பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடித்திருக்கும் 'ரன்வே 34 (Runway 34)' படம் வரும் ஏப்ரல் 29-ல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பொதுவாக ரமலான் பண்டிகை அன்று சல்மான் கானின் படங்கள் வெளியாவதுதான் வழக்கம். 'ராதே - யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்', 'பாரத்', 'சுல்தான்' மற்றும் 'டியூப்லைட்' போன்ற சல்மான் கானின் படங்கள் ரமலானை முன்னிட்டு வெளியான படங்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சல்மான் கானின் படம் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது மிஸ் ஆனது. இதையடுத்து அடுத்த ரமலானுக்கு நிச்சயம் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார் சல்மான் கான்.
இந்நிலையில் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், சல்மான் கானிடம் தனது 'ரன்வே 34' படத்தை ரமலான் அன்று வெளியிடுவதில் சல்மான் கானுக்குப் பிரச்னை ஏதும் உள்ளதா என்று போனில் அழைத்து ஆலோசனைக் கேட்டுள்ளார். மேலும் சல்மான் கான் தன்னிடம் கூறியதை பகிர்ந்து கொண்டுள்ளார் அஜய் தேவ்கன்.
இது பற்றி சல்மான் கானிடம் பேசிய அஜய் தேவ்கன், "'ஏப்ரல் 29, ரமலானை முன்னிட்டு 'ரன்வே 34' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறேன். அதில் உங்களுக்கு பிரச்னை ஏதும் உள்ளதா?' என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த சல்மான், 'கவலைப்படாதே, அந்த வாரம் நான் வரமாட்டேன். அடுத்த வருடம் ரமலான் அன்று வருவேன்' என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில் "சகோதரர் அஜய் தேவ்கனை ஈத் பண்டிகையை எங்களுடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த ஈத் பண்டிகையை நாங்கள் கொண்டாடுவோம், அதோடு சேர்த்து அவரின் 'ரன்வே 34' படத்தையும் பார்ப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
இது போன்ற பண்டிகை வெளியீடுகள் குறித்துப் பேசிய அஜய் தேவ்கன், "படங்கள் நன்றாக ஓடுவதற்கு பண்டிகைகள் உதவுகின்றன. ஏனெனில் பண்டிகை நாள்கள் விடுமுறை நாள்களாக உள்ளன. பண்டிகைகளில் இருப்பவர்கள் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க விரும்புகிறார்கள். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். சினிமா எல்லாமே கொண்டாட்டங்களோடும் தொடர்புடையது" என்று கூறியுள்ளார்.
அஜய் தேவ்கன், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'போலா' (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ளது.