``வாட்டர் பாட்டில், தலையணை, நாற்காலிய வச்சு ஜிம் உருவாக்கிட்டேன்!" - சாக்ஷி அகர்வால்

`பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமான சாக்ஷிக்கு, அதன் பிறகு ரஜினியின் 'காலா', அஜித்தின் `விஸ்வாசம்' படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவரின் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றவர்களுக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கும். ``அதுதான் என் நோக்கமும்'' என்கிறார் சாக்ஷி.
`பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமான சாக்ஷிக்கு, அதன் பிறகு ரஜினியின் 'காலா', அஜித்தின் `விஸ்வாசம்' படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஓடிடியில் இவர் நடித்த 'குட்டி' படம் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த `டெடி', விரைவில் ரிலீஸாக இருக்கும் `சிண்ட்ரெல்லா' என பிஸியாக இருக்கிறார் சாக்ஷி.

``தயாராகிட்டு இருக்கும் `புரவி’ படத்துல ஒரு போராளியா நடிச்சிட்டு இருக்கேன். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கு. அந்த விவரங்களை அப்புறமா சொல்றேன்'' என்றவர், கொரோனா முடக்கத்தில் அனைவரும் வீட்டிலேயே அடைந்துகிடந்தபோது, தான் தன் வீட்டில் ஒரு புது முயற்சியை செய்தது பற்றிச் சொல்கிறார்.
``கொரோனா காலம் எல்லாரையும் போலவே எனக்கும் மிகப் பெரிய சவாலா இருந்தது. ஷூட்டிங் எல்லாம் கேன்சலாகி, வீட்டைவிட்டு வெளிய கால்வைக்க முடியாம ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனேன். குறிப்பா, ஜிம்க்கு போக முடியாம ஆனப்போ, வொர்க்அவுட் பண்றதுக்கான வழிகளைத் தேடினேன். ஏன்னா, எனக்கு உடற்பயிற்சில ரொம்ப ஆர்வம், அதை ஸ்கிப் பண்றதை மனசு ஏத்துக்கல.
என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வீட்ல இருக்கும் வாட்டர் பாட்டில், தலையணை, நாற்காலி போன்ற பொருள்களை வெச்சே உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பிச்சேன். அதையெல்லாம் என் சோஷியல் மீடியாவில் போஸ்ட் பண்ணப்போ அவ்ளோ வரவேற்பு கிடைச்சது. சிலர் என்னை மாதிரியே அவங்க வீட்ல இருக்கக்கூடிய பொருள்களை வெச்சு உடற்பயிற்சி செய்து, அந்தப் போஸ்ட்கள்ல என்னை டேக் செய்திருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது'' என்பவர், தன் சேவை பக்கம் பற்றியும் செல்கிறார்.

``கடந்த மூணு வருஷமாவே ஆதரவற்றங்களுக்கான உணவு உதவிகளை என்னால முடிஞ்ச அளவுல செய்துட்டு வர்றேன். இந்த வருஷ காதலர் தினத்தை, கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற `நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' காப்பகத்துல கொண்டாடினேன். உண்மையிலேயே மனசுக்கு நிறைவா இருந்தது. இதேபோல, போன வருஷ காதலர் தினத்தை, ஹெச்.ஐ.வி நோயால பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் வளரும் ஒரு காப்பகத்துல கொண்டாடினேன். வாழ்க்கை, மத்தவங்களுக்காக ஒரு விஷயத்தைச் செய்யும்போது எவ்ளோ அழகாகுது என்பதை இதுபோன்ற தருணங்கள் எனக்கு உணர்த்திட்டே இருக்கு. எவ்ளோ சம்பாதிச்சாலும், இதுபோன்ற சந்தோஷம், திருப்தி கிடைக்காது'' என்கிறார் சாக்ஷி.
- ஆனந்தி ஜெயராமன்