தேதி, சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்கள் திருமண முறிவு குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் தெளிவாக, இது இருவரின் முடிவு என்றும் தெரிவித்திருந்தனர். இருந்தாலும், அதற்குப் பின் சமந்தாவே அதிகமாக சமூக வலைதளத் தாக்குதலுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து சமந்தா வெளியிட்ட தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், தன்னைக் குறித்துச் சொல்லப்பட்ட வதந்திகளான `வேறு ஓர் உறவு', `குழந்தை வேண்டாம் என முடிவு', `அபார்ஷன்', `சந்தர்ப்பவாதி' போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்டு வேதனையைப் பகிர்ந்திருந்தவர், என்றாலும் இந்த அவதூறுகள் எதுவும் தன்னை உடைக்க விடமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா சொன்னதாகப் பரப்பப்படும் வதந்திக்கு, இப்போது நாகார்ஜுனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- வைஷ்ணவி