Published:Updated:

`மூடப்பட்ட மதுக்கடைகள்; அதிக மன உளைச்சல்’ - தூக்க மாத்திரைகளை உண்ட நடிகை மனோரமாவின் மகன்

மனோரமா மகன்
மனோரமா மகன்

மதுக்கடைகள் மூடப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்து அனைவரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளது கொரோனா வைரஸ். இதன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்தியாவிலும் இதே நிலையே தொடர்கிறது. அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி பலர் வெளியில் திரிந்தாலும் காவலர்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காகவே அனைத்து ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத்தளங்கள், சினிமா தியேட்டர்கள், பெரிய கடைகள், மதுபானக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேல் கூறப்பட்டுள்ளவற்றில் எது இல்லாமலும் மக்களால் இருந்துவிட முடிகிறது. ஆனால், மது இல்லாமல் முழுமையாக ஒரு மாதத்தைக்கூட கடக்க முடியவில்லை. மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் கள்ளச் சாராயம் விற்பனை தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் போலி போதைக்கு ஆசைப்பட்டு கையில் கிடைப்பதைக் குளிர்பானத்தில் கலந்து குடித்தும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதைத் தடுக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மனோரமா
மனோரமா

இந்நிலையில், மறைந்த நடிகை மனோரமாவின் மகன் மது கிடைக்காததால் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உண்டுள்ளார். தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா. நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்திலும் நடித்து அசத்தி, பெண் நடிகைகளில் 1,000-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் என்ற பெரும் பெருமை பெற்றவர். இவர் 2015-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மனோரமாவின் மகன் 46 வயதான பூபதி சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்துள்ளார் இருந்தும் அது பெரிதாக இவருக்கு அடையாளம் கொடுக்கவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார் பூபதி. இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை மோசமாகியுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் பூபதியைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாத்திரை
மாத்திரை
மாதிரி புகைப்படம்

இந்தத் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவலர்கள் நடத்திய விசாரணையில், மது கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த பூபதி நன்கு தூங்க வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனக் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூபதி தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு