Published:Updated:

வெற்றிகரமாக நூறு நாள்களைக் கடந்து...

நடிகர் சங்கத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்... வெளிவராத ரிசல்ட்!

வெற்றிகரமாக நூறு நாள்களைக் கடந்து...

நடிகர் சங்கத் தேர்தல்... வெளிவராத ரிசல்ட்!

Published:Updated:
நடிகர் சங்கத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் சங்கத் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து, 100 நாள்கள் கடந்துவிட்டது. திரைப்படங் களைத் தாண்டிய விறுவிறு திருப்பங்களோடு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில், எந்த அணி வெற்றிபெற்றது என்பதைத் தெரிந்துகொள்ள, அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், முடிவு இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. காரணம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேர்தல் தொடர்பான வழக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் இந்தத் தேர்தலில் நேருக்குநேர் மோதின. இந்த இரு அணிகளின் பின்னணியில் அ.தி.மு.க., தி.மு.க என இருபெரும் அரசியல் கட்சிகள் இருப்பதாகவும், அதனால்தான் இந்த விஷயத்தில் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தல்

‘‘பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த அணியை தி.மு.க-வின் பின்புலம் கொண்ட அணியாகப் பார்க்கிறது ஆளும் தரப்பு. அதனால்தான், இந்த அணிக்கு எதிராக ‘சுவாமி சங்கர தாஸ்’ பெயரில் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி என புதிய அணியை உருவாக்கிப் போட்டியிட வைத்தனர்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பாண்டவர் அணி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட பூச்சி முருகனிடம் ‘`நடிகர் சங்கத் தேர்தலில் நடப்பது என்ன?’’ என்ற கேள்வியைக் கேட்டோம்

‘‘நடிகர் சங்கத் தேர்தலில், ஆரம்பத்திலிருந்தே ஆளுங் கட்சித் தரப்பிலான நெருக்கடிகள் தொடர்கின்றன. எதிர் அணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ், ‘என்னை நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட நிர்பந்தித்ததே ஆளும் தரப்புதான். எனக்கும் நிறைய கல்லூரிகள் இருக்கின்றன. என்னை நான் காப்பாத்திக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதே ஐசரி கணேஷ்தான், தேர்தல் நடத்துவதற்கு ஜானகி அம்மாள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி இடம் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும் தேர்தல் நெருக்கத்தில் காவல்துறையினர் `பாதுகாப்பு தர முடியாது’ என்றார்கள். சரி, வேறு இடம் பார்த்துக்கொண்டு காவல்துறையிடம் அனுமதி வாங்குவோம் என நாங்கள் முயற்சி செய்ய ஆரம்பித்த மறுதினமே, ‘உறுப்பினர் நீக்கத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால், நடிகர் சங்கத் தேர்தலே நடத்தக் கூடாது’ என்று மாவட்டப் பதிவாளர் அறிவித்தார். பிறகு நீதிமன்றம் சென்று, மாவட்டப் பதிவாளரின் உத்தரவுக்குத் தடைபெற்று, காவல்துறை அனுமதி வாங்கி, முறைப்படி நீதியரசரைக்கொண்டு தேர்தலை நடத்தி முடித்தோம். 85 சதவிகித வாக்குகளும் பதிவாகின. எதிர் அணியினரும் மகிழ்ச்சியோடு கைகுலுக்கிக்கொண்டுதான் விடைபெற்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தல்

ஆனால், நடிகர் சங்கத்தில் பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் சில நடிகர்கள், ‘தேர்தல் சரிவர நடத்தப்படவில்லை’ என்று பிரபல வழக்கறிஞர்களை வைத்து மறுபடியும் முட்டுக்கட்டை போட்டனர். இதன் பின்னணியில் ஐசரி கணேஷ்தான் இருந்தார். இதுமட்டுமல்ல, இந்த வழக்கைத் தள்ளிப்போடும்படி ஐசரி கணேஷின் நண்பர் தன்னிடம் பேசியதாகக் கூறிய நீதிபதி, ஐசரி கணேஷ்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தார். இதில் 10 லட்சம் ரூபாய் அபராதமும் கட்டினார் ஐசரி கணேஷ்.

வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வெளிவரப்போகிறது என்பது தெரிந்ததும், ‘சங்கம் சரிவர நடைபெறவில்லை’ என்று ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்தார்கள். இதையடுத்து மாவட்டப் பதிவாளரும் ‘நடிகர் சங்கத்துக்கு ஏன் தனி அதிகாரி நியமிக்கக் கூடாது? எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தேர்தலில் எங்கள் அணிதான் ஜெயிக்கும் என்பதால், இந்தத் தேர்தலை எப்படி யாவது ரத்துசெய்துவிட வேண்டும் என ஐசரி கணேஷும் அவரோடு சேர்ந்து சிலரும் முயற்சி செய்கிறார்கள். உண்மை எங்கள் பக்கம் இருப்பதால், நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும்’’ என்றார்.

பூச்சி முருகனின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஐசரி கணேஷிடம் பேசினோம். ‘‘நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் முடிந்து ஆறு மாதம் கழித்தே தேர்தலை நடத்தியிருக்கின்றனர். எனவே, தேர்தல் நடந்ததே தவறு. அந்தத் தேர்தலையும்கூட பதவிக்காலம் முடிந்துபோனவர்களே நடத்தியது மிகப்பெரிய தவறு. தேர்தலை நடத்திய நீதியரசரும் கூட இவர்களாகவே நியமித்துக்கொண்ட ஓய்வுபெற்ற நீதியரசர்தான்.

அடுத்ததாக, முறையான அனுமதி எதுவும் பெறாமலேயே வாக்காளர் பட்டியலிலிருந்து 61 பேரை நீக்கியிருக்கின்றனர். அவர்கள்தான் தற்போது நீதிமன்றத்துக்கும் போயிருக்கிறார்கள். மற்றபடி நானோ, பாக்யராஜ் சாரோ நீதிமன்றத்துக்குப் போகவில்லை. தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடுதான் நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆளுங்கட்சியின் அழுத்தத்தால்தான் நான் தேர்தலிலேயே போட்டியிட்டேன் என்றெல்லாம் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படிப்பட்ட எந்த அழுத்தமும் இதுநாள் வரை எனக்கு வரவில்லை. அவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே வெற்றிபெற்று பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்த விஷால், 32 செயற்குழுக் கூட்டங்களில் 22 கூட்டங்களில் கலந்துகொள்ளவே இல்லை என்றால், அவரை எப்படி பொதுச்செயலாளர் என்று சொல்ல முடியும்? செயற்குழுக் கூட்டத்துக்கே வர முடியாத ஒருவர், ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும்?’’ என்றார் காட்டமாக.

டிஷ்யூம் டிஷ்யூம் தொடர்கிறது!