Published:Updated:

தமிழ் சினிமா நிராகரிப்பு, பாலிவுட்டின் கனவுக்கன்னி, காதல், குடும்பம், அரசியல், இப்போ..!

ஹேம மாலினி
பிரீமியம் ஸ்டோரி
ஹேம மாலினி

- நடிகை ஹேம மாலினி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

தமிழ் சினிமா நிராகரிப்பு, பாலிவுட்டின் கனவுக்கன்னி, காதல், குடும்பம், அரசியல், இப்போ..!

- நடிகை ஹேம மாலினி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published:Updated:
ஹேம மாலினி
பிரீமியம் ஸ்டோரி
ஹேம மாலினி

தமிழ் சினிமாவிலிருந்து சென்று, பாலிவுட் சினிமாவின் ‘கனவு தேவதை’யாக 20 ஆண்டுகள் கோலோச்சிய தமிழ்ப் பெண்ணான ஹேம மாலினி, இந்திய சினிமாவின் ஐகானிக் நடிகை. நடனக்கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மனைவி, இல்லத்தரசி, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர், உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியின் தற்போதைய எம்.பி. திரைத்துறையில் பல மகுடங்களைச் சூடியவருக்கு, கோவாவில் சமீபத்தில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட ‘திரை ஆளுமை’ விருது, மற்று மொரு புகழ் மாலை.

நாடறிந்த பிரபலமான ஹேம மாலினியைத் தனிப்பட்ட முறையில் பேட்டி காண்பது அரிதிலும் அரிது. பெரும் முயற்சிக்குப் பிறகு, பேட்டிக்குச் சம்மதித்தார். பரபரப்பான பணி களுக்கிடையே அவர் நமக்கு ஒதுக்கியிருந்த நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே தொலைபேசியில் அழைத்தவர், ‘ஐ’ம் ரெடி! நீங்க ரெடியா?’ என்று உற்சாகத்துடன் சம் பிரதாய உபசரிப்புகளை முடித்ததும், உரை யாடலைத் தொடங்கினார்.

குடும்பத்தினருடன் ஹேம மாலினி
குடும்பத்தினருடன் ஹேம மாலினி

“தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கிற அம்மன் குடி கிராமத்துல பிறந்து, டெல்லியில வளர்ந் தேன். அப்பாவின் பணிமாறுதலால சென்னை யில குடியேறி, முறைப்படி பரதநாட்டியம் கத்துகிட்டே, பல்வேறு நிகழ்ச்சிகள்லயும் நடனமாடினேன். அந்த நேரத்துல எனக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ‘இது சத்தியம்’ படத்துல ‘சிங்கார தேருக்கு’ பாட்டுலயும், ‘பாண்டவர் வனவாசம்’ங்கிற தெலுங்குப் பட பாடல்லயும் டான்ஸ் ஆடினேன். ‘வெண்ணிற ஆடை’ படத்துல நிர்மலா நடிச்ச ரோலுக்கான வாய்ப்பு எனக்கு வந்து, மதுரைக்குப் பக்கத்துல ஷூட்டிங் நடந்துச்சு. நான் சுமாராதான் பெர்ஃபார்ம் பண்ணேன். ஆனா, என்கூட நடிச்ச ஜெயலலிதாவின் ஆக்டிங் எனக்கு வியப்பைக் கொடுத்துச்சு. எதுவும் சொல் லாம அங்கேருந்து திடீர்னு என்னை அனுப்பிட்டார், அந்தப் பட டைரக்டர் சி.வி.ஸ்ரீதர். அப்புறமா நியூஸ் பேப்பரைப் பார்த்துத்தான் அந்தப் படத்திலேருந்து நான் நீக்கப்பட்டத்தைத் தெரிஞ்சு கிட்டோம். இந்த விஷயத்தை முறைப்படி எங்ககிட்ட சொல்லாம இப்படிப் பண்ணிட்டாரேன்னு ஸ்ரீதர் சார் மேல எனக்கு ரொம்பவே வருத்தம். இதே சினிமா துறையில என் திறமையை நிரூ பிச்சு, எல்லோரும் என் பெயரை உச்சரிக் கும்படியா பேர் வாங்கிக் காட்டணும்னு முடிவெடுத்தேன்” என்று கணீர் குரலில் சொல்பவர், இந்தி சினிமா பட வாய்ப்பு களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தான் எடுத்த சபதம் முடித்ததுடன், பாலிவுட்டில் உச்சத்துக்குச் சென்றார்.

தமிழ் சினிமா நிராகரிப்பு, பாலிவுட்டின் கனவுக்கன்னி, காதல், குடும்பம், அரசியல், இப்போ..!

நடிப்பும் நடனமும் ஒருங்கே அமைந்த வைஜெயந்தி மாலாவுக்குப் பிறகு, 1970-களில் இந்தி சினிமாவில் அவரின் வெற்றிடத்தை நிரப்பிய ஹேம மாலினியின் நடனத்துக்காகவே ஹிட்டான படங்கள் ஏராளம்.

“ ‘ராஜ் கபூருக்கு ஜோடியா நடிக்கிறியா?’ன்னு இந்திப் பட வாய்ப்பு தேடி வந்தப்போ, ‘யார் ஹீரோவா இருந்தா என்ன?’னு தைரியமா சம்மதிச் சேன். மும்பையில என்னை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த ராஜ் கபூர், ‘ஒரு பிக் ஸ்டார் உதயமாகி யாச்சு’ன்னு பலர் முன்னிலையில சொன்னார். அவருடன் நடிச்ச ‘சப்னோ கா சவுதாகர்’ படத்துக்கு அப்புறமா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிஞ்சது. தமிழைக் காட்டிலும் எனக்குப் பரிச்சயமான இந்தி யும், டான்ஸ் ஆர்வமும் பெரிசா கைகொடுத்துச்சு.

ஆரம்பத்துல மென்மையான ரோல்கள்ல நடிச்ச நிலையில, ‘சீதா அவுர் கீதா’வுல (இந்தப் படம் ‘வாணி ராணி’யாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டது) வர்ற மாதிரி அடாவடியான டாம் கேர்ள் மற்றும் சவாலான ரோல்கள்லயும் துணிஞ்சு நடிச்சேன்.

தென்னிந்தியாவிலேருந்து போறவங்க பலரையும் பாலிவுட்ல வளர விடமாட்டாங்கன்னு ஒரு பேச்சு இருந்தாலும், என் விஷயத்துல எவ்வித புறக்கணிப் பும் ஏற்படலை. ராஜ் கபூர், ரிஷி கபூர், அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா உட்பட அப்போ பீக்ல இருந்த எல்லா நடிகர்களுமே என்கூட நடிக்க விருப்பப் பட்டாங்க. பல மாநில மக்களாலும் கொண்டாடப்படும் சினிமாங்கிற தால, தூக்கம், சாப்பாடு, குடும் பத்தினரின் பாசம்னு பலவற்றையும் தியாகம் செஞ்சு பாலிவுட்டுல வேலை செஞ்சேன். எல்லா வகை யிலயும் எனக்கு நிறைவான பலன் கிடைச்சது” என்பவர், சில படங் களின் இயக்குநராகவும் வெற்றி கண்டவர். நடிகர் ஷாருக் கானை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்.

இந்திய சினிமாவில் முக்கியமான படங்களில் ஒன்றாகப் புகழப்படும் ‘ஷோலே’ உட்பட 25-க்கும் மேற் பட்ட படங்களில் தன் கணவர் தர்மேந்திராவுடன் இணைந்து நடித் துள்ளார் ஹேம மாலினி. ‘ஹிட் ஜோடி’யாகப் பெயர் பெற்ற இந்த ரீல் ஜோடியை, ரியல் ஜோடியாக்கிய காதல் நினைவுகள் குறித்தும் புன்னகையுடன் பகிர்ந்தார்.

கணவருடன் ஹேம மாலினி
கணவருடன் ஹேம மாலினி

“ஆரம்பத்துல அவரும் நானும் ஜோடியா நடிச்ச சில படங்கள் ஹிட்டாகவே, எங்களை மனசுல வெச்சு நிறைய காதல் கதைகளை உருவாக்கினாங்க. ரசிகர்களும் எங்க ஜோடியைக் கொண்டாடி னாங்க. என் சினிமா வைராக்கியத் துல ஜெயிச்சுட்டதை ஒருகட்டத்துல உணர்ந்தேன். குடும்ப வாழ்க்கையில கவனம் செலுத்த இதுதான் சரியான தருணம்னு உணர்ந்தப்போ, சினிமாவிலிருந்தும் வெளிவட்டாரத்திலேருந்தும் எனக்கு ஏகப்பட்ட புரபோஸல்கள் வந்தன. அந்த லிஸ்டுல அவரும் இருந்தார் (சிரிக்கிறார்). பல வருஷ பழக்கத்துல அவரை நல்லா புரிஞ்சு வெச்சிருந்ததால, அவரின் அன்பு வாழ்நாள் முழுக்க கிடைச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நாங்க ஜோடியா நடிக்கிறதை மட்டும் தவிர்த்தோம். முக்கியமான முடிவுகளை, அவர்கிட்ட ஆலோசனை செஞ்ச பிறகுதான் எடுப்பேன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. அஞ்சு பேரக் குழந்தைகள். குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமா போயிட் டிருக்கு...” கலகலப்பவரின் குரலில் பூரிப்பு.

அகவை கூடினாலும் அழகு குறையாத எனர்ஜி சீக்ரெட் மற்றும் பர்சனல் பக்கங்கள் குறித்து விவரித்தவர், “டான்ஸர் என்பதுலதான் எனக்கு அளவுகடந்த பெரு மிதம். திறமைக்கு வயசு தடையா இருக்கவே கூடாது. அதனாலதான், தொடர்ந்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ற தோடு, வெளிநிகழ்ச்சிகள்லயும் டான்ஸ் ஆடுறேன். யோகா, தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சினு உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்வு கிடைக்கிற வேலை களைத் தினமும் செய்வேன். நம்ம உற்சாகம் மத்தவங் களுக்கும் பாசிட்டிவிட்டியைக் கொடுக்கணும். அதனால தான், வெளியிடங்கள்ல பளிச் தோற்றத்துடன் என்னைக் காட்சிப்படுத்திக்கிறேன். என் அண்ணன் குடும்பம் சென்னையில இருக்கிறதால, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னை வருவேன். பீச், கோயில், ஹோட்டல்னு பிடிச்ச இடங்களுக்குப் போவோம். எங்க வீட்டுல எல்லோருக்கும் நம்ம தமிழ்நாட்டு டிரெடிஷனல் உணவுகள் பிடிக்கும். வட இந்திய வாழ்க்கைமுறைக்கு மாறிட்டாலும், தமிழ் மக்கள் மேல எனக்கு நிறைய அன்பு உண்டு” என்று இனிமையான தமிழில் உவகையுடன் விடைபெற்றார்.

****

தமிழ் சினிமாவைத் தவிர்த்தது ஏன்?

எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட அப்போதைய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரும் நடிக்க அழைப்பு விடுத்தும், அதையெல்லாம் ஏற்காததன் காரணம் குறித்தும் பேசினார் ஹேம மாலினி. “சவுத்லேருந்து எக்கச்சக்க பட வாய்ப்புகள் எனக்கு வந்துச்சு. ஓய்வில்லாம இந்திப் படங்கள்ல நடிச்சு கிட்டிருந்ததாலயும், மற்ற மொழிகள்ல நடிச்சா அப்போ பாலிவுட்டுல எனக்கிருந்த ‘டிரேட் மார்க்’ குறைஞ்சுடும்னு நினைச்சதாலும் மற்ற மொழிகள்ல நடிக்க ஆர்வம் காட்டலை. ‘வெண்ணிற ஆடை’ பட நிராகரிப்புதான் இந்தியா முழுக்க என்னை பிரபலமாக்கியது. அதனால, ஸ்ரீதர் சார் மேலிருந்த வருத்தத்தை மறந்து, பிற்காலத்துல, அவர் இயக்கிய ‘கேரி சால்’ படத்துல ஜீதேந்திராவுக்கு ஜோடியா நடிச்சேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism