
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்துக்கு முன் மரணமடைந்தார்.
குசும்புக்கார கருப்பன் நோயிலிருந்து மீண்டு மக்களை மகிழ்விக்க வருவார் என்று நம்பியிருந்த நிலையில் எல்லோரையும் விசும்ப வைத்துவிட்டு சென்றுவிட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சற்று முன் மரணமடைந்தார்.

தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி, பிரபல நடிகர்களோடு முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. இவர் கடைசியாக ரஜினியோடு 'அண்ணாத்த' படத்திலும் நடித்துள்ளார்.
தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் குடும்பம் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் வசித்து வருகிறது. தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாக இயங்கி வந்தாலும், கடந்த 10 வருடங்களாகத்தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். கிராமத்து மனிதர்களின் உடல் மொழியும், வசன உச்சரிப்பும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சூரிக்கு அப்பாவாகவும் குறி சொல்பவராகவும் நடித்திருப்பார். அதில் அவர் செய்த காமெடி அனைவரையும் கவர்ந்தது. அதுபோல் 'ரஜினி முருகன்' படத்தில் கட்டப் பஞ்சாயத்து சொல்லப்போகும் வெட்டி பந்தா பேர்வழியாக நடித்திருப்பார். அதே நேரம், 'நாடோடிகள்-2' படத்தில் கண்டிப்பான தந்தையாக கண்ணீர் வரவழைக்கும் வகையில் நடித்திருப்பார்.
கிராமத்து மனிதர், கோயில் பூசாரி, குறி சொல்பவர் போன்ற பாத்திரங்களில் எளிதாக பொருந்திவிடக் கூடிய தவசி, சிலம்பம் உட்பட வீர விளையாட்டுகளில் பயிற்சி எடுத்தவர். அது மட்டுமல்லாமல் உடலையும் குஸ்தி வீரர்போல நன்கு வைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த வருடம் வாகன விபத்தில் காயம்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதுதான் அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் இருந்தது தெரியவந்தது. சில மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்தவரை, அவர் குடும்பத்தினர் மதுரையிலுள்ள சரவணா மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சேர்த்தனர். அவருக்கு அங்கு தி.மு.க எம்.எல்.ஏவான டாக்டர் சரவணன் சிகிச்சை அளித்தார்.

புற்றுநோயை குணப்படுத்த அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையில் அவர் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. நாம் சமீபத்தில் அவரை காண சென்றபோது, ஓரளவு நம்பிக்கையுடன் காட்சி அளித்தார். அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன், சசிக்குமார், சூரி போன்றவர்கள் உதவி செய்த நிலையில், சற்று முன் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.