Published:Updated:

``அவர் ஒரு ஜென்டில்மேன்!'' - நடிகர் ஶ்ரீகாந்த்தின் முதல்பட நாயகி `வெண்ணிற ஆடை' நிர்மலா

``செட்ல எல்லோரும் `என்னப்பா நிர்மலாவை லவ் பண்றியா'ன்னு கிண்டல் பண்ணிட்டிருந்தாங்க. அதுக்கு ஶ்ரீகாந்த்...''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாமானியர்களின் மரணமென்பது அவர்களுடைய சொந்த, பந்தங்களின் துக்கம் மட்டுமே. கலைஞர்களின் மரணமோ அவர்களின் திறமையை ரசித்த, நேசித்த சமூகத்தின் துக்கம். நடிகர் ஶ்ரீகாந்த்தின் மரணமும் அப்படிப்பட்டதொரு பெருந்துக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில், மறைந்த அக்கலைஞனைப் பற்றிப் பேசுவது மட்டுமே அவரை நேசித்த பலருக்கும் ஆறுதலாக இருக்கும். ஶ்ரீகாந்த்துடன் முதல் படத்தில் நாயகியாக நடித்த `வெண்ணிற ஆடை' நிர்மலாவிடம் பேசினோம்.

ஶ்ரீகாந்த்
ஶ்ரீகாந்த்
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ, ரஜினியின் முதல் வில்லன்… நடிகர் ஶ்ரீகாந்த் மறைந்தார்!

``சினிமாவுல என்னோட முதல் கதாநாயகன் ஶ்ரீகாந்த். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா ஜென்டில் மேன். இதுக்கு சில உதாரணங்கள்கூட என்னால சொல்ல முடியும். முதல் படத்துல நடிக்கிறப்போ, எனக்கு டான்ஸ் மட்டும்தான் தெரியும். நடிப்புப் பத்தி அவ்வளவா தெரியாது. என்னோட முதல் சீனும் ஶ்ரீகாந்த் கூடதான். நான் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடிக்கணும். அப்படிப் பிடிக்கிறப்போ, அவரும் என்னை அணைக்கணும். அணைக்கிறப்போ என் முதுகுல பளார்னு அடிச்சிட்டார். எதிர்பாராத அடி; கூடவே நல்ல வலி வேற. `இவ்ளோ ஃபோர்ஸாவா நடிப்பே'ன்னு கேட்டு செட்ல இருந்தவங்க எல்லாரும் சிரிச்சிட்டாங்க. எனக்கும் சிரிப்பு வந்திடுச்சு.

முதல் நாள் ஷூட்டிங் அப்போ என்னையும் அவரையும் செட்ல எல்லோரும் `என்னப்பா நிர்மலாவை லவ் பண்றியா'ன்னு கிண்டல் பண்ணிட்டிருந்தாங்க. ஶ்ரீகாந்த் உடனே `எனக்கு ஏற்கெனவே கல்யாணமாயிடுச்சு. எனக்கு அந்த மாதிரி ஐடியாவெல்லாம் இல்லை'ன்னு உடனே சொன்னார். அந்த நேரம் அவர் மேல அவ்ளோ மரியாதை ஏற்பட்டுச்சு எனக்கு.

ரஜினியுடன் ஶ்ரீகாந்த்
ரஜினியுடன் ஶ்ரீகாந்த்
``திடீர்னு வரும் போன்; அதிர்ச்சியா அவர் சொன்ன விஷயம்..!" - கே.ஆர்.விஜயாவின் ஶ்ரீகாந்த் நினைவுகள்

`வெண்ணிற ஆடை' படத்துல நான் உட்பட பல பேர் புதுமுகம்கிறதால, எல்லாருக்கும் இடையில நட்பு வளரணும்னு டைரக்டர் முதற்கொண்டு எல்லோரும் சேர்ந்து ஏதாவது கேம் விளையாடுவோம். அதுல சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு, யார் எந்த சிம்பல் மேல பெட் கட்டுறாங்கன்னு ஒரு கேம். அதை விளையாடுறப்போ, யார் கையில என்ன சிம்பல் அதிகமா இருக்கோ அவங்க அதோட பேரைச் சொல்லி கம் ஹார்ட்ஸ், கம் கிளாவர்னு கத்தணும். அப்போ, ஶ்ரீகாந்த் இந்தச் சீட்டை எடுத்துக்கோன்னு ஃபிரெண்ட்லியா ஐடியாவெல்லாம் சொல்வார்.

ஶ்ரீகாந்த் கூட `அவள்'னு ஒரு படத்துல நடிச்சேன். அதுல அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ற மாதிரி ஒரு சீன். அந்தக் காட்சியில நடிக்கிறப்போ கொஞ்சம் கூட அருவருப்பு வராதபடிக்கு நடிச்சார். அந்தளவுக்கு அவர் ஒரு ஜென்டில்மேன். மிஸ் யூ ஶ்ரீகாந்த்'' என்கிறார் வருத்தமுடன் வெண்ணிற ஆடை நிர்மலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு