Published:Updated:

`இது லாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது!’- மரச் சிற்பக்கலை கற்று தரும் தெலுங்கு நடிகர்

``யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சி முகாமைப் பார்க்க வரலாம். ஆர்வமிருந்தால், மரச்சிற்பங்கள் செய்வது குறித்தும் கத்துக்கலாம்."

 vishnu manchu
vishnu manchu

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, மர வேலைப்பாடுகள் செய்யும் 36 சிற்பிகளை ஒன்றிணைத்து பயிற்சி முகாம் ஒன்றைத் திருப்பதியில் நடத்துகிறார். `ஜனனா' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த முகாம் நேற்று தொடங்கப்பட்டது. 15,000 மாணவர்கள் மற்றும் மர வேலைப்பாடுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முகாமைத் தொடங்கியிருக்கிறார். 

vishnu manchu
vishnu manchu

இந்தப் புதிய முன்னெடுப்பு பற்றி விஷ்ணு மஞ்சு கூறுகையில், ``எனக்கு மரத்தால் செய்யப்படும் பாரம்பர்ய கலை வேலைப்பாடுகளின் மீது அதிக ஆர்வம் உண்டு. இவை நம் இந்திய கலாசாரத்தின் பெருமைகளை எல்லா நாட்டினருக்கும் கொண்டுசெல்லும். நம்ம நாட்டில் நிறைய மரச்சிற்பிகள் இருந்தாலும், அவர்களின் திறமை பெரிதாக வெளியுலகத்துக்குத் தெரிவதில்லை. தனித்தனி இடங்களில் இருப்பதால், அவர்களிடம் ஆர்வமுள்ள இளைஞர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதும் சவாலாக இருக்கிறது.

தவிர, மரச்சிற்பங்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதேநேரம், மரச்சிற்பிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. எனவேதான், திறமையான சிற்பிகளையும் ஆர்வமுள்ள இளைஞர்களையும் ஒன்றிணைக்கிற முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். இந்த முன்னெடுப்புக்காக பெருமைப்படுகிறேன்.  

vishnu manchu  with father mohan babu and surya
vishnu manchu with father mohan babu and surya

இந்த 20 நாள்கள் பயிற்சி முகாம், லண்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மரச்சிற்பி ராதா வினோத் சர்மாவின் தலைமையில் நடக்கும். அவர் தனக்குத் தெரிந்த விஷயங்களையும், மரச்சிற்பங்களின் பெருமைகளையும் கற்றுக்கொடுப்பார். மர வேலைப்பாடுகளின் மீது ஆர்வம்கொண்ட பலருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சி முகாமைப் பார்க்க வரலாம். ஆர்வமிருந்தால், மரச்சிற்பங்கள் செய்வதையும் கற்றுக்கொள்ளலாம். நானும் நேரம் ஒதுக்கி, மரச்சிற்பங்கள் செய்யக் கற்றுக்கொள்வேன். இது லாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு" என்றார் மகிழ்ச்சியுடன்.